திமுக-விசிக இடையே எந்த சலசலப்பும் இல்லை: திருமாவளவன் உறுதி


கோவை: திமுக-விசிக இடையே எந்த சலசலப்பும் இல்லை என்று திருமாவளவன் கூறினார். கோவை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது துணை முதல்வர் தொடர்பாக சர்ச்சையான கருத்தை ஆதவ் அர்ஜூன் எழுப்பியுள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்து திருமாவளவன் கூறும்போது, ‘‘திமுக-விசிக இரண்டு கட்சிகளுக்கும் இடையே எந்த சலசலப்பும் இல்லை. அதுபோல் உருவாக எந்த வாய்ப்பும் இல்லை. என்னுடைய ஊடக பக்கத்தில் பதிவான சின்ன வீடியோ ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற கருத்தை விவாதத்திற்கு பலரும் எடுத்துக்கொண்டனர். அந்த விவாதம் மேலும், மேலும் விவாதத்திற்கு இடம் அளித்துள்ளது.

அதனால் திமுக, விசிக இடையில் எந்த சிக்கலும் எழாது, எழுவதற்கு வாய்ப்பில்லை’’ என்றார். ஆதவ் அர்ஜூன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று கேட்டபோது, ‘‘இது தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை செய்து வருகிறோம். உட்கட்சி விவகாரங்களில் பொதுச்செயலாளர் மற்றும் துணை பொதுச்செயலாளர் ஆகியோருடன் தொலைபேசி வாயிலாக நான் பேசி உள்ளேன். கலந்து ஆலோசித்து பேசி முடிவெடுப்போம்’’ என்றார். தொடர்ந்து திருப்பதி லட்டு தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்காமல் அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார்.

The post திமுக-விசிக இடையே எந்த சலசலப்பும் இல்லை: திருமாவளவன் உறுதி appeared first on Dinakaran.

Related Stories: