குள்ளப்பகவுண்டன்பட்டியில் குடிநீர் தொட்டி மீண்டும் பயன்பாட்டிற்கு வருமா?

*பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கூடலூர் : தேனி மாவட்டம் கம்பம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குள்ளப்பகவுண்டன்பட்டி இந்திரா காலனியில் ஏற்கனவே உள்ள தற்போது பழுதடைந்து கிடக்கும் போர்வெல் குடிநீர் தொட்டியை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.குள்ளப்பகவுண்டன்பட்டி 1வது வார்டு இந்திரா காலனியில் 34 குடும்பங்களுக்கு மேல் குடியிருந்து வருகின்றனர்.

இந்தப் பகுதியில் குடிநீர் இணைப்பு இருந்தாலும், இவர்களின் பிறநீர் தேவைக்காக நிலத்தடி போர் மூலம் நீர் தொட்டி அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்நிலையில் நீர் தொட்டி தற்போது உடைந்து எவ்வித பயன்பாட்டும் இல்லாமல் உபயோகமற்று இருக்கிறது. மின் இணைப்புடன் உறிஞ்சி குழாய் (போர்) உள்ள நிலையில் நீரைத் தேக்கி வைக்கும் தொட்டி பழுதடைந்து அதில் நீரைத் தேக்கி வைக்க முடியாத நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதிவாசிகள் குடிநீர் தேவை அல்லாது பிற நீர்உபயோகத்திற்காக மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

குள்ளப்பகவுண்டன்பட்டி 1 -வது வார்டு கவுன்சிலர் பார்வதியிடம் இது குறித்து கேட்டபோது, ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் இது கோரிக்கை விடுத்துள்ளோம். இதை சரி செய்து கொடுத்தால் குடிநீர் தேவை அல்லாத பாத்திரம் கழுவ,குளிப்பதற்கு, துணி துவைப்பதற்கு உள்ளிட்ட அன்றாட நீர் தேவைகளுக்கும், விசேஷ நாட்களுக்கு நீர் தேவைகளுக்காகவும் மக்கள் பயன்படுத்திக் கொள்வார்கள்.தொட்டியில் நீர் தேக்கப்படுவதால் மின்சாரம் இல்லாத நேரத்திலும் மக்களுக்கு உபயோகமாக இருக்கும். எனவே உடனே உள்ளாட்சி நிர்வாகம் பழுதடைந்து கிடக்கும் இந்த நீர் தொட்டியை சரி செய்து மக்களுக்கு பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று கூறினார்.

The post குள்ளப்பகவுண்டன்பட்டியில் குடிநீர் தொட்டி மீண்டும் பயன்பாட்டிற்கு வருமா? appeared first on Dinakaran.

Related Stories: