திடீரென கொட்டித் தீர்த்த மழையால் தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி பாதிப்பு


தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் திடீரென பெய்த மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. பகல் நேரங்களில் மக்கள் வெளியில் செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்கள். இந்நிலையில் தமிழகத்தின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோர பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு மேல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னல், பயங்கர காற்றுடன் மழை பெய்தது. சுமார்

1 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. குறிப்பாக காயல்பட்டினம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், ஆழ்வார்திருநகரி, கயத்தாறு பகுதிகளில் மிகக் கனமழை பெய்தது. மழை பெய்தபோது சூறாவளி காற்றும் வீசியதால், பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் ஆங்காங்கே மரக்கிளைகள் முறிந்து கிடந்தன. குப்பைகளை வாரி இறைத்து சாலையில் தள்ளியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு இடையே வாகனங்களை ஓட்டி சென்றனர். சூறாவளி காற்று காரணமாக திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான வாழை மரங்களும் சேதமடைந்தன. சாத்தான்குளம் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள முருங்கை மரங்களில் பிஞ்சு காய்கள் மற்றும் பூக்கள் மொத்தம், மொத்தமாக உதிர்ந்து விழுந்தன. பல இடங்களில் மின்சார வயர்களும் துண்டிக்கப்பட்டன. இதனால் மாவட்டத்தின் பல இடங்களில் நேற்று முன்தினம் இரவில் மின்சாரம் தடைபட்டது.

இந்த மழை காரணமாக தூத்துக்குடி மாநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியது. உப்பளங்களிலும் மழைநீர் தேங்கியதால் உப்பு உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டன. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று காலை 6.30 மணி வரையில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): தூத்துக்குடியில் 20, ஸ்ரீவைகுண்டம் 64, திருச்செந்தூர் 55, காயல்பட்டினம் 93, குலசேகரன்பட்டினம் 18, சாத்தான்குளம் 26, கோவில்பட்டி 8, கழுகுமலை 14, கயத்தாறு 67, கடம்பூர் 40, எட்டயபுரம் 5.20, விளாத்திகுளம் 20, சூரங்குடி 6, ஓட்டப்பிடாரம் 46, மணியாச்சி 65, வேடநத்தம் 26, கீழஅரசடி 10 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

The post திடீரென கொட்டித் தீர்த்த மழையால் தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: