மலையாள சினிமாவில் ஹேமா கமிட்டி அறிக்கையால் ஏற்பட்ட புயல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான ஒரு சில நாளிலேயே மோகன்லால் தலைமையிலான மலையாள நடிகர்கள் சங்க நிர்வாகிகள் அனைவரும் கூண்டோடு பதவியை ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே மலையாள நடிகர்கள் சங்கத்தில் பிளவு ஏற்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சங்கத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட நடிகர்கள் புதிய தொழிற்சங்கத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர்கள் மலையாள சினிமா தொழில்நுட்ப கலைஞர்கள் சங்கமான பெப்கா நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது மலையாள சினிமாதுறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
* வாக்குமூலம் அளித்தவர்களிடம் 10 நாட்களுக்குள் விசாரணை
ஹேமா கமிட்டியின் முழு அறிக்கை சிறப்பு விசாரணைக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று முன்தினம் திருவனந்தபுரத்தில் சிறப்பு விசாரணைக் குழுவின் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
ஹேமா கமிட்டி முன்பு வாக்குமூலம் கொடுத்த நடிகைகளிடம் விரைவில் விசாரணை நடத்த இந்த குழு தீர்மானித்துள்ளது. இந்த விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே வாக்குமூலம் கொடுத்தவர்களிடம் கூடுதல் விசாரணை நடத்த 4 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழு 10 நாட்களுக்குள் அனைவரிடமும் விசாரணை நடத்த தீர்மானித்துள்ளது.
The post ஹேமா கமிட்டி அறிக்கையால் புயல் மலையாள நடிகர்கள் சங்கத்தில் பிளவா? புதிய சங்கம் உருவாக்க திட்டம் appeared first on Dinakaran.