×

நாகை, கிருஷ்ணகிரி, நீலகிரி, சென்னை மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த சன் டி.வி. ரூ.6.85 கோடி நிதி உதவி

நாகை, கிருஷ்ணகிரி, நீலகிரி, சென்னை ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்த சன் டி.வி. 6 கோடியே 85 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் நினைவாக, ஏழை எளியோரின் கல்வி, மருத்துவ சிகிச்சை, சமூக மேம்பாடு உள்ளிட்ட நலத் திட்டங்களுக்காக சன் பவுண்டேஷன் மற்றும் சன் டி.வி. பல்வேறு அமைப்புகளுக்கு நிதி உதவி வழங்கி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்காக சன் டி.வி. 6 கோடியே 85 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது. இதற்கான காசோலையை நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் உறுப்பினர் செயலரும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சுதனிடம் சன் டி.வி. குழுமத்தின் நிர்வாக இயக்குநர் காவேரி கலாநிதி மாறன் வழங்கினார். தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் நோக்கில் நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் மூலம் நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி எனும் திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022 டிசம்பர் மாதம் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசின் நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் மூலமாக, சன் டி.வி. அளித்த இந்த நிதியின் மூலம் சென்னை, நாகை, கிருஷ்ணகிரி, நீலகிரி மாவட்டங்களில் உள்ள அரசுப்பள்ளிகளில் புதிய வகுப்பறை கட்டுமானம், வகுப்பறைகள் சீரமைத்தல், ஆய்வகங்கள் அமைத்தல், மேஜை, இருக்கைகள் வசதி, நாப்கின் இயந்திரங்களை நிறுவுதல் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் உறுப்பினர் செயலர் சுதன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக சுதன் மேலும் கூறியதாவது: சன் டி.வி. வழங்கும் இந்த நிதியின் மூலம், சென்னை, நாகை, கிருஷ்ணகிரி, நீலகிரி மாவட்டங்களில் மொத்தமாக 149 அரசு பள்ளிகளில் பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட உள்ளன. இந்த நிதியின் மூலம் சுமார் 23 ஆயிரம் அரசு பள்ளி மாணவர்கள் பயனடைவார்கள். இந்த 4 மாவட்டங்களில் உள்ள பின்தங்கிய பகுதிகளில் உள்ள அதிக மாணவர்கள் பயிலும், உதவிகள் கிடைக்காத, உடனடியாக உதவிகள் தேவைப்படுகிற பள்ளிகளை கண்டறிந்து, அந்த பள்ளிகளின் தேவைகள் குறித்து கேட்டறிந்து வசதிகள் செய்து தரப்படும். அதன்படி, சென்னை அண்ணா நகரில் 4 அரசுப் பள்ளிகளில் வகுப்பறைகள் சீரமைத்தல், போர்வெல் போடுதல் மற்றும் புதிய வகுப்பறை கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதேபோல் அடையாறு பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் புதிய பல்நோக்கு கொட்டகை அமைக்கப்பட உள்ளது.

நாகை மாவட்டத்தில் நாகை, கீழ்வேளூர், தலைஞாயிறு, திருமருகல், வேதாரண்யம் ஆகிய பகுதிகளில் உள்ள 129 பள்ளிகளில் புதிதாக நாப்கின் இயந்திரங்கள் வைக்கப்பட உள்ளன. கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் மேஜை, இருக்கைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, வகுப்பறைகள், ஆய்வுக்கூடம் சீரமைத்தல், ஸ்மார்ட் போர்டு அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. நீலகிரி மாவட்டத்தில், கூடலூரில் 11 பள்ளிகள், கோத்தகிரி, ஊட்டியில் தலா ஒரு அரசுப் பள்ளி என 13 அரசுப் பள்ளிகளிலும் புதிய கழிப்பறைகள் கட்டித் தரப்பட உள்ளன. அரசுப் பள்ளிகளை மேம்படுத்த நிதி பங்களிப்பு அளித்த சன் டி.வி. குழுமத்திற்கு நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த நிகழ்வின்போது நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் மாநில ஒருங்கிணைப்பாளர் காயத்ரி, திட்ட இயக்குநர் அஜித் மத்தாய், கார்ப்பரேட் தொடர்பு அலுவலர் சுவாமிநாதன் பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர்.

 

The post நாகை, கிருஷ்ணகிரி, நீலகிரி, சென்னை மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த சன் டி.வி. ரூ.6.85 கோடி நிதி உதவி appeared first on Dinakaran.

Tags : Sun TV ,Nagai ,Krishnagiri ,Nilgiris ,Chennai ,Union Minister ,Murasoli Maran ,Dinakaran ,
× RELATED சுகாதார நிலையங்கள் அமைக்க சன் டி.வி. ரூ.2.93 கோடி நிதிஉதவி