சென்னை பறக்கும் ரயில்களில் திக்..திக்..பயணம்

* பெண்களுக்கு பாதுகாப்பு அறவே இல்லை
* துரத்தும் நாய்களால் பயணிகள் ஓட்டம்
* கதவில்லாத ரயில்களில் மாணவர்கள் சாகசம்

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், நேரத்தை மிச்சப்படுத்தவும் ரயில் பயணம் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக சென்னையில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசல் காரணமாக பொதுமக்கள் சென்னைக்குள் பல்வேறு பகுதிக்கு செல்வதற்காக மின்சார ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இதில், சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையிலான பறக்கும் ரயில் சேவை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பறக்கும் ரயில் சேவை 1997ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. சென்னை கடற்கரை- மயிலாப்பூர் வரை முதற்கட்டமாக தொடங்கப்பட்டது. இதற்கு பயணிகள் இடையே வரவேற்பு கிடைத்ததை அடுத்து, அடுத்த கட்டத்திற்கு ரயில் சேவை விரிவுபடுத்தப்பட்டது.

இதன் மூலம் மயிலாப்பூரில் இருந்து வேளச்சேரி வரை ரயில் சேவை நீட்டிக்கப்பட்டது. தற்போது, சென்னை கடற்கரை – எழும்பூர் இடையிலான 4வது வழித்தட பணிகள் காரணமாக, பறக்கும் ரயில் சேவை, சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து வேளச்சேரி வரை இயக்கப்படுகிது. தினசரி 80க்கும் மேற்பட்ட மின்சார ரயில் சேவைகள் இந்த வழித்தடத்தில் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடத்தில், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, கலங்கரை விளக்கம், முண்டகக்கண்ணி அம்மன் கோயில், மயிலாப்பூர், மந்தைவெளி, பசுமைவழிச்சாலை, கோட்டூர்புரம், இந்திரா நகர், கஸ்தூரிபாய் நகர், திருவான்மியூர், பெருங்குடி, தரமணி உள்ளிட்ட 18 ரயில் நிலையங்கள் உள்ளன.

தினசரி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், வேலைக்கு செல்வோர், நோயாளிகள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் இந்த ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், போதிய பாதுகாப்பு வசதி இல்லாததால், இந்த பறக்கும் ரயில் நிலையங்களில் இரவு 9 மணிக்கு மேல் செல்ல பெண்கள் தயங்குகின்றனர். மாலை வேளையில் பள்ளி, கல்லூரி, அலுவலகம் முடிந்து வீடுகளுக்கு செல்லும் நேரங்களில் ரயில் நிலையத்தில் ரயில்வே காவலர்கள் பணியில் இல்லாத நிலை உள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் படியில் தொங்கியபடி பயணம் செய்தும், சாகசம் செய்தும் பயணம் செய்கின்றனர். இதனால் பணி முடித்து வீடுகளுக்கு செல்லும் பொதுமக்கள், பெண் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

அதுமட்டுமின்றி இரவு நேரங்களில் சமூக விரோதிகள் சிலர் ரயில் நிலையங்களில் உள்ளே மது அருந்துவது, புகைப்பது போன்ற செயலில் ஈடுபடுவதால் பயணிகள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். மேலும் பல ரயில் நிலையங்களில் கட்டிடங்கள் பராமரிப்பு இன்றி பாழடைந்த நிலையில் உள்ளன. குறிப்பாக முண்டகக்கண்ணியம்மன், பசுமை வழிச் சாலை, மயிலாப்பூர் போன்ற ரயில் நிலையங்களில் மேற்கூரை சேதமடைந்து மழை பெய்யும் போது நடைமேடையில் மழைநீர் கொட்டுவதால் ரயில் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர்.
அத்துடன் ரயில் நிலையத்தில் உள்ள கண்ணாடிகள் உடைந்து, படிக்கட்டுகளில் குப்பைகள் குவிந்து, மின்தூக்கி, எஸ்கலேட்டர் உள்ளிட்டவை பழுதடைந்து பயன்படுத்த முடியாத அளவிற்கு அலங்கோலமாக காட்சியளிக்கின்றன. ேமலும் ரயிலில் இருந்து இறங்கி வெளியில் வருவதற்கு அல்லது ரயில் ஏறுவதற்கு ரயில் நிலையத்திற்குள் நீண்ட தொலைவு நடக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

பல ரயில் நிலையங்களில் மின்விளக்குகள் சேதமடைந்துள்ளதால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. சில ரயில் நிலையங்களில் முறையாக வாகன நிறுத்தும் இடம் இல்லாத காரணத்தினால் சாலையின் இரு புறமும் நிறுத்தி வைக்கின்றனர். பெரும்பாலான ரயில் நிலையங்களில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லவே இல்லை. குறிப்பாக பசுமைவழிச் சாலை, முண்டகக்கண்ணியம்மன் ரயில் நிலையத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் கழிப்பறைகள் மூடப்பட்டே உள்ளன.
மந்தைவெளி, மயிலாப்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் கழிப்பறை திறந்து இருந்தாலும் பராமரிப்பின்றி உள்ளது. இதனால் ரயில் நிலையத்தில் உள்ள படிக்கட்டுகளின் அருகில் சிறுநீர் கழிக்கின்றனர். இதனால் பயணிகள் தினமும் மூக்கை மூடிக்கொண்டு கடந்து செல்கின்றனர்.

இரவு நேரங்களில் இயக்கப்படும் ரயில்களில் போதிய போலீசார் இல்லாததால், வழிப்பறி ஆசாமிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, இரவு 10 மணிக்கு மேல் இயக்கப்படும் ரயில்களில் போதை ஆசாமிகள் மற்றும் வழிப்பறி, செல்போன் பறிப்பு ஆசாமிகளின் தொல்லை அதிகமாக உள்ளது. சமீபத்தில், வேலை முடிந்து பறக்கும் ரயிலில் வீடு திரும்பிக்கொண்டு இருந்த ஒரு இளம்பெண், செல்போன் பறிப்பு ஆசாமிகளால் ரயிலில் இருந்து தள்ளப்பட்டு பறிதாபமாக இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பல ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா வசதி இல்லாததால், அதை பயன்படுத்தி சமூக விரோத செயல்கள் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், பறக்கும் ரயிலில் பயணிக்கவே மக்கள் அச்சப்படும் நிலை உள்ளது.

ரயில் நிலையங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் பொதுமக்கள் மற்றும் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என பெண் ரயில் பயணி ஒருவர் கவலையுடன் தெரிவிக்கிறார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: தற்போது 20 நிமிடத்திற்கு ஒரு முறை மட்டுமே ரயில் வருகிறது. முன்னர் 10 நிமிடத்திற்கு ஒருமுறை வந்து கொண்டு இருந்தது. தற்போது மக்கள் அதிகமாக ரயில்களை பயன்படுத்துகின்றனர். எனவே கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் நேரங்களில் 10 நிமிடத்திற்கு ஒருமுறை ரயிலை இயங்க வேண்டும். மேலும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகம் முடிந்து வீடுகளுக்கு செல்லும் நேரத்தில் பயணிகள் பாதுகாப்புக்காக காவல்துறையினர் ரயில் நிலையத்தில் இருக்க வேண்டும். ஏனென்றால் பள்ளி மாணவர்கள், ஆபத்தை அறியாமல், சாகசப் பயணம் செய்கின்றனர்.

இதனை தடுக்க வேண்டும். அதேபோல் இரவு நேரங்களில் காவலர்கள் ரோந்து பணியில் இருக்க வேண்டும். கழிவறைகளும் பயன்படுத்த முடியாத மோசமான நிலையில் உள்ளது. சில ரயில் நிலையங்களில் கழிவறைக்குள் நுழையவே முடியாது. பல இடங்களில் கழிவறைகளே இல்லை. எனவே பாதுகாப்பை ரயில்வே நிர்வாகம் உறுதி செய்தால்தான் ரயிலை நம்பி பயணிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார். ரயில் பயணிகள் சங்கத்தின் நிர்வாகி மாரிமுத்து கூறியதாவது: சில ரயில் நிலையங்களில் நகரும் படிக்கட்டுகள் மற்றும் தானியங்கிகள் இயங்காத காரணத்தால் பயணிகள் படியில் ஏறிச் செல்லும் நிலை ஏற்படுகிறது.

தரைப்பகுதியில் இருந்து பறக்கும் ரயில் நிலையம், மிக உயரமாக இருப்பதால் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் படியில் ஆபத்தான முறையில் பயணம் செய்கிறார்கள். இதை பார்ப்பதற்கு அச்சமாக உள்ளது. இதை தடுக்க வேண்டும் என்றால் காவல்துறை மட்டும் போதாது, தானியங்கி கதவுகளும் இருக்க வேண்டும். தாம்பரம் உள்ளிட்ட பெரிய ரயில் நிலையங்களில் இருக்கும் ஒலிப்பெருக்கி வசதி அனைத்து ரயில் நிலையத்திலும் இருக்க வேண்டும். இது, புதிதாக பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு உதவிகரமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

நாய்கள் கூடாரமாக…
பொதுமக்கள் பறக்கும் ரயிலை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதாக பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக முண்டககண்ணியம்மன், சேப்பாக்கம் ரயில் நிலையில்களில் தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக வலம் வருவதை காண முடிகிறது. இது ரயில் நிலையமாக மட்டுமல்ல, நாய்களின் கூடாரமாக மாறி உள்ளது. ரயில்வே நிர்வாகம் முறையாக பராமரிக்காத காரணத்தால் கால்நடைகளும் ரயில் நிலையத்திற்குள் உலா வருவதை பார்க்க முடிகிறது என பயணிகள் தெரிவிக்கின்றனர்.

உதவி எண் ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கும், குறிப்பாக பெண்களுக்கும் பாதுகாப்பு வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்படுகிறது. ஆனால் ரயில்வே நிர்வாகம், ரயில் பயணிகள் பாதுகாப்பிற்கு 139 என்ற புதிய உதவி எண்ணை கொடுத்துள்ளது. இதை பயணிகள் பயன்படுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறது.

குழாய் இருக்கு; தண்ணீர் வராது
பல பறக்கும் ரயில் நிலையங்களில் குடிநீர் வராமல் குழாய் மட்டுமே உள்ளது. அதுவும் சில ரயில் நிலையங்களில் குழாய் கூட இல்லாமல் அந்த தண்ணீர் வரக் கூடிய பகுதி மிகவும் அசுத்தமாக உள்ளது. சில ரயில் நிலையங்களில் மட்டுமே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அதிலும் குடிநீர் வராத நிலைதான் உள்ளது. குறிப்பாக மயிலை ரயில் நிலையத்தில் இந்த அவல நிலை நீண்ட நாட்களாக உள்ளது.

The post சென்னை பறக்கும் ரயில்களில் திக்..திக்..பயணம் appeared first on Dinakaran.

Related Stories: