சின்ன வயதில் மாந்தோப்பில் கல் அடித்து மாங்காய் தின்ற அனுபவம் உண்டல்லவா? தோட்டக்காரரிடத்திலோ, அப்பாவிடத்திலோ, பெரியப்பா விடத்திலோ, பிரம்படியோ தலையில் குட்டோ வாங்கியிருப்போம். அல்லது கோபமான முறைப்புக்காவது ஆளாகி நிலைகுலைந்திருப்போம். ஆனால், நபிகளார் காலத்தில் வாழ்ந்த குழந்தைகளுக்கு, அந்தப் பிரச்னை கிடையாது. குