கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மருத்துவமனைக்கு இந்திய பசுமை கட்டிட கவுன்சிலின் தங்க தரச்சான்று: பதக்கம் பெற்றார் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு

சென்னை: கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு பசுமை கட்டிடத்திற்கான இந்திய பசுமைக் கட்டிட கவுன்சிலின் தங்க தரச்சான்று வழங்கப்பட்டது. இதற்கான சான்றிதழையும், தங்கப் பதக்கத்தையும் அமைச்சர் எ.வ.வேலு பெற்றுக்கொண்டர். முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டுவதற்கான அறிவிப்பினை, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி வெளியிட்டார்.

இக்கட்டிடம், பொதுப்பணித்துறையால் 6,03,409 சதுர அடி பரப்பளவில் ரூ.240.54 கோடி மதிப்பீட்டில், 15 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டு, 2023 ஜூன் 15ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. இக்கட்டிட பணியானது முதல்வரின் தொடர் கண்காணிப்பு மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் மற்றும் மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, திட்டமிடப்பட்டதற்கு 4 மாதங்களுக்கு முன்பே முடிக்கப்பட்டு, கட்டிட துறையில் சிறந்த மைல்கல்லாய் அமைந்தது.

இம்மருத்துவமனை தொடங்கப்பட்ட ஓர் ஆண்டுக்குள் லட்சக்கணக்கான நோயாளிகள் குணமடைந்ததற்கான சிறப்பான மருத்துவ பணிகளை செய்து தற்போது தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் சிறப்பிடம் பெற்றுள்ளது. இம்மருத்துவமனை பசுமைக் கட்டிடமாக பல வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டு பசுமைத் தரத்சான்றிதழ் பெறும் வண்ணம் இந்திய பசுமை கட்டிட கவுன்சிலில் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் 20ம் தேதி பதிவு செய்யப்பட்டது.

இம்மருத்துவமனை கட்டிடம் சுற்றுச்சுழலை பாதுகாக்கும் வண்ணமும், நீர் சிக்கனம், மின்சேமிப்பு, திடக்கழிவு மேலாண்மையுடன் உலகத் தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பசுமைக் கட்டிடமாக வடிவமைக்கப்பட்டு பொதுப்பணித்துறையால் உருவாக்கப்பட்ட முதல் கட்டடம் இதுவே ஆகும். இம்மருத்துவமனை கட்டிடத்திற்கு இந்திய பசுமை கட்டிட கவுன்சிலானது தங்கம் தரச்சான்று வழங்கியுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் சான்றிதழ் மற்றும் பதக்கத்தை இந்திய பசுமை கட்டிட கவுன்சில் தலைவர் அஜித் குமார் ஜோர்டியா, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவிடம் வழங்கினார். இந்நிகழ்வின்போது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு, பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

The post கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மருத்துவமனைக்கு இந்திய பசுமை கட்டிட கவுன்சிலின் தங்க தரச்சான்று: பதக்கம் பெற்றார் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு appeared first on Dinakaran.

Related Stories: