×

சருமத்தைப் பாதுகாக்கும் வால்நட் எண்ணெய்!

நன்றி குங்குமம் டாக்டர்

சருமப் பராமரிப்பு என வரும்போது இயற்கை நமக்கு ஏராளமான பொக்கிஷங்களை அள்ளித் தந்துள்ளது, அதில் ஒன்றுதான் வால்நட் எண்ணெய். அந்தவகையில் வால்நட் எண்ணெய் ஆரோக்கியமான சருமத்தை பெற சிறந்த முறையில் உதவுகிறது. இதில் அடங்கியுள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஊட்டமளிக்கும் பண்புகள் பல நூற்றாண்டுகளாக சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பல்வேறு தோல் பிரச்னைகளை எதிர்த்துப் போராடவும் பயன்படுத்தப்படுகிறது.

வால்நட்டில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஈ, வைட்டமின் பி உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. இவை சரும ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதை சருமத்துக்குப் பயன்டுத்துவதன் மூலம் கீழ்வரும் பயன்களைப் பெறலாம்.சருமத்துக்குப் போதிய அளவு நீர்ச்சத்து குறையும்போது சருமத்திற்கு இன்னும் அதிகப்படியான மாய்ஸ்ச்சரைஸர் தேவைப்படுகிறது. அப்போது வால்நட் எண்ணெயை பயன்படுத்தும்போது அது சருமத்துக்குப் போதிய மாய்ஸ்ச்சரைத் தருவதால் சரும வறட்சியையும் அதனால் ஏற்படும் சரும அரிப்பு மற்றும் சரும எரிச்சலைக் குறைக்கச் செய்யும்.

வால்நட் எண்ணெயில் வைட்டமின் பி5 மற்றும் பிற ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் அதிக அளவில் இருக்கின்றன. இவை சருமத்தில் ஏற்படும் மெல்லிய கோடுகள், சுருக்கங்கள் ஆகியவற்றைப் போக்கி வயதான தோற்றத்தைக் குறைக்கச் செய்கிறது. அதோடு சருமத்துக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களும் நிறைந்திருப்பதால் கொலாஜன் உற்பத்தியைத் தூண்டி சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவி செய்கிறது.வால்நட் எண்ணெயை தினமும் முகத்தில் தடவி, கீழிருந்து மேல் நோக்கியவாறு வட்டவடிவில் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இதனால் சருமத்தில் எண்ணெய் ஊடுருவி, சுருக்கங்களை நீக்கி, இளமை தோற்றத்தை மீட்டுத்தரும்.

பெண்கள் பலருக்கும் பெரிய பிரச்சினையாக இருப்பது, கண்களுக்குக் கீழே உருவாகும் கருவளையம்தான். இதற்கு வால்நட் எண்ணெய் சிறந்த தீர்வாகும். இதை கண்களைச் சுற்றித் தடவி மென்மையாக மசாஜ் செய்து வந்தால், சில நாட்களிலேயே கருவளையம் மறையும். இதில், உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள் சருமத்தின் இளமையை தக்கவைக்கும் தன்மை கொண்டவை.

குளிப்பதற்கு முன்பு வால்நட் எண்ணெய்யை இளம் சூட்டில் உடலில் தடவிக் குளித்தால், பூஞ்சைத் தொற்றால் ஏற்படும் அரிப்பு, சிரங்கு போன்ற பாதிப்புகள் குறையும். வால்நட் எண்ணெய்யை தலைப்பகுதியில் உள்ள சருமத்தில் நன்றாகத் தடவி மசாஜ் செய்து, அரைமணி நேரம் கழித்து தலைக்கு குளித்துவந்தால் பொடுகு, அரிப்பு, எரிச்சல் போன்ற பிரசினைகள் நீங்கும்.வால்நட் எண்ணெயை தினமும் தலைக்குத் தடவி வந்தால், தலைமுடி பளபளக்கும். மண்டையோட்டில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்கி, முடி வளர்ச்சியையும் தூண்டும்.

தொகுப்பு: ஸ்ரீ

The post சருமத்தைப் பாதுகாக்கும் வால்நட் எண்ணெய்! appeared first on Dinakaran.

Tags : Dr. Nature ,Dinakaran ,
× RELATED குளிர் காலத்தில் தலையில் எண்ணெய் தடவுங்கள்!