மொபட் மீது தனியார் பேருந்து மோதியதில் சட்ட கல்லூரி மாணவி தலை நசுங்கி பரிதாப பலி: திருக்கழுக்குன்றத்தில் சோகம்

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அருகே மொபட் மீது தனியார் பேருந்து மோதியதில், சட்ட கல்லூரி மாணவி தலை மற்றும் உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார். செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த முள்ளி கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் என்பவரின் மகள் நிஷாந்தி (23). சென்னை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள தனியார் சட்டக் கல்லூரியில் முதலாமாண்டு சட்டப் படிப்பு பயின்று வந்தார்.

இவர், நேற்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு செல்வதற்காக தனது மொபட்டில், செங்கல்பட்டு நோக்கி சென்றுக்கொண்டிருந்தார். திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே குறுகிய வளைவு பகுதியில் சென்றபோது, செங்கல்பட்டில் இருந்து திருக்கழுக்குன்றம் நோக்கி அதிவேகமாக வந்த தனியார் பேருந்து சட்டக்கல்லூரி மாணவி சென்ற மொபட் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில், தலை மற்றும் உடல் நசுங்கி மாணவி நிஷாந்தி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த திருக்கழுக்குன்றம் போலீசார், நிஷாந்தியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

* குறுகிய வளைவால் விபத்து அதிகரிப்பு
விபத்து நடந்த அந்த குறுகிய வளைவு பகுதி அருகே அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் தாலுகா அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் இயங்கி வருவதால், மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அப்பகுதியில் அதிகமாக சென்று வருகின்றனர். இதனால், குறுகிய வளைவில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மொபட் மீது தனியார் பேருந்து மோதியதில் சட்ட கல்லூரி மாணவி தலை நசுங்கி பரிதாப பலி: திருக்கழுக்குன்றத்தில் சோகம் appeared first on Dinakaran.

Related Stories: