தூத்துக்குடி சிறையில் மோதல் சம்பவம்: 46 கைதிகள் மீது 6 பிரிவுகளில் வழக்கு


தூத்துக்குடி: தூத்துக்குடி பேரூரணி சிறையில் கைதிகள் இரு பிரிவுகளாக மோதிக் கொண்டதில் டியூப் லைட்டுகள், சிசிடிவி கேமரா, டிவி ஆகியவை உடைக்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக 46 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, அவர்கள் பல்வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே பேரூரணியில் மாவட்ட சிறைச்சாலை உள்ளது. இங்கு நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், குமரி மாவட்டங்களைச் சேர்ந்த 215 விசாரணை கைதிகள் மற்றும் தடுப்புக் காவல் கைதிகள் மொத்தம் 5 தொகுதிகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறையில் கைதிகளுக்கு மின்விசிறி வசதி வழங்கப்பட்டுள்ளது.

தினமும் மாலையில் சிறைக்குள் அடைக்கப்படும் கைதிகள், இரவில் மின் விசிறிக்கு கீழே தூங்க இடம் பிடிப்பதில் அவர்களுக்கு இடையே அவ்வப்போது தகராறு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 2வது தொகுதியில் அடைக்கப்பட்டிருந்த 57 கைதிகளில் 46 பேருக்கு இடையே மின்விசிறியின் கீழே பாய் விரித்து படுப்பதில் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றி கைகலப்பானதில் கைதிகள் இரு பிரிவுகளாக பிரிந்து மோதிக் கொண்டனர். மேலும், சிறையில் ெபாருத்தப்பட்டிருந்த 17 டியூப் லைட்டுகள், எல்இடி டிவி, சிசிடிவி கேமரா, ஸ்விட்ச் போர்டு ஆகியவை உடைக்கப்பட்டன. இதுகுறித்து சிறைத்துறை உயரதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

மேலும் சம்பவம் குறித்து தட்டப்பாறை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில், சிறையில் மோதலில் ஈடுபட்ட 46 சிறை கைதிகள் மீது கொலை மிரட்டல், அரசு பணி செய்ய விடாமல் தடுத்தது, சிறைக்குள் கலவரத்தை ஏற்படுத்தி அரசு சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தது உள்ளிட்ட 6 பிரிவுகளில் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறைக்குள் இரு பிரிவுகளாக பிரிந்து மோதலில் ஈடுபட்ட இந்த 46 கைதிகளும், கன்னியாகுமரி, தென்காசி, திண்டுக்கல், தேனி, மதுரை ஆகிய மாவட்ட சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

The post தூத்துக்குடி சிறையில் மோதல் சம்பவம்: 46 கைதிகள் மீது 6 பிரிவுகளில் வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: