‘நான் முதல்வன் உயர்வுக்கு படி’ திட்டம் மூலம் உயர்கல்வியில் சேர்ந்து வாழ்வில் மேம்பட வேண்டும்

*சேர்க்கை ஆணைகளை வழங்கி கலெக்டர் பேச்சு

வேலூர் : நான் முதல்வன் உயர்வுக்கு படி திட்டத்தில் அரசுப்பள்ளி மாணவர்கள் அனைவரும் உயர்கல்வியில் சேர்ந்து வாழ்வில் மேம்படவேண்டும் என மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வியில் சேருவதற்கான சேர்க்கை ஆணைகளை வழங்கி கலெக்டர் தெரிவித்தார்.வேலூர் ஊரிசு கல்லூரியில் மாவட்ட திறன்மேம்பாட்டுக்கழகம் சார்பில் ஒன்றிய அளவில் ‘நான் முதல்வன் உயர்வுக்கு படி’ திட்ட நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஆர்டிஓ பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். கல்லூரி கல்வி இணை இயக்குனர் மலர் வரவேற்றார். எம்எல்ஏ கார்த்திகேயன், மேயர் சுஜாதா ஆகியோர் வாழ்த்தி பேசினர். துணை மேயர் சுனில்குமார், முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சிக்கு கலெக்டர் சுப்புலட்சுமி தலைமை தாங்கி கல்லூரிகளில் சேர்க்கை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அதற்கான ஆணைகளை வழங்கி பேசியதாவது:நான் முதல்வன் உயர்வுக்கு படி என்ற தமிழக முதல்வரின் சிறப்பு திட்டம் அரசுப்பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் உயர்கல்வி படிக்கவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தை அடிப்படையாக கொண்டது.

இங்கு பிளஸ் 2 படித்து முடித்துவிட்டு உயர்கல்விக்கு செல்லாமல் இருக்கும் மாணவர்கள் எத்தனை பேர்? என்பதை கண்டறிந்து அவர்களை உயர்கல்வியில் சேர்க்கும் வகையிலான முகாம்கள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படுகிறது. அதில் எந்தெந்த கல்லூரிகளில் காலி இடங்கள் உள்ளது என்பதை அறிந்து அவற்றில் மாணவர்களை சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, வேலூர் மாவட்டத்தில் வருவாய் கோட்ட அளவில் வேலூர், காட்பாடியில் இதுவரை 4 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இனி ஒன்றிய அளவில் முகாம்கள் நடத்தப்படும். இதில் முதலில் வேலூர் ஒன்றியத்தில் இங்கு நடத்தப்படுகிறது. 12ம் வகுப்பு முடித்து விட்டு மேற்கொண்டு படிக்காமல் உள்ளவர்கள் அனைவரையும் அடையாளம் கண்டு அவர்களை உயர்கல்வியில் இணைக்க இது உதவும். உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதுவரை 8 ஆயிரம் மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.
இந்த ஆண்டு முதல் தமிழ் புதல்வன் திட்டத்தில் அரசு பள்ளிகளில் தமிழ்வழியில் பயின்ற மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

அதில் இதுவரை 5 ஆயிரம் மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். இந்த உதவித்தொகை அவர்கள் எந்த அளவு உயர்கல்வி படிக்கிறார்களோ அந்த காலம் முழுவதும் வழங்கப்படும். இது வேறு எந்த மாநிலத்திலும் செயல்படுத்தப்படாத திட்டங்களாகும். தமிழக அரசின் இந்த திட்டங்கள் மூலம் உயர்கல்வி படிக்க இயலாத மாணவ, மாணவிகள் உயர்கல்வியில் சேர்ந்து வாழ்வில் மேம்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். திறன்மேம்பாட்டு கழக உதவி இயக்குனர் காயத்ரி நன்றி கூறினார்.

The post ‘நான் முதல்வன் உயர்வுக்கு படி’ திட்டம் மூலம் உயர்கல்வியில் சேர்ந்து வாழ்வில் மேம்பட வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: