அதிமுக ஆட்சியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட ரூ.27 கோடி லஞ்சம்; மாஜி அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்கு: 2 மகன்கள் உள்பட 11 பேர் மீதும் குற்றச்சாட்டு

திருச்சி: அதிமுக ஆட்சியில் சென்ைனயில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட ரூ.27 கோடி லஞ்சம் வாங்கியதாக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், அவரது 2 மகன்கள் உள்பட 11 பேர் மீது தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த 2011-16ம் ஆண்டு கால கட்டத்தில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அமைச்சரவையில் வீட்டு வசதி துறை அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம். ஜெயலலிதா காலத்தில் அதிமுகவில் செல்வாக்குடன் இருந்தவர். இப்போது தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். அதிமுகவில் இருந்து விலகி, ஓ.பன்னீர்செல்வம் அணியில் செயல்படுகிறார். வைத்திலிங்கத்தின் சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா தெலுகன்குடிக்காடு கிராமம். இவரது பெற்றோர் ரெங்கசாமி மற்றும் முத்தம்மாள். இருவரும் இறந்து விட்டனர். வைத்திலிங்கம் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். விவசாயத்தின் மூலம் மட்டுமே வருமானம் பெற்றவர். இவரது மனைவி தங்கம், இவர்களுக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

மூத்த மகன் பிரபு. இவர் பிருந்தா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இளைய மகன்கள் ஆனந்தபிரபு மற்றும் சண்முகபிரபு. இருவரும் டாக்டர்கள். மகள் பிரதீபா. ஒரத்தநாடு அருகே புதூரை சேர்ந்த டாக்டர் கார்த்திகேயனை திருமணம் செய்துள்ளார். வைத்திலிங்கம் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் தொடர்ந்து 3 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2001 முதல் 2006 வரையிலான காலக்கட்டத்தில் தொழில் துறை அமைச்சராகவும், வனத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். 2011 முதல் 2016 வரை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும், கூடுதலாக விவசாயத் துறை அமைச்சராகவும் இருந்தார். 2016ம் ஆண்டு தேர்தலில் ஒரத்தநாட்டில் தோல்வியடைந்தார். இதனால் ராஜ்யசபா எம்பி ஆனார்.

மீண்டும் 2021 சட்டமன்ற தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். வைத்திலிங்கத்தின் மூத்த மகன் பிரபு, பாட்டி முத்தம்மாள் பெயரில் முத்தம்மாள் எஸ்டேட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் நிறுவனத்தை கடந்த 2014 செப்.22ம் தேதி சென்னையில் தொடங்கினார். அதன் நிர்வாக இயக்குநராகவும் இருந்து வருகிறார். பிரபு, முத்தம்மாள் எஸ்டேட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பெயரில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர், சென்னை பூந்தமல்லி பகுதிகளில் நிலங்கள், வீட்டு மனைகள் வாங்கி குவித்திருந்தார். முத்தம்மாள் எஸ்டேட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு சென்னை ஈக்காட்டுதாங்கல் இந்தியன் வங்கி கிளை மூலம் ரூ.27.90 கோடிக்கு மேல் தொகை வரவு வைக்கப்பட்டது.

இந்நிலையில் 22-9-2014 அன்று முத்தம்மாள் எஸ்டேட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 90 சதவீத பங்கு பிரபுவுக்கும், மீதம் 10 சதவீத பங்கு அவரது உறவினர் பன்னீர்செல்வம் பெயரிலும் இருப்பது தெரியவந்தது. மேலும் 24.3.2015 அன்று சென்னை ஈக்காட்டுதாங்கல் கிளை இந்தியன் வங்கியில் முத்தம்மாள் எஸ்டேட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் ரொக்க இருப்புத் தொகை ரூ.10,82,85,494.00 ஆக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிறுவனம் ரூ.36,00,000 பங்கு மூலதனத்துடன் உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனம் ரியல் எஸ்டேட் வணிகத்தை கையாள பதிவு செய்யப்பட்டது. அதன் வருமான வரி அறிக்கையின்படி, இந்த நிறுவனத்திற்கு எந்த வியாபாரமும் இல்லை.
இந்நிலையில், ஸ்ரீராம் பிராப்பர்டீஸ் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பிரைவேட் லிமிடெட், சென்னை பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் 57.94 ஏக்கர் நிலப்பரப்பில் 1,453 குடியிருப்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப கட்டிடங்கள் உள்ளிட்ட கூடுதல் கட்டிடங்கள் கட்டுவதற்காக 2.12.2013ல் சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்திடம் திட்ட அனுமதிக்கு மனு சமர்ப்பிக்கப்பட்டது.

2 ஆண்டுகள் கிடப்பில் கிடந்த நிலையில் 24.2.2016 அன்று சிஎம்டிஏ ஒப்புதல் அளித்தது. அப்போது வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சராக இருந்த வைத்திலிங்கத்துக்கு ரூ.27.90 கோடி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அடுக்குமாடி குடியிருப்பு கட்ட வைத்திலிங்கம் ரூ.27 கோடி லஞ்சம் பெற்றதாக அறப்போர் இயக்கம் அப்போது புகார் செய்திருந்ததாக தெரிகிறது. முத்தம்மாள் எஸ்டேட்ஸ் பிரைவேட் லிமிடெட் மூலம் பராமரிக்கப்படும் இந்தியன் வங்கியில் 28.1.2016 முதல் 4.2.2016 வரை 8 நாட்களுக்குள் ஆர்டிஜிஎஸ் மூலம் மொத்தம் ரூ.27.90 கோடி வரவு வைக்கப்பட்டது. இந்த தொகையை பாரத் நிலக்கரி கெமிக்கல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து முத்தம்மாள் எஸ்டேட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு கடனாக வாங்கியதாக போல் கணக்கு காட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பாரத் நிலக்கரி கெமிக்கல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மேற்கண்ட ஸ்ரீராம் பிராப்பர்டீஸ் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமானது என லஞ்சஒழிப்பு துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிகிறது.

கடந்த 2014ம் ஆண்டு பாரத் நிலக்கரி கெமிக்கல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மதிப்பு ரூ.130 கோடியாக இருந்தது. 2019-20ல் பாரத் நிலக்கரி கெமிக்கல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ரூ.281 கோடி கடனை தனது சொத்துகளை விற்று அடைத்ததாக தெரிகிறது. அப்போது, நடந்த தணிக்கையில் தான் இந்த நிறுவனம் முத்தம்மாள் எஸ்டேட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு லஞ்சமாக பணம் அனுப்பியது தெரியவந்தது. மேலும், வைத்திலிங்கம் தனது மனைவி, மகன்கள் பெயரில் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கி குவித்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 16.5.2011-31.3.2016க்கு இடைப்பட்ட காலத்தில் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன் பிரபு ஆகியோர் (ரூ.32,47,10,566.53) வருமானத்திற்கு அதிகமாக 1,057 சதவீதம் சொத்துகள் சேர்த்ததும் தெரியவந்தது. இதையடுத்து தஞ்சை ஊழல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணன் அளித்த புகாரின்பேரில் வைத்திலிங்கம், அவரது மகன்கள் உள்பட 11 பேர் மீது கடந்த 19ம் தேதி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மாநகராட்சியில் கடந்த 2018ம் ஆண்டி நடந்த மழைநீர் வடிகால் பணிகளுக்கு விடப்பட்ட டெண்டரில் ரூ.26.61 கோடி மோசடி நடந்து உள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த சில நாட்களுக்கு முன் வழக்குப்பதிவு செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post அதிமுக ஆட்சியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட ரூ.27 கோடி லஞ்சம்; மாஜி அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்கு: 2 மகன்கள் உள்பட 11 பேர் மீதும் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: