கல்லூரி மாணவிக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி

வேளச்சேரி: செங்கல்பட்டு அருகே மறைமலைநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவரது கணவர் ஏற்கெனவே இறந்து போனதால், பள்ளிக்கரணையில் பல்வேறு இடங்களில் வீட்டுவேலை செய்து, தனது மகளை படிக்க வைத்துள்ளார். இதைத் தொடர்ந்து, அவரது மகள் சத்யஜோதியை ஒரு தனியார் கல்லூரியில் பி.ஆர்க் முதலாமாண்டில் சேர்த்துள்ளார். இச்சமயத்தில், பள்ளிக்கரணையில் குத்தகைக்கு வீடு பார்த்து தருவதாக ஒருவர் கூறியதை நம்பி, தான் சேமித்து வைத்திருந்த ரூ.2.50 லட்சத்தை அந்நபரிடம் ராஜேஸ்வரி கொடுத்துள்ளார். எனினும், அந்நபர் குத்தகைக்கு வீடு பிடித்து தராமலும் ராஜேஸ்வரி கொடுத்த பணத்தை திருப்பி தராமலும் ஏமாற்றியதுடன், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கடந்த 2 நாட்களுக்கு முன் பள்ளிக்கரணை காவல்துறை துணை ஆணையர் கார்த்திகேயனிடம் ரூ.2.50 லட்சத்தை பறிகொடுத்த ராஜேஸ்வரி புகார் அளித்துள்ளார்.

அப்போது அவருடன் இருந்த மகள் சத்யஜோதியிடமும் விசாரித்தார். விசாரணையில், தன்னுடைய தாய் சேமித்து வைத்திருந்த ரூ.2.50 லட்சத்தை யாரோ ஒருவர் குத்தகைக்கு வீடு தருவதாக கூறியதை ஏமாந்த விவரங்களையும், இதனால் முதலாமாண்டுடன் தனது கல்லூரி படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்கு செல்வதாக துணை ஆணையரிடம் சத்யஜோதி அழுதபடி கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து சத்யஜோதியிடம் கல்லூரி படிப்பை தொடர விருப்பமா என்று துணை ஆணையர் கேட்டறிந்தார். அவர் விருப்பம் தெரிவிக்கவே, பள்ளிக்கரணை பகுதி வியாபாரிகளிடம் இருந்து நிதியுதவி பெற்று, சத்யஜோதி கல்லூரி படிப்பை தொடர, அவரது தாய் ராஜேஸ்வரியிடம் துணை ஆணையர் கார்த்திகேயன் ரூ.1 லட்சத்துக்கான கல்வி நிதியுதவியை காசோலையாக வழங்கினார். அவருக்கு தாயும் மகளும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். மேலும், ராஜேஸ்வரி அளித்த புகார்மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு துணை ஆணையர் உத்தரவிட்டார்.

 

The post கல்லூரி மாணவிக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி appeared first on Dinakaran.

Related Stories: