×

வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணியினர் இன்று சென்னை வருகை

* நாளை முதல் சேப்பாக்கத்தில் 5 நாள் பயிற்சி முகாம்

சென்னை: வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி.20 போட்டிகளில் ஆட உள்ளது. இதில் முதல் டெஸ்ட் வரும் 19ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கி மீண்ட ரிஷப் பன்ட் 2 ஆண்டுக்கு பின் டெஸ்ட் அணிக்கு திரும்பி உள்ளார். விராட் கோஹ்லி, கே.எல்.ராகுல், பும்ரா என முன்னணி வீரர்கள் அனைவரும் இடம்பெற்றுள்ளனர். இந்த டெஸ்ட் தொடங்குவதற்கு முன் சேப்பாக்கத்தில் இந்திய அணியினருக்கு 5 நாள் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. நாளை முதல் பயிற்சி முகாம் தொடங்குகிறது. இதற்காக கேப்டன் ரோகித்சர்மா, விராட் கோஹ்லி, பும்ரா உள்ளிட்ட அனைத்து வீரர்களும் இன்று சென்னை வருகின்றனர். அவர்கள் நாளை முதல் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மேற்பார்வையில் பயிற்சியை தொடங்குகிறது.

அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக தென்ஆப்ரிக்காவைச் சேர்ந்த முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் மோர்னே மோர்கல் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் அணியுடன் இணைந்து நாளை முதல் பணியை தொடங்க உள்ளார். இந்திய அணியில் சர்ப்ராஸ்கான் இடம்பெற்றிருக்கிறார். ஆனால் பயிற்சி முகாமுக்கு சர்ப்ராஸ்கான் வர வேண்டாம் என்று தேர்வு குழு அறிவித்திருக்கிறது. அதற்கு பதிலாக துலீப் கோப்பை தொடரின் 2வது சுற்றில் விளையாடுமாறு அறிவுத்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருக்க அவர் மாட்டார் என்றும் அதற்கு பதிலாக கே எல் ராகுலுக்கு தான் வாய்ப்பு கிடைக்கும் என உறுதியாகி இருக்கிறது. இந்த நிலையில் சர்ப்ராஸ் கான் தேவையில்லாமல் பயிற்சி முகாமில் பங்கு பெறுவதற்கு பதில் துலீப் கோப்பை தொடரில் விளையாடினால் அது அவருடைய பேட்டிங்கிற்கு நல்லதாக இருக்கும் என்ற முடிவில் தேர்வு குழு இவ்வாறு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. சாம்பியன்ஷிப் டெஸ்ட் தொடருக்கான புள்ளி பட்டியலில்இந்தியா தற்போது முதலிடத்தில் உள்ளது.

இதனை தக்க வைத்துக்கொள்ள உள்நாட்டில் நடைபெறும் 2 டெஸ்ட்டிலும் வெற்றிபெறுவது முக்கியம். வங்கதேச அணி, பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் தொடரை 2-0 என முதன்முறையாக கைப்பற்றி கவனம் ஈர்த்துள்ளது. இதனால் அந்த அணியை குறைத்து மதிப்பிட முடியாது. வங்கதேச சுழற்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ளும் வகையில் இந்திய அணியின் பயிற்சிவியூகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் கான்பூரில் வரும் 27ம் தேதி தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி சென்னை டெஸ்ட் முடிந்த பின்னர் அறிவிக்கப்படலாம். முதல் டெஸ்ட்டில் இந்தியா வெற்றிபெற்றால், பும்ராவுக்கு 2வது டெஸ்ட்டில் ஓய்வுஅளிக்கப்படும் என தெரிகிறது.

வங்கதேச அணி 15ம் தேதி வருகை
இந்தியாவுக்கு எதிரான தொடரில் விளையாடும் வங்கதேச அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஓரிருநாளில் அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. பாகிஸ்தான் தொடரில் ஆடிய அனைத்து வீரர்களும் இடம்பெறக்கூடும். வரும் 15ம் தேதி வங்கதேச அணி சென்னை வர உள்ளது. இந்நிலையில் அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் லிட்டன் தாஸ் அளித்தபேட்டியில், பாகிஸ்தானுக்கு எதிராக நாங்கள் மிகவும் சிறப்பாக விளையாடியுள்ளோம். ஆனால் அந்த வெற்றியை கடந்த காலமாக நினைத்து மறந்துவிட்டு இந்தியா தொடர் பற்றி சிந்திக்கவேண்டும். எங்கள் முன்னால், ஒரு பெரிய சவாலான தொடர் உள்ளது. இந்தியா எப்போதும் சிறந்த அணி. எனவே இது எங்களுக்கு சவாலான தொடராக இருக்கும் என்று நினைக்கிறேன்,” என்றார்.

The post வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணியினர் இன்று சென்னை வருகை appeared first on Dinakaran.

Tags : Bangladesh ,Chennai ,Bangladesh cricket team ,India ,Dinakaran ,
× RELATED இந்தியாவை வீழ்த்த முடியும் என்ற...