பெரியார் சிலையை உடைப்பது குறித்து பேச்சு பாஜ பிரமுகர் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீதான வழக்கு ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: இந்து முன்னணி அமைப்பின் இந்துக்களின் உரிமை மீட்புப் பிரசார பயண நிறைவு விழாவையொட்டி சென்னை மதுரவாயலில் கடந்த 2022 ஆகஸ்ட் 1ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வாசலில் கடவுளை கொச்சைப்படுத்தும் வகையிலான வாசகங்களுடன் வைக்கப்பட்டிருக்கும் சிலை உடைக்கப்படும் நாள்தான் இந்துக்களின் எழுச்சி நாள் என்று பேசியிருந்தார்.

இதுதொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலர் குமரன் அளித்த புகாரின் அடிப்படையில், கலகம் செய்ய தூண்டிவிடுதல், அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் கனல் கண்ணனுக்கு எதிராக சென்னை சைபர் க்ரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கனல் கண்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், கோயிலுக்கு எதிரில் ஆத்திகர்கள் குறித்து சிலை பீடத்தில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் காரணமாகவே மனுதாரர் பேசியிருக்கிறார் எனக் கூறி கனல் கண்ணன் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

The post பெரியார் சிலையை உடைப்பது குறித்து பேச்சு பாஜ பிரமுகர் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீதான வழக்கு ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: