கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ரூ4.23 கோடியில் பள்ளி கட்டிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்


சென்னை: தமிழக முதல்வரும், கொளத்தூர் தொகுதி எம்எல்ஏவுமான மு.க.ஸ்டாலின் நேற்று கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜி.கே.எம். காலனி 12வது தெருவில் மாநகராட்சி தொடக்க பள்ளிக்கு ரூ4 கோடியே 23 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளி கட்டிடம், மதுரைசாமி மடத்தில் ரூ26 லட்சத்து 43 ஆயிரம் செலவில் புதுப்பிக்கப்பட்ட உடற்பயிற்சிக்கூடம், நேர்மை நகர் மயான பூமியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நீத்தார் நினைவு மண்டபம் என மொத்தம் ரூ4 கோடியே 75 லட்சத்து 72 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை திறந்து வைத்தார். முன்னதாக கொளத்தூர், ஜி.கே.எம். காலனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளி மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு கல்வி உபகரணங்களையும் முதல்வர் வழங்கினார்.

அதைத்தொடர்ந்து கொளத்தூர், முத்துகுமரப்பா தெருவில் ரூ13 கோடியே 47 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் சமுதாய நலக்கூடத்தின் கட்டுமான பணிகளை முதல்வர் பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், சிஎம்டிஏ சார்பில் கொளத்தூர், பேப்பர் மில்ஸ் சாலையில் வருவாய் துறைக்கு சொந்தமான 0.74 ஏக்கர் இடத்தில் புதியதாக அமையவுள்ள வட்டாட்சியர் அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம், பகிர்ந்த பணியிடம் மற்றும் வணிக வளாகங்கள் என ரூ32 கோடி மதிப்பீட்டில் ‘மக்கள் சேவை மையம்’ கட்டப்படவுள்ள இடத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, எம்பிக்கள் வில்சன், கலாநிதி வீராசாமி, கிரிராஜன், எம்எல்ஏக்கள் தாயகம் கவி, ஜோசப் சாமுவேல், துணை மேயர் மகேஷ்குமார், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன தலைவர் ரங்கநாதன், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலாளர் காகர்லா உஷா, சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் நீரேற்று வாரிய மேலாண்மை இயக்குநர் வினய், நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் இயக்குநர் கணேசன், சென்னை மாநகராட்சி மண்டல் துணை ஆணையர் பிரவீன்குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

The post கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ரூ4.23 கோடியில் பள்ளி கட்டிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: