இரு கட்சிகளையும் சமமாக நடத்த வேண்டும் அஜித் பவார் அணியின் கடிகாரம் சின்னத்தை முடக்க வேண்டும்: சரத் பவார் அணி உச்ச நீதிமன்றத்தில் மனு

புனே: அஜித் பவார் அணியின் கடிகாரம் சின்னத்தை முடக்க வேண்டும் என தேசியவாத காங்கிரஸ்(சரத் பவார்) அணி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. மக்களவை தேர்தலுக்கு முன்பாக கடந்தாண்டு ஜூலை மாதம் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசில் பிளவு ஏற்பட்டது. தொடர்ந்து தன் ஆதரவாளர்களுடன் ஆளும் சிவசேனா – பாஜ கூட்டணியில் சேர்ந்த அஜித் பவாருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது.

மக்களவை தேர்தல் சமயத்தில் கட்சி இரண்டாக உடைந்ததால் தேசியவாத காங்கிரசின் கடிகாரம் சின்னத்துக்கு உரிமை கோரி சரத் பவார், அஜித் பவார் அணியினர் தேர்தல் ஆணையத்தை நாடினர். பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் அஜித் பவார் அணிக்கு கடிகாரம் சின்னம் ஒதுக்கப்பட்டது. மேலும் சரத் பவார் அணிக்கு தேசியவாத காங்கிரஸ்(சரத் சந்திர பவார்) என்ற பெயரை ஒதுக்கிய தேர்தல் ஆணையம் கொம்பு ஊதும் மனிதன் சின்னத்தையும் ஒதுக்கியது.

மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சின்னம் தொடர்பாக மீண்டும் பிரச்னை எழுந்துள்ளது.  அஜித் பவார் தலைமையிலான அணிக்கு ஒதுக்கப்பட்டுள்ள கடிகாரம் சின்னத்தை முடக்க வேண்டும் என சரத் சந்திர பவார் தேசியவாத காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு நாளை மறுதினம்(25ம் தேதி) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சரத் பவார் அணி மக்களவை உறுப்பினர் சுப்ரியா சுலே, “சரத் பவார்தான் எங்கள் கட்சியின் நிறுவன உறுப்பினர் அவரே அனைத்து முடிவுகளையும் எடுக்கிறார். கடிகாரம் சின்னம் தொடர்பான வழக்கில் இறுதி முடிவு வரும் வரை அந்த சின்னத்தை முடக்க வேண்டும். இரு கட்சிகளையும் சமமாக நடத்த வேண்டும். எங்கள் அணிக்கு(சரத் பவார்) ஒதுக்கியது போலவே அஜித் பவார் அணிக்கும் புதிய சின்னத்தை ஒதுக்க வேண்டும். பேரவை தேர்தலுக்கு முன் கட்சி சின்னம் தொடர்பான பிரச்னைக்கு விரைந்து முடிவு எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

The post இரு கட்சிகளையும் சமமாக நடத்த வேண்டும் அஜித் பவார் அணியின் கடிகாரம் சின்னத்தை முடக்க வேண்டும்: சரத் பவார் அணி உச்ச நீதிமன்றத்தில் மனு appeared first on Dinakaran.

Related Stories: