ரூ10 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிக்கு செல்வப்பெருந்தகை வக்கீல் நோட்டீஸ்

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநில பொதுச் செயலாளர் ஜெய்சங்கருக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், பெரம்பூரில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 24 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அத்துடன் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக பல்வேறு நபர்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகைக்கு தொடர்பு இருப்பதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு பொதுச் செயலாளர் ஜெய்சங்கர், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ‘ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய அஸ்வத்தாமனுக்கு இளைஞர் காங்கிரஸில் பொதுச் செயலாளர் பதவியை வழங்கியவர்.

எனவே, அவரை கட்சியின் மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில பொதுச் செயலாளர் ஜெய்சங்கருக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், ‘எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் இதுபோன்ற செயலைச் செய்துள்ளீர்கள். எனவே, 14 நாட்களுக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். அவ்வாறு நடக்காவிட்டால் ரூ10 கோடி இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்படும்” என கூறியுள்ளார். இந்த விவகாரம் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post ரூ10 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிக்கு செல்வப்பெருந்தகை வக்கீல் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Related Stories: