ரூ.36.58 லட்சமாக இருந்த சொத்தின் மதிப்பு 5 ஆண்டுகளில் ரூ.32.47 கோடியாக அதிகரிப்பு: அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், மகன் மீது சொத்து குவிப்பு வழக்கு பாய்ந்தது

* 1,057 சதவீதமாக உயர்ந்தது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் அம்பலம்

சென்னை: 2011ம் ஆண்டு ரூ.36.58 லட்சமாக இருந்த சொத்தின் மதிப்பு அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக பணியாற்றிய 2011-2016ம் ஆண்டு காலத்திற்கு பிறகு சொத்தின் மதிப்பு ரூ.32.47 கோடி என 1,057 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதையடுத்து வருமானத்திற்கு மீது சொத்துக்கள் சேர்த்ததாக முன்னாள் அதிமுக அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன் பிரபு மீது லஞ்ச ஒழிப்புத்துறை சொத்து குவிப்பு சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா தெலுகன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் வைத்திலிங்கம். நடுத்தர விவசாய குடும்பத்தை சேர்ந்த இவருக்கு தங்கம் என்ற மனைவி, 3 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். வைத்திலிங்கம் ஒரத்தநாடு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு 3 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அந்த வகையில் 2011-2016ம் ஆண்டு அதிமுக ஆட்சிகாலத்தில் வீட்டு வசதி துறை மற்றும் கூடுதலாக விவசாயத்துறை அமைச்சராக வைத்திலிங்கம் பதவி வகித்தார்.

வைத்திலிங்கம் தனது பதவி காலத்தில் ஸ்ரீராம் பிராப்பர்ட்டீஸ் நிறுவனம் சார்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்திற்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் ரூ.27.90 கோடி தனியார் நிறுனங்கள் மூலம் லஞ்சமாக பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் படி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஸ்ரீராம் பிராப்பர்ட்டீஸ் நிறுவனத்திற்கு தொடர்புடைய நிறுவனங்கள் மூலமாக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் முத்தம்மாள் ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு ரூ.27.90 கோடி லஞ்சப்பணம் கொடுக்கப்பட்டது தெரியவந்தது.

அதைதொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன்கள் பிரபு மற்றும் சண்முக பிரபு மற்றும் தொடர்புடைய நிறுவனங்கள் என 11 பேர் மீது சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. இதனை அடிப்படையாக வைத்து, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் சொத்துக்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் 2011ம் ஆண்டு கால கட்டத்தில் தன் பெயரிலும், தன் மகன், மனைவி ஆகியோர் பேரிலும் மொத்தமாக ரூ.36.58 லட்ச மதிப்பில் சொத்துக்கள் இருந்தது தெரியவந்தது.

அதன் பிறகு வைத்திலிங்கத்தின் மகன் பிரபு நடத்தும் முத்தம்மாள் எஸ்டேட் நிறுவனத்தில் சுமார் ரூ.23 கோடி அளவில் பூந்தமல்லி திருவெறும்பூர் பகுதியில் நலிம் வாங்கியது தெரியவந்தது. அதே காலகட்டத்தில் ஸ்ரீராம் பிராப்பர்ட்டீஸ் தொடர்பான நிறுவனங்கள் மூலம் முத்தம்மாள் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் வங்கிக் கணக்கிற்கு ரூ.27.90 கோடி பணம் வரவு வைக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக, 2015-16 மற்றும் 2016-17 ஆகிய காலகட்டத்தில் இந்த நிறுவனத்தில் எந்த வித தொழில் நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பது வருமானவரித்துறை தாக்கல் ஆவணம் மூலம் தெரியவந்தது.

இந்நிலையில் தான் 2011-16ம் ஆண்டு கால கட்டத்தில் அமைச்சராக வைத்திலிங்கம் இருந்த இப்போது, லஞ்சப் பணமாக பெற்ற பணத்தில் சொத்துக்களை வாங்கி குவித்தது தெரியவந்துள்ளது. 2011 ம் ஆண்டு ரூ.36.58 லட்சம் மனைவி, மகன்கள் உள்ளிட்டோர் மீது சொத்துக்கள் இருந்த நிலையில், அது 2016 ஆம் ஆண்டு அதாவது 5 ஆண்டு காலத்தை கணக்கிட்டு பார்க்கும் பொழுது 34 கோடியே 28 லட்ச ரூபாய் மதிப்பில் சொத்துக்கள் இருப்பது விசாரணையில் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த காலகட்டத்தில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன் பிரபு மற்றும் உறவினர்கள் தொடர்பான வருமானமாக 3 கோடியே 6 லட்சத்து95 ஆயிரத்து 274 ரூபாய் அளவில் இருந்த நிலையில், செலவாக 1 கோடியே 62 லட்சத்து 3 ஆயிரத்து 325 ரூபாய் இருந்தது விசாரணையில் தெரியவந்தது. இந்த காலகட்டத்தில் சேமிப்பாக ஒரு கோடியே 44 லட்ச ரூபாய் வைத்திருந்ததாகவும், இருப்பினும் 2011 முதல் 2016 வரை முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் அவரது மனைவி மற்றும் மூத்த மகன் பிரபு ஆகியோர் பெயரில் 33 கோடியே 92 லட்சத்து 2 ஆயிரத்து 515 ரூபாய் அளவிற்கு சொத்துக்கள் சேர்த்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மொத்தமாக இந்த காலகட்டத்தில் வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்த போது, 32 கோடியே 47 லட்சத்து 10 ஆயிரத்து 566 ரூபாய் அளவில் வருமானத்திற்கு அதிகமாக முன்னாள் அதிமுக அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன் பிரபு ஆகியோர் சொத்துக்களை குவித்திருந்தது தெரியவந்தது. இது அவரது வருமானத்தை காட்டிலும் 1,057 சதவீதம் அதிகம் என கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே, 2011 முதல் 2016 வரை அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த போது தனது பதவியை தவறாக பயன்படுத்தி லஞ்சம் பெற்று இந்த சொத்துக்களை பெற்ற காரணத்தினால், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன் பிரபு ஆகியோர் மீது தஞ்சை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சொத்து குவிப்பு உட்பட 3 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுக்குமாடி குடியிருப்பு கட்ட தனியார் கட்டுமான நிறுவனங்களிடம் ரூ.27 கோடி லஞ்சம் பெற்றதாக முன்னாள் அதிமுக அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரது 2 மகன்கள் உட்பட 11 பேர் மீது சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து இருந்த நிலையில், தஞ்சை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன் பிரபு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post ரூ.36.58 லட்சமாக இருந்த சொத்தின் மதிப்பு 5 ஆண்டுகளில் ரூ.32.47 கோடியாக அதிகரிப்பு: அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், மகன் மீது சொத்து குவிப்பு வழக்கு பாய்ந்தது appeared first on Dinakaran.

Related Stories: