சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயில் ரோப் கார் நிலையத்தில் பக்தர்கள் அலைமோதல்

*3 மணி நேரம் காத்திருந்து பயணம்

சோளிங்கர் : சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் உள்ள ரோப் கார் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் அமைந்துள்ள லட்சுமி நரசிம்மர் மலைக்கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோயில் 1305 படிகள் கொண்ட மலை மீது அமைந்துள்ளது. இங்கு தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பொதுவாக வெள்ளி. சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இக்கோயிலில் பக்தர்களின் வசதிக்காக ரோப்கார் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரோப்கார் தினமும் காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை இயக்கப்படுகிறது.

இந்நிலையில் புரட்டாசி மாதத்தில் கோயிலுக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்ததையடுத்து புரட்டாசி மாதத்தில் வரும் 5 வார சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும், காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ரோப்கார் இயக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் நரசிம்மர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அதேபோல் பக்தர்கள் மலை அடிவாரத்தில் உள்ள ரோப்காரில் நிலையத்திலும் திரண்டனர்.

இதனால் அங்கு கூட்டம் அலைமோதிய நிலையில், பக்தர்கள் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து ரோப்காரில் மலை கோயிலுக்கு சென்றுசுவாமி தரிசனம் செய்தனர். மேலும் ஒரு நாளைக்கு ஆயிரம் பக்தர்கள் மட்டுமே ரோப் காரில் செல்ல முடியும் என்பதால், ரோப் கார் நிலையத்தில் பல மணி நேரம் காத்திருந்தும் ரோப் காரில் செல்ல டிக்கெட் கிடைக்காத பக்தர்கள் படிகள் வழியாக மலைக்குச் சென்று சுவாமியை தரிசனம் செய்தனர்.

The post சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயில் ரோப் கார் நிலையத்தில் பக்தர்கள் அலைமோதல் appeared first on Dinakaran.

Related Stories: