தீபாவளியை முன்னிட்டு தீவு திடலில் பட்டாசு விற்பனைக்கு தனி இடம் ஒதுக்க வழக்கு: அரசு பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சென்னையில் பந்தர் தெரு, ஆண்டர்சன் தெரு, என்.எஸ்.சி.போஸ் சாலை உள்பட ஏழு இடங்களில் பட்டாசு கடைகள் நடத்தியவர்களுக்கு தீவுத்திடலில் கடைகள் ஒதுக்கும் போது சலுகைகள் வழங்க 2006ல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த்து. இதற்கு மாறாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், டெண்டர் மூலம் கடைகள் ஒதுக்குகிறது.

இதில் தகுதியில்லாத புதியவர்கள் ஒதுக்கீடு பெறுவதால், சென்னையில் ஏழு தெருக்களில் பட்டாசு விற்பனை செய்தவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் நலச் சங்க உறுப்பினர்களுக்கு தீவுத்திடலில் தனி இடம் ஒதுக்க வேண்டும். அல்லது வேறு இடத்தை ஒதுக்க வேண்டும் என்று கடந்த ஆகஸ்டில் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்கு விண்ணப்பித்தோம். அதை பரிசீலிக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

மேலும், தங்கள் விண்ணப்பம் மீது முடிவெடுக்கும் வரை நடப்பாண்டு கடைகள் ஒதுக்குவது தொடர்பான டெண்டருக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தண்டபாணி, மனுதாரர் சங்கம் அளித்த விண்ணப்பத்தை இரண்டு வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்கும்படி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக நிர்வாக இயக்குனருக்கு உத்தரவிட்டார்.

The post தீபாவளியை முன்னிட்டு தீவு திடலில் பட்டாசு விற்பனைக்கு தனி இடம் ஒதுக்க வழக்கு: அரசு பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: