மத்திய கிழக்கு நாடுகளில் உச்சகட்ட போர் பதற்றம்; ஹமாஸ், ஹிஸ்புல்லாவை தொடர்ந்து ஹவுதி மீதும் ‘அட்டாக்’: இஸ்ரேலின் அதிரடி நடவடிக்கையால் தீவிரவாத அமைப்புகள் அலறல்

பெய்ரூட்: ஹமாஸ், ஹிஸ்புல்லாவை தொடர்ந்து ஹவுதி மீதும் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி உள்ளன. மேலும் லெபனானிற்குள் புகுந்து தரைவழி தாக்குதல் நடத்த பீரங்கிகள் குவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலின் அடுத்தடுத்த நடவடிக்கைக்கு அமெரிக்கா முழு ஆதரவு தெரிவித்துள்ளதால், மத்திய கிழக்கு நாடுகளில் உச்சகட்ட போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தின் காசா முனையில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே நடைபெற்று வரும் போர் ஓராண்டை எட்டவுள்ளது. அதேவேளையில் இஸ்ரேலும் லெபனானும் எல்லையைப் பகிர்ந்து வரும் நிலையில், ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேலுடன் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். எல்லையில் இஸ்ரேலும், ஹிஸ்புல்லாக்களும் நாள்தோறும் மோதலில் ஈடுபட்டு வருவதால், அங்கு வசிக்கும் இரு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து உள்ளனர். நூற்றுக்கணக்கான லெபனான் மக்கள் உயிரிழந்துள்ளனர். சமீபத்தில் லெபனானில் பேஜர் கருவிகள் திடீரென வெடித்துச் சிதறின. இந்த சம்பவம் நடைபெற்ற மறுநாள், அந்நாட்டில் வாக்கி டாக்கிகள், சூரிய ஒளி மின்சார கருவிகள் வெடித்துச் சிதறின. இந்தத் தாக்குதல்களில் ஹிஸ்புல்லா அமைப்பினர் உள்பட 39 பேர் பலியாகினர். சுமார் 3,000 பேர் காயமடைந்தனர். தொழில்நுட்ப வழியில் இந்த நூதன தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியதாக லெபனான் குற்றம்சாட்டியது. இந்தத் தாக்குதல்களுக்குப் பிறகு இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லாக்கள் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தெற்கு லெபனானில் தாக்குதல் மேற்கொண்ட இஸ்ரேல், லெபனானின் கிழக்கு எல்லைக்கும் தாக்குதலை விரிவுபடுத்தி உள்ளது.

இந்நிலையில், லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்ட துல்லிய வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பை தோற்றுவித்தவர்களில் ஒருவரும், அந்த அமைப்பின் தலைவருமான ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்தார். அவருக்கு பாதுகாப்பாக இருந்த 30க்கும் மேற்பட்டோரும் கொல்லப்பட்டனர். இதே தாக்குதலில் ஈரானின் துணை ராணுவப் புரட்சி காவல் படையின் துணைத் தளபதி அப்பாஸ் நில்ஃபோருஷானும் கொல்லப்பட்டார். ஹசன் நஸ்ரல்லா கொலைக்குப் பதிலடி அளிக்கும் வகையில், இஸ்ரேலுக்கு எதிராக கடுமையாக எதிர்வினையாற்ற வேண்டும் என்று ஈரானின் தேசிய பாதுகாப்பு நாடாளுமன்றக் குழு வலியுறுத்தியது. கடந்த சில நாள்களில் லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் 87 சிறார்கள், 156 பெண்கள் உள்பட 1,030 பேர் உயிரிழந்தனர் என்று லெபனான் சுகாதாரத் துறை தெரிவித்தது. லெபனானின் தெற்கு புறநகர்ப் பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 105 பேர் கொல்லப்பட்டனர். ராணுவ ஜெட் விமானங்கள் மூலம் இடைவிடாமல் குண்டுகளை இஸ்ரேல் ஏவி வருவதால், லெபனான் திணறி வருகிறது. இஸ்ரேல் படைகள் தங்களது ராணுவ உபகரணங்கள் மற்றும் டாங்கி போன்ற போர் வாகனங்களுடன், லெபனானின் எல்லைக்கு அருகில் குவிக்கப்பட்டுள்ளன.

இதுவரை வான்வழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல், வரும் நாட்களில் தரைவழி தாக்குதலை நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே ‘பாப்புலர் ஃப்ரண்ட் ஃபார் லிபரேஷன் ஆஃப் பாலஸ்தீனம்’ என்ற ஆயுதம் தாங்கிய குழுவை சேர்ந்த மூன்று தளபதிகளும் கொல்லப்பட்டனர். இதற்கிடையே போரினால் பாதிக்கப்பட்ட ஏமனின் ஹொடைடா துறைமுகம் உட்பட ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி தீவிரவாத அமைப்பினரின் நிலைகள் மீது இஸ்ரேல் படைகள் வான்வழி தாக்குதல்களை நடத்தின. குறிப்பாக ஏமன் துறைமுக நகரமான ஹொடைடா, ராஸ் இசா துறைமுகம் மற்றும் மின் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புகளை குறிவைத்து இஸ்ரேல் படைகள் வான்வழி தாக்குதல்களை நடத்தியது. ஏற்கனவே காசாவில் ஹமாஸ் அமைப்பினரை ஒடுக்கிய இஸ்ரேல், கடந்த ஒரு வாரமாக லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாசுக்கும், ஹிஸ்புல்லாவுக்கும் ஆதரவாக செயல்பட்டு வந்த ஏமனின் ஹவுதி அமைப்பினர் மீதும் இஸ்ரேலின் பார்வை சென்றுள்ளது.

இந்த ஹவுதி அமைப்பினர் தான், அவ்வப்போது சர்வதேச நாடுகளின் சரக்கு கப்பல்களை கடத்தி பெரிய அளவில் தாக்குதல் நடத்தி வந்தனர். ஹவுதி கும்பலிடம் இருந்து அந்த கப்பல்களை மீட்ப
தற்கு சர்வதேச நாடுகள் பெரும் முயற்சிகளை எடுக்க வேண்டியிருக்கிறது. அதனால் ஹமாஸ், ஹிஸ்புல்லாவை தொடர்ந்து ஹவுதி மீதும் தனது தாக்குதல் நடவடிக்கையை இஸ்ரேல் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக நீடித்த பகை, மோசமான உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. ஹசன் நஸ்ரல்லாவின் மரணத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மத்திய கிழக்கு நாடுகளின் சில அமைப்புகள் ஒன்றாக கைகோர்த்து வருகின்றன. அதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இருந்தாலும் இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் ஆதரவளித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 

The post மத்திய கிழக்கு நாடுகளில் உச்சகட்ட போர் பதற்றம்; ஹமாஸ், ஹிஸ்புல்லாவை தொடர்ந்து ஹவுதி மீதும் ‘அட்டாக்’: இஸ்ரேலின் அதிரடி நடவடிக்கையால் தீவிரவாத அமைப்புகள் அலறல் appeared first on Dinakaran.

Related Stories: