நன்றி குங்குமம் டாக்டர்
மனித உடலில் உள்ள 206 எலும்புகளும் 360 மூட்டுகளின் உதவியுடன் இயங்குகிறது. பெரும்பாலான மூட்டுகள் அசைந்து வேலை செய்கின்றன. இந்த அசையும் மூட்டுகள் உதவியுடன்தான் நாம் பல வேலைகளை செய்யமுடிகிறது. உதாரணமாக, உணவை மெல்வதற்கு இரு தாடை மூட்டு உதவுகிறது. ஒரு கையால் பாத்திரத்தை அடுப்பில் இருந்து எடுக்க தோள்பட்டையிலிருந்து விரல் நுனி வரை உள்ள 32 மூட்டுகள் உதவுகின்றன. இரு கால்களால் நடந்து செல்ல 62 மூட்டுகள் வேலை செய்கின்றன. சத்தம் கேட்டு திரும்பிப் பார்ப்பதற்குக் கழுத்தில் உள்ள 20 மூட்டுகள் வேலை செய்கின்றன. எவ்வாறு உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் முக்கியமோ அதுபோன்றே மூட்டுகளும் முக்கியமானது.
மூட்டுவலி எதனால் ஏற்படுகிறது?
எவ்வாறு காரில் உள்ள அசையும் பகுதிகளில் பிரச்னை ஏற்படும்போது பழுதுபார்க்க நேரிடுகிறதோ அதுபோலதான் நமது மூட்டுகளுக்கும் உங்கள் உதவி அவ்வப்போது தேவைப்படுகிறது. இதில், எலும்பு, குருத்து, ஜவ்வு மற்றும் நார், தசைகள் மற்றும் தசைநார்கள், மூட்டு உராய்வுத் திரவம் போன்ற பகுதிகளில் பிரச்னை ஏற்படும்போது மூட்டு வலி ஏற்படலாம்.
காரணங்கள்
முழங்கால் மூட்டு என்பது தொடை எலும்பு மற்றும் கால் எலும்புகள் இணையும் பகுதியாகும். ஆஸ்டியோ ஆர்திரைடிஸ் எனப்படும். முழங்கால் மூட்டுவலி வயது முதிர்வின் காரணமாக முழங்கால் மூட்டுகளில் ஏற்படும் தேய்மானத்தால் உண்டாகிறது. மேலும், எலும்பு முறிவு, அதிக உடல்பருமன், மூட்டுகளுக்கு அதிகப்பளு உண்டாக்கும் வேலைகளைத் தொடர்ந்து செய்வதனாலும் ஏற்படலாம்.
மேலும் ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்புகள் வலு இழத்தலினாலும் சிறிய மற்றும் பெரிய மூட்டுகள் பாதிக்கும் ருமட்டாய்டு ஆர்த்தரைடிஸ் பிரச்னையாலும் விளையாட்டின்போது முழங்கால் மூட்டு சவ்வு மற்றும் தசைகளில் ஏற்படும் பிடிப்பு, காயம் போன்ற காரணங்களாலும் முழங்கால் மூட்டுவலி உண்டாகலாம்.
முழங்கால் மூட்டின் அமைப்பும் செயல்படும் விதமும்
முழங்கால் மூட்டு நமது உடலின் எடையைத் தாங்கும் ஒரு முக்கியமான மூட்டு ஆகும். இது தசை நார்களாலும் ஜவ்வுகளாலும் இணைக்கப்பட்ட ஓர் அமைப்பாகும். முழங்கால் மூட்டின் உள்ளேயிருக்கும் குருத்தெலும்பானது நாம் அன்றாட வாழ்க்கையில் நடக்கப்போகும் படிகளில் ஏறி இறங்கும் போதும், உடலின் பளுவை சுமக்கும்போதும் ஏற்படும் அதிர்வுகளைத் தாங்கவல்லது.
செயல்படும் விதம்
முழங்கால் மூட்டு தொடை எலும்பு, கால் எலும்பு மற்றும் கொட்டாங்குச்சி எலும்பு இது மூன்றும் ஒரு சேர அமையப்பட்டது. முழங்கால் மூட்டு என்பது மாற்றப்பட்ட கதவின் கீழ் அமைப்பைப் போன்றது. இது முன்பும் பின்பும் மடக்குவதோடு ஒரு சுழற்சி அமைப்பையும் கொண்டுள்ளது.
முழங்கால் மூட்டு அழற்சி
முழங்கால் மூட்டு அழற்சி என்பது முழங்காலில் குருத்தெலும்பில் படிப்படியான தேய்மானத்தால் உருவாகிறது. இதுவே முழங்கால் மூட்டு அறுவை சிகிச்சைக்கு முக்கிய காரணமாக அமைகிறது. தீவிரமாகப் பாதிக்கப்பட்ட மூட்டு அழற்சியால் இந்தக் குருத்தெலும்பானது மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டு தேய்ந்து உடைந்துவிடுகிறது.
