நாளை மறுநாள் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்; கொசப்பேட்டையில் சிலைகள் விற்பனை மும்முரம்: மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தால் விலை உயர்வு

பெரம்பூர்: தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகள் இந்து மதத்தினரால் கொண்டாடப்பட்டாலும் தென்னிந்தியாவில் மட்டுமே விநாயகர் சதுர்த்தி விழாவை மிகவும் விமரிசையாக கொண்டாடுகின்றனர். ஆனால், இந்தியா முழுவதும் இந்து மதத்தினர் அனைவராலும் கொண்டாடப்படுகிற ஒரு பண்டிகை என்றால் அது விநாயகர் சதுர்த்தியை கூறலாம். இந்து மதத்தினர் மட்டுமின்றி அவர்களோடு சேர்ந்து பிற மதத்தினரும் இந்த பண்டிகையை சகோதர உணர்வோடு கொண்டாடி வருகின்றனர். இதற்கு உதாரணமாக, புளியந்தோப்பு பகுதியில் இஸ்லாமியர் ஒருவர் விநாயகர் சிலையை வைத்து வழிபாடு நடத்தியதை கூறலாம்.

வட மாநிலங்களிலும் மிகப்பெரிய சிலைகளை வைத்து வழிபாடுகளை நடத்தி சிலைகளை கடலில் கரைப்பார்கள். அதேபோன்று தமிழகத்திலும் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மிகப்பெரிய சிலைகளை வைத்து ஊர்வலமாக கொண்டு சென்று கடலில் கரைக்கும் பழக்கம் இருந்து வந்தது. மிகப்பெரிய சிலைகளை கொண்டு செல்லும்போது பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன. குறிப்பாக சில ஆண்டுகளுக்கு முன்பு தி.நகர் பகுதியில் வைக்கப்பட்ட ஒரு சிலையை கொண்டு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். அப்போது வேறு வழியில்லாமல் விநாயகர் சிலையை சேதப்படுத்தி கொண்டு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இது பலருக்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. எனவே இதுபோன்ற தர்ம சங்கடங்கள் ஏற்படக் கூடாது என்பதற்காக அரசு விநாயகர் சிலைகளை வைக்கவும், வழிபாடுகளை நடத்தவும் பல்வேறு வழிகாட்டி நெறிமுறைகளை வகுத்துள்ளது.

அதன்படி, சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் சிலைகள் இருக்க வேண்டும், பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளை பயன்படுத்தக் கூடாது, பிளாஸ்டிக் தர்மாகோல் ரசாயன பொருட்கள் அல்லது ரசாயனக் கலவைகளை பயன்படுத்தக் கூடாது, சிலைகள் 10 அடிக்கு மேல் இருக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டி நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
இதை பின்பற்றி ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பகுதியிலும் வைக்கப்படும் விநாயகர் சிலைகளுக்கு போலீசார் பாதுகாப்பு வழங்குகின்றனர். இன்னும் சில இடங்களில் விநாயகர் சிலைகளை பல்வேறு பொருட்களால் செய்து மூன்று நாள் அல்லது ஐந்து நாள் வைத்து வழிபட்டு அதன் பிறகு அதனை பிரித்து பிரசாதமாக பொதுமக்களுக்கு வழங்குகின்றனர்.

சென்னையிலேயே விநாயகர் சிலை விற்பனைக்கு பெயர் போன இடமாக விளங்குவது ஓட்டேரி கொசப்பேட்டை பகுதி. குயவர்கள் ஒரு காலத்தில் அதிகமான எண்ணிக்கையில் இந்த பகுதியில் வசித்து வந்தனர். அவர்கள் விநாயகர் சதுர்த்தி வருவதற்கு 3 மாதத்திற்கு முன்பே சிலைகளை தயாரிக்க ஆரம்பித்து அதற்கு வர்ணம் பூசி விற்பனை செய்தனர். ஆனால் ஆண்டுகள் செல்லச்செல்ல மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் குயவர்களின் பற்றாக்குறை காரணமாக தற்போது ஆந்திரா, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து செய்யப்படும் சிலைகளை வாங்கி அதனை கொசப்பேட்டை பகுதியில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

பல நூறு குடும்பங்கள் கொசப்பேட்டை பகுதியில் பொம்மை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது பெயர் சொல்கின்ற அளவில் மட்டுமே குயவர்கள் இந்த பகுதியில் வசித்து வருகின்றனர். ஒவ்வொரு பண்டிகையின் போதும் சீசனில் விற்கக்கூடிய பொருட்களை தயார் செய்து அந்த சீசனில் மட்டுமே விற்பனை நடைபெறுவதால் மற்ற நேரத்தில் இவர்களுக்கு வேறு எந்த வருமானமும் கிடைக்காத காரணத்தினால் இவர்கள் வேறு தொழிலை நோக்கிச் சென்று விட்டனர்.

கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி போன்ற நாட்களில் மட்டுமே இவர்களுக்கு வியாபாரம் அதிகளவில் நடைபெறும். மற்ற நேரங்களில் மண்பாண்டங்களால் ஆன பொம்மைகளை செய்து கோயில்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்த முறை கொசப்பேட்டை பகுதியில் வெளியூர்களில் இருந்து வாங்கி வரப்பட்ட எண்ணற்ற விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அரை அடியுள்ள குட்டி சிலைகள் முதல் 10 அடி உயரமுள்ள சிலைகள் வரை விற்கப்படுகின்றன. 30 ரூபாயிலிருந்து 30 ஆயிரம் ரூபாய் வரை சிலைகள் உள்ளன.

இதுகுறித்து, கொசப்பேட்டை பகுதியில் சிலை வியாபாரத்தில் ஈடுபடும் குயவர் கூறியதாவது:
ஒரு காலத்தில் விநாயகர் சதுர்த்தி என்றால் 3 மாதத்திற்கு முன்பு வெளியூர்களில் இருந்து கூட ஆட்கள் இங்கு வந்து தங்கி பணிகளை செய்து வந்தனர். அந்த காலங்கள் உருண்டோடி விட்டன. தற்போது சீசனில் மட்டும் விநாயகர் சிலைகளை வாங்கி கைமாற்றி விடுகிறோம். 10 அடிக்கு மேல் விநாயகர் சிலைகள் விற்பது கிடையாது. ஒரு காலத்தில் கொசப்பேட்டை பகுதியில் இருந்து மட்டுமே வந்து விநாயகர் சிலைகளை வாங்கிச் சென்றனர். ஆனால், தற்போது முடிச்சூர், செங்குன்றம், பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் கொசப்பேட்டை பகுதியில் படிப்படியாக வியாபாரம் குறைந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சிலைகளின் விலை ஏறிக்கொண்டே செல்கிறது. சென்ற ஆண்டு ₹5000க்கு விற்கப்பட்ட ஆறடி உயர விநாயகர் சிலை தற்போது ₹7000 வரை உயர்ந்துள்ளது. ஒவ்வொரு சிலைக்கும் ஆயிரம் ரூபாயிலிருந்து 2000 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் பெயின்ட் விலை உயர்வு காரணமாக இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு விநாயகர் சிலை விற்பனையும் மந்தமாகவே உள்ளது.

The post நாளை மறுநாள் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்; கொசப்பேட்டையில் சிலைகள் விற்பனை மும்முரம்: மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தால் விலை உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: