அந்தவகையில், திருப்பத்தூர் நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் திருப்பத்தூர் பெரிய ஏரி சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இதில் திருப்பத்தூர் நகரப் பகுதிகளில் இருந்து வெளியேறும் மழை நீர் உள்ளிட்டவைகள் சேமிக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு பெரிய ஏரி நிரம்பி உபரி நீர் அருகே உள்ள பாம்பாற்றுக்கு செல்கிறது. முன்னதாக பெரிய ஏரி நமக்கு நாமே திட்டத்தின் மூலம் தூய்மைப்படுத்தப்பட்டு படகு இல்லம், சிறுவர் பூங்கா உள்ளிட்டவைகள் அமைக்க கலெக்டர் மூலம் அறிவிப்பு வெளியானது.
ஆனால் இதுவரை அதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.தற்போது திருப்பத்தூர் பெரிய ஏரியில் நகராட்சி பகுதிகளில் இருந்து கொண்டுவரும் குப்பைகள், இறைச்சி கழிவுகளை கொட்டி செல்கின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், திருப்பத்தூர் நகராட்சி சார்பில் நம்ம ஊரு சூப்பர் என்ற திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு பெரிய ஏரியை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தற்போது நகராட்சி நிர்வாகமே ஏரியில் குப்பைகளை கொட்டி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக தண்ணீர் மாசடைந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மீன்களும் அதிகளவில் செத்து மிதந்து வருகிறது. எனவே நமக்கு நாமே திட்டத்தின் மூலம் ஏரியை தூர்வாரி, குப்பைகளை அகற்றி, படகு இல்லம் அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post குப்பை, இறைச்சி கழிவுகள் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு பெரிய ஏரியை தூர்வாரி படகு இல்லம் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.