இந்நிலையில் பக்தர்களின் வசதிக்காக அழகர்கோயில் அருகே உள்ள கள்ளந்திரி, பூவக்குடி கிராமத்தில் சட்டமன்ற அறிவிப்பின் படி கோயில் நிதியில் இருந்து ரூ.9.25 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம், முதல்தளம் மற்றும் இரண்டாம் தளத்துடன் கூடிய திருமண மண்டபம் கட்டும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் தரைத்தளத்தில் இருந்து இரண்டாம் தளத்திற்கு செல்ல மின்தூக்கியுடன் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.
இதில் 11 ஆயிரத்து 513 சதுரஅடி கொண்ட தரைத்தளத்தில் 270 நபர்கள் அமர்ந்து உணவு அருந்தும் வகையில் கட்டப்பட்டு வருகிறது. மேலும் இவற்றில் சமையலறை, பொருட்கள் வைக்கும் அறை, கை கழுவும் இடம், முன்பதிவு அறை, மூன்று ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பறை வசதிகள் உள்ளது. முதல் தளத்தில் 11 ஆயிரத்து 739 சதுரஅடியில் கழிப்பறையுடன் கூடிய மணமகன் மற்றும் மணமகள் அறை உள்ளது. மேலும் 700 நபர்கள் அமரும் இருக்கை வசதிகளுடன் கூடிய பொருட்கள் வைக்கும் அறை, உடை மாற்றும் அறை உள்ளது. இரண்டாம் தளத்தில் 7 ஆயிரத்து 166 சதுரடியில் 13 கழிப்பறையுடன் கூடிய தங்கும் அறைகள், சுற்றுச்சுவர்களுடன் கூடிய இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதியுடன் உள்ளது.
அறநிலையத்துறை இணை ஆணையர் செல்லத்துரை தலைமையில், செயற்பொறியாளர் சந்திரசேகர், உதவி கோட்டப்பொறியாளர் சரவணக்குமார், இளநிலை பொறியாளர் சிலம்பரசன் மேற்பார்வையில் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இது குறித்து பக்தர்கள் கூறுகையில், ‘‘அறநிலையத்துறை சார்பில் அழகர்கோயிலில் பக்தர்களின் பக்தர்களின் தாகத்தை தணிக்க ஆங்காங்கே தண்ணீர் வசதி, குழந்தைகளுடன் ஓய்வு எடுக்க பெரியாழ்வார் சிறுவர் பூங்கா, குறைந்த செலவில் காது குத்து மண்டபம் உள்ளிட்டவை உள்ளது. தற்போது கூட மலைக்கு செல்ல புதிய தார்ச்சாலை வசதி மற்றும் மலைப்பகுதிகளில் தடுப்பு சுவர், கார் பார்கிங் வசதி உள்ளிட்டவை சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. தற்போது மற்றொறு சிறப்பாக லிப்ட் வசதியுடன் கூடிய திருமண மண்டபம் கட்டுவது பக்தர்களுக்கு மேலும் ஒரு வரபிரசாதமாக அமையும்’’என்றனர்.
The post அழகர்கோயில் பக்தர்கள் வசதிக்காக நவீன வசதிகளுடன் ரூ.9.25 கோடியில் திருமண மண்டபம் கட்டும் பணி தீவிரம் appeared first on Dinakaran.