இந்நிலையில் எலும்புகள் நேரடியாக ஒன்றுடன் ஒன்று உராயத் தொடங்கும். இதனால் மூட்டு தேய்மானத்தின் தீவிரம் அதிகரிக்கப்படுகிறது. இந்தக் குருத்தெலும்பின் பாதிப்பு நாட்பட்ட காலத்தினாலோ (அ) உள்ளிருக்கும் ஜவ்வுகளின் பிரச்னையினாலோ முழங்கால் மூட்டுக்கு அதிக அழுத்தம் தரும் செயல்களினாலோ ஏற்படலாம்.
அறிகுறிகள்
மூட்டில் வலி ஏற்படும் முன் சமீபத்திலோ, முன்னர் அடிபட்டு இருந்தாலோ.
பல மூட்டுகள் வலி ஏற்பட்டாலோ
மூட்டு அடிக்கடி வீங்கினாலோ
மூட்டு அடிக்கடி விலகினாலோ
மூட்டில் வலியோடு நொடித்தாலோ
வலியோடு சத்தம் கேட்டாலோ
வலியால் நமது வாழ்க்கைத்தரம் குறைந்தாலோ முழங்கால் மூட்டு அழற்சிக்கான அறிகுறியாக இருக்கலாம்.
சிகிச்சைகள்
பாதிக்கப்பட்ட மூட்டை வலி,
வீக்கம் மற்றும் மூட்டின் இயக்கம்
போன்றவற்றை வைத்து கண்டறியலாம்.
ரத்தப் பரிசோதனை செய்வதன் மூலம் மூட்டு அழற்சிக்கு வேறு ஏதாவது (கிருமி தாக்கம், யூரிக் அமிலப் படிவு அல்லது முடக்குவாதம்) காரணங்கள் உண்டா என்பதை அறிந்து கொள்ளலாம்.
மிதமான நிலை
சில நேரங்கள் மூட்டின் அதிகப்படியான நீர் இருந்தால் அதனை பரிசோதனை செய்வதன் மூலம் தொற்றுநோய் தாக்கம் அல்லது யூரிக் அமில வாதம் போன்றவற்றைக் கண்டறியலாம். குறைந்த வயதின் மூட்டு தேய்மானம் ஏற்பட்டவர்களுக்கு மூட்டுச் சவ்வு நிலையை அறிந்துகொள்ள எம்.ஆர்.ஐ ஸ்கேன் தேவைப்படலாம். முழங்கால் வலியைத் தடுக்கமுழங்கால் மூட்டுத் தசைகளுக்கான பயிற்சிகளைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.
உங்கள் உடல் பருமன் அதிகமாக இருந்தால் கண்டிப்பாகக் குறைக்க வேண்டும். நடைப்பயிற்சி முழங்கால் மூட்டு தசைகளுக்கு நல்லது, ஆனால் வலி அதிகரிக்காதபடி குறைந்த தூரம் மட்டுமே நடக்க வேண்டும்.தரையில் கால்மடித்து அமர்ந்திருப்பதைத் தவிர்க்க வேண்டும். நாற்காலி போன்ற உயரமான இருக்கைகளில் மட்டுமே அமர வேண்டும். அதிகமான நேரம் உட்காரும்போது சிறிய மேடையின் மீது கால்களை வைத்துக் கொள்வது நல்லது. அதிகநேரம் தொடர்ச்சியாக உட்கார வேண்டியிருப்பின் இடையில் சிறிய தூரம் நடந்து பின்னர் அமர வேண்டும். அதிக நேரம் தொடர்ச்சியாக நின்று கொண்டிருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
நீண்ட நேரம் நிற்க நேரிட்டால் இரு கால்களையும் ஒவ்வொன்றாக மாற்றி உங்கள் உடல் எடையை ஒவ்வொரு காலும் சிறிது நேரம் தாங்கும்படி நிற்க வேண்டும். குளிர்ச்சியான சீதோஷ்ண நிலையைத் தவிர்க்கவும். தூங்கும்போது முழங்கால் கீழ் தலையணை வைப்பதை தவிர்க்க வேண்டும்.வலியின் காரணமாகவோ, நடப்பதில் உள்ள சிரமத்தின் காரணமாகவோ முற்றிலும் படுக்கையில் இருப்பது தவறு.மாடிப்படி அதிகம் உபயோகிப்பதைத் தவிர்க்கவும்.
உங்கள் அன்றாடப் பணிகளைத் தொடர்ச்சியாகச் செய்யும்போது, பணிகளுக்கிடையே மூட்டுகளுக்கு சிறிது ஓய்வு கொடுங்கள்.உடல் பருமனைக் குறைப்பது அல்லது கட்டுக்குள் வைத்திருப்பது மூட்டுக்கு அழுத்தம் தரும் செயல்களைக் குறைத்துக் கொள்ள எளிய உடற்பயிற்சிகளைச் செய்வது.மூட்டு எலும்பை வலுப்படுத்தும் சிறப்புப் பயிற்சிகளையும் முழங்கால் மூட்டின் வலியைக் குறைக்கும் நெகிழ்வுப் பயிற்சிகளையும் அன்றாடம் செய்யலாம். உணவுப் பழக்க வழக்கங்களை மாற்றியமைக்கலாம்.முழங்கால் மூட்டு வலிக்கு உறைகளை ( Knee cap) பயன்படுத்தலாம்.
தொகுப்பு: துரை நீலகண்டன்
The post முழங்கால் மூட்டு வலி காரணமும் தீர்வும்! appeared first on Dinakaran.