மகாவிஷ்ணு சர்ச்சை விவகாரம்: அசோக் நகர் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியை தமிழரசி மீண்டும் விளக்கம்

சென்னை: மகாவிஷ்ணு சர்ச்சை விவகாரம் தொடர்பாக அசோக் நகர் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியை தமிழரசி மீண்டும் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் அரசுப் பள்ளி ஒன்றில் பாவம், புண்ணியம் குறித்து மகாவிஷ்ணு என்பவரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த நிகழ்ச்சியில், பார்வை மாற்றுத் திறனாளி ஆசிரியரை அவமதித்ததாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா திரும்பிய மகாவிஷ்ணுவை, சென்னை விமான நிலையத்திலேயே காவல்துறையினர் கைது செய்தனர். அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சமூக வலைதளங்களில் இந்த காட்சிகள் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இரண்டு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் இடமாற்றம் செய்யப்பட்டனர். மகாவிஷ்ணுவின் பேச்சைக் கண்டித்து மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து, சைதாப்பேட்டை காவல்நிலையம் மற்றும் அசோக் நகர் காவல்நிலையத்தில் அவர் மீது புகார்கள் அளிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் விசாரணை நடத்தி வருகிறார். இந்த நிலையில் மகாவிஷ்ணு சர்ச்சை விவகாரம் குறித்து அசோக் நகர் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியை தமிழரசி மீண்டும் விளக்கம் அளித்துள்ளார்.

மாறுபட்ட தகவல்களை கூறியதால் விளக்கத்தை ஏற்க மறுத்த பள்ளிக்கல்வி இயக்குனர் உண்மையான தகவல்களை கூற வேண்டும் என கண்டித்திருந்தார். இதை தொடர்ந்து நேற்று 2வது முறையாக புதிய விளக்கத்தை தமிழரசி அளித்துள்ளார். அதில், மகாவிஷ்ணுவை அறிமுகம் செய்து வைத்தது யார்? நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தது யார்? போன்றவற்றை கடிதத்தில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யாருடைய அனுமதியின் பேரில், மகாவிஷ்ணு பள்ளிக்கு அழைத்து செல்லப்பட்டார் போன்ற கேள்விகளுக்கும் தமிழரசி விளக்கம் அளித்துள்ளார். விசாரணை முடிவடைந்துவிட்டதால், இன்றோ அல்லது நாளையோ, தலைமை செயலாளரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post மகாவிஷ்ணு சர்ச்சை விவகாரம்: அசோக் நகர் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியை தமிழரசி மீண்டும் விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: