×

மணமக்கள் விரும்பும் திருமண உடைகள்!

நன்றி குங்குமம் தோழி

திருமண உடைகள் எப்போதுமே ஸ்பெஷல்தான். குறிப்பாக மணமகன் மற்றும் மணமகள் உடைகளைதான் திருமணத்திற்கு வருபவர்கள் அனைவரும் கவனிப்பார்கள். அதனாலேயே திருமண நாளின் போது தாங்கள் அணியப்போகும் ஆடைகள் எப்படி இருக்க வேண்டும் என்று பிரத்யேகமாக டிசைன் செய்து கொள்கிறார்கள். மேலும் அந்த உடைகள் தனித்தன்மையோடு இருக்க வேண்டும் என்று எல்லா மணமக்களும் விரும்புகிறார்கள்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை திருமணத்திற்கு பெண்கள் சேலையும் ஆண்கள் வேட்டி சட்டையை அணிவதுதான் இன்று வரை வழக்கமாக இருந்து வருகிறது. அதனால் தங்களின் வரவேற்பு விழாவிற்கு காலத்திற்கு தகுந்தாற்போல தற்போது உடைகளை மாற்றிக் கொண்டுள்ளனர். வட இந்திய மாநிலங்களில் அணிந்திருக்கும் உடைகளான லெஹங்கா, கவுன், ஷராரா போன்ற உடைகளைதான் தற்போது பெரும்பாலான மணப்பெண்கள் அணிகின்றனர். அதே போல ஆண்களும் குர்தா, கோட் சூட், ஷெர்வானி போன்ற உடைகளை தேர்வு செய்கிறார்கள். இதிலும் பல புதிய வரவுகளும் டிசைன்களும் வந்து கொண்டிருக்கிறது. இது குறித்து ஒரு சிறு தொகுப்பை காணலாம்.

வட இந்திய திருமணங்களில் மணமகனுக்கு ஷெர்வானி அல்லது பந்த்கலா சூட் போன்ற திருமண ஆடைகள்தான் இன்று வரை அவர்களின் பிரபலமான தேர்வாக இருந்து வருகிறது. இடுப்பில் பெல்ட்டுடன் கொண்ட ஆடை, நேரு ஜாக்கெட், பிரின்டெட் வடிவங்கள், பண்டி ஜாக்கெட்டுகள் மற்றும் எம்ப்ராய்டரி ஸ்டைல் என பல்வேறு டிசைன்களில் ஷெர்வானிகளை ஆடை வடிவமைப்பாளர்கள் செய்து வருகின்றனர். ஷெர்வானி உடை அணியும் போது மணமகனுக்கு ராஜா போன்ற தோற்றத்தை கொடுக்கும். அதனாலேயே இந்த உடையினை பெரும்பாலான மணமகன்கள் விரும்புகிறார்கள். இந்த ஆடைகளை லோஃபர்களுடன் சேர்த்து அணியலாம்.

பந்த்கலா உடை இரவு நேர வரவேற்பின் போது அணியக்கூடிய உடை. கம்பீரமான மற்றும் பிரமிக்க வைக்கும் தோற்றத்தை அளிக்கும். இதோடு தற்போது பலரும் விரும்புவது ஜோத்புரி சூட், பந்த்கலாஸ் – ப்ரீச்ஸ். இந்த உடைகளும் பந்த்கலா ஆடையினைப் போல் அழகானதொரு தோற்றத்தை கொடுக்கும். எந்த உடையாக இருந்தாலும் அதனை தேர்ந்தெடுக்கும் போது மிகவும் முக்கியமாக கவனிக்க வேண்டியது அதன் வண்ணங்கள்.

பொதுவாக திருமணத்திற்கு அணிய இருக்கும் இது போன்ற உடைகள் பிரகாச வண்ணங்கள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அதே போல் நிறத்திற்கு ஏற்ப அதன் டிசைன்களையும் தேர்வு செய்ய வேண்டும். மணமகன் ஷெர்வானி, குர்தா அல்லது சூட் அணிந்தாலும் அதில் ஒரு அழகான பூவினை வைத்துக் கொண்டால் பார்க்க ெராம்ப அழகாக இருக்கும். மேலும் மணமகளின் உடையின் நிறத்திற்கு ஏற்ப மணமகனுடைய உடை இருந்தால் இருவரும் ஜோடியாக மணமேடையில் நிற்பதை பார்க்க மிகவும் அழகாக இருக்கும்.

பெண்களுக்கும் பல்வேறு விதமான டிசைன்களில் உடைகள் உள்ளன. மேலும் அவர்களின் திருமண நாளில் இளவரசி போல் உணரவே விரும்புவார்கள். திருமண நாளன்று பாரம்பரிய உடையினை அணிந்தாலும் மற்ற விசேஷ நாட்களுக்கு லெஹங்கா, ஷராரா மற்றும் கவுன்கள் ேபான்ற உடைகளை அணியவே விரும்புகின்றனர். வட இந்திய திருமணங்களில் மட்டுமே பிரபலமாக இருந்து வந்த லெஹங்கா, தற்போது தென்னிந்திய திருமணங்களிலும் பிரபலமாகி வருகிறது. மணப்பெண் மட்டுமில்லாமல், அவர்களின் தோழிகளும் ரிசப்ஷன் போன்ற விசேஷத்திற்கு லெஹங்கா அணிந்து கொண்டு தங்களையும் ஒரு தேவதையாக வெளிக்காட்டவே விரும்புகிறார்கள். இதில் தோழிகள் அனைவரும் ஒரே டிசைன் மற்றும் நிறத்தினை தேர்வு செய்ய விரும்புகிறார்கள். லெஹங்காவின் சிறப்பம்சமே அதில் செய்யப்படும் எம்ப்ராய்டரி மற்றும் ஜரிகை வேலைப்பாடுகள்தான். இவை மணப்பெண்ணுடைய தோற்றத்தினை மேம்படுத்தி காட்டுகிறது.

திருமணத்தின் மாலை நேர நிகழ்ச்சிகளுக்கு கவுன்கள் சிறந்த தேர்வாகும். சீக்வின்ஸ் டிசைன்கள், மணிகள், பூக்கள் போன்ற பல்வேறு வகையான டிசைன்களைக் கொண்ட கவுன்கள் மணப்பெண்ணின் அழகை மேலும் மெருகேற்ற உதவுகிறது. இவை பல்வேறு வகையில் நவீன டிசைன்களில் இருப்பதால் கிராண்டான லுக்கை கொடுக்கிறது. அடுத்து மணப்பெண்ணுக்கு கிராண்டான மற்றும் நவநாகரீக லுக்கை கொடுக்க அனார்கலி ஸ்கர்ட் மற்றும் டிசைனர் பிளவுஸ் சிறந்த தேர்வாகும். இரவு பார்ட்டிகளில் லேசான டோன்களைக் கொண்ட காட்டன் அனார்கலி சூட்கள் சிறந்தவை. பருத்திப்பட்டு, சாந்தேரி பருத்தி ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் அனார்கலிகள் மணப்பெண்ணுக்கு வசதியாகவும் அதே சமயம் கிராண்டான தோற்றத்தினை கொடுக்கும்.

லெஹங்கா மற்றும் கவுன் போன்ற உடைகள் அதன் பிரமாண்ட தோற்றத்தை கொடுத்தாலும், அதனை திருமண நாளைத் தவிர நாம் வேறு தினங்களில் அணியப்போவதில்லை. மேலும் இதில் செய்யப்படும் வேலைப்பாடுகளால் அதன் விலையும் அதிகம் என்பதால், அதனை பலரால் விலை கொடுத்து வாங்க முடியாது. ஆனால் அவர்களுக்கும் தங்களின் திருமண வரவேற்பன்று இது போல் அழகான உடையினை அணிய விருப்பம் இருக்கும்.

இவர்களுக்காகவே இந்த உடைகளை வாடகை முறையில் ஆடை வடிவமைப்பாளர்கள் வழங்கி வருகிறார்கள். ஒரு நாள் வாடகைக்கு இந்த உடைகளை அணிந்து கொண்டு மீண்டும் அவர்களிடமே கொடுத்துவிடலாம். உடைகளை வாடகைக்கு வாங்குவதால், அதற்கான முழு தொகை கொடுக்காமல், அதே சமயம் பிடித்தமான உடைகளை அணிந்து கொண்ட மனத் திருப்தியும் ஏற்படும்.

தொகுப்பு: மா.வினோத்குமார்

The post மணமக்கள் விரும்பும் திருமண உடைகள்! appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED இனி கல் தொடாது கை!