×
Saravana Stores

ஸ்ட்ரீட் ஃபுட்ஸ்!

நன்றி குங்குமம் தோழி

ஸ்ட்ரீட் ஃபுட்ஸ் எப்போதுமே கொண்டாட்டத்திற்கு உரியவை. இருள் கவ்வ துவங்கும் நேரத்தில் தான் இவர்கள் கடையை திறப்பார்கள். சூடாகவும் புதுவிதமாகவும் இவர்கள் பரிமாறும் உணவுகள் தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. ஒரு தெரு முழுக்க பல்வேறு உணவுகள் கிடைப்பதால், மக்கள் இதனை விரும்பி சாப்பிட வருகிறார்கள். இதுபோன்ற உணவகங்கள் நிறைந்த தெருக்கள் சென்னை, தமிழ்நாடு மட்டுமில்லை வெளிநாடுகளிலும் பிரபலம்.

இந்த உணவுகள் பெரும்பாலும், மக்களின் உணவு கலாச்சாரத்தை பிரதிபலிக்கக்கூடியவை. மக்கள் அன்றாடம் சாப்பிடும் உணவுப் பொருட்களை வைத்து புது சுவையில் செய்யப்படும் உணவுகள். புது சுவையில் இருப்பதால், இந்த உணவினை சுவைக்க தனிப் பட்டாளம் இருக்கிறது. உணவினைப் பொறுத்தவரை புதிதாக சாப்பிட வேண்டும் என்ற தேடல் அதிகம் இருக்கும். நம்முடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது இது போன்ற தெரு உணவுகள் மட்டும்தான்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை கீரை வடை, இட்லி சாம்பார், தேங்காய் சொதி, வாழைப்பழ இனிப்பு ரொட்டி, ஆமை வடை, தவளை வடை, கல்யாண முருங்கை பூரி, ஜிகர்தண்டா, புரோட்டா, பிரியாணி என உணவுகளின் பட்டியலை அடுக்கிக் கொண்டே போகலாம். நம்முடைய அன்றாட உணவுகள் மட்டுமில்லாமல் பர்மாவின் முட்டை மசால், அத்தோ, பேஜோ, மெய்ங்கோ… இலங்கை உணவான ஆப்பம், பொல் சம்பல், சீனிச் சம்பல், சிலோன் ரொட்டி… தவிர, சாட் உணவுகளான பானிபூரி, சமோசா என தமிழகத்தை சாராத உணவு வகைகளும் மக்களிடம் பிரபலமடைந்து வருகிறது. அவற்றை பற்றிய தொகுப்பு தான் இந்த கட்டுரை.

*ஆலு டிக்கி

உருளைக்கிழங்கு பஜ்ஜி என்று மொழி பெயர்க்கப்பட்ட இந்த உணவு தெருக் கடைகள், சாட் உணவகத்தில் மிகவும் ஃபேமஸ். இந்தியில், ஆலு என்றால் ‘உருளைக்கிழங்கு’ மற்றும் டிக்கி என்றால் ‘பஜ்ஜி அல்லது கட்லெட்.’ வேகவைத்த மற்றும் மசித்த உருளைக்கிழங்கு, மசாலா போன்றவற்றில் தயாரிக்கப்படும். இந்த உருளைக்கிழங்கு பஜ்ஜி, இனிப்பு மற்றும் புளி சட்னி, கொத்தமல்லி சட்னியுடன் சிறிது பொடியாக நறுக்கப்பட்ட வெங்காயத்துடன் சேர்த்து பரிமாறப்படும்.

*லிட்டி சோக்கா

பீகாரின் பிரபலமான தெரு உணவு. லிட்டி என்பது ஒரு முழு கோதுமையில் தயாரான மாவு உருண்டை. இதனுடன் வறுத்த கொண்டைக்கடலை, கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, தக்காளி, மசாலாக்கள் அனைத்தும் சேர்த்து தயாரிக்கப்படும் கிரேவியினை சோக்கா என்கிறார்கள். சோக்காவினை பைங்கான் மற்றும் தக்காளியில் செய்யலாம். பைங்கான் சோக்கா என்பது பெரிய உருண்டை கத்தரிக்காயை தீயில் வாட்டி அதனுள் வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாயை சேர்த்து தயாரிக்கலாம். அதுவே கத்தரிக்காய்க்கு பதில் தக்காளி சேர்த்தால் அது தக்காளி சோக்கா.

*கச்சி டபேலி

கச்சி டபேலி அல்லது ‘டபுள் ரொட்டி’ மிகவும் பிரபலமான குஜராத் உணவு. காரமாகவும், கசப்பாகவும் இருக்கும். உருளைக்கிழங்கு கொண்டு இந்த உணவை தயாரிக்கிறார்கள். ரொட்டியுடன் உருளைக்கிழங்கு, மாதுளை விதைகள், வறுத்த வேர்க்கடலை, சேவ், புளி மற்றும் கொத்தமல்லி சட்னி ஆகியவற்றுடன் மசாலாப் பொருட்களையும் சேர்த்து தனித்துவமான சுவையில் இதை தயாரிக்கிறார்கள். இதில் உள்ள சிறப்பே அதில் சேர்க்கப்படும் டபேலி மசாலா. ஒவ்வொரு முறை கடித்து சாப்பிடும் போதும் வெவ்வேறு சுவையை தரும்.

*மோமோஸ்

தெரு உணவுகளின் பிறப்பிடம் என்றால் அது தில்லிதான். அங்கு மிகவும் பிரபலமானது இந்த மோமோஸ். திபெத்திய உணவான மோமோஸ், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் பிரபலமடைந்து வருகிறது. தில்லியில் மோமோஸ் ஸ்டால் இல்லாத தெருவைக் காண முடியாது. கொழுக்கட்டை வடிவத்தில் இருக்கும் இந்த மோமோஸை மைதா மாவு அல்லது கோதுமையில் தயாரிக்கிறார்கள்.

கொழுக்கட்டை மாவு போல் உருட்டி அதனுள் இறைச்சி, உருளைக்கிழங்கு அல்லது பன்னீர் என நமக்குப் பிடித்த கலவையினை உள்ளே ஸ்டப் செய்து ஆவியில் வேக வைத்து தருவார்கள். இந்த மோமோஸ்களை கொழுக்கட்டை போல் வேகவைத்தும் சாப்பிடலாம் அல்லது தந்தூரி ஸ்டைல், வறுத்தும் தயாரிக்கலாம். இதனை அப்படியே சாப்பிடலாம். சிலர் சூப்பிலும் சேர்த்து பரிமாறுகிறார்கள்.

*துண்டே கபாப்

லக்னோவின் சிறந்த ஸ்ட்ரீட் உணவு. வாயில் போட்டவுடன் உடனடியாக கரைந்து போவதுதான் இதன் ஸ்பெஷாலிட்டி. இந்த உணவிற்கு ஒரு சுவாரஸ்யமான வரலாறு உள்ளது. 17ம் நூற்றாண்டில் இருந்த நவாப், வயது முதிர்ந்தவராகவும் பற்களை இழந்தவராகவும் இருந்தார். உணவுப்பிரியரான அவருக்குப் பிடித்தமான இறைச்சி வகை உணவுகளை சாப்பிட முடியவில்லை. அவர் சாப்பிடக்கூடிய உணவுகளை தயாரிப்பது குறித்து உணவுப் போட்டி நடைபெற்றது.

அதனை அறிந்த செஃப் ஹாஜி முராத் அலி, இறைச்சியை துண்டு துண்டாக நறுக்கி, வாயில் போட்டதும் கரையும் வகையில் மென்மையாக கபாப் ஒன்றை தயாரித்தார். அப்படி தயாரான இந்த உணவுதான் இந்த துண்டே கபாப். பிறகு ஹாஜி முராத் அலி கடை ஒன்றை அமைத்து விற்பனை செய்தார். அந்த உணவுதான் தற்போது லக்னோவின் சிறந்த ஸ்ட்ரீட் உணவாக உள்ளது.

*அக்கி ரொட்டி

கர்நாடகாவின் பாரம்பரிய காலை உணவு. நறுக்கிய வெங்காயம், கேரட், கறிவேப்பிலை, தேங்காய் துருவல், கொத்தமல்லி தழை, உப்பு, சீரகம், பச்சை மிளகாய், அரிசி மாவுடன் நன்கு சேர்க்கப்பட்டு இந்த ரொட்டி தயாரிக்கப்படுகிறது.

தொகுப்பு: மா.வினோத்குமார்

The post ஸ்ட்ரீட் ஃபுட்ஸ்! appeared first on Dinakaran.

Tags : kumkum doshi ,Dinakaran ,
× RELATED பத்தென்றாலும் அது தரமா இருக்கணும்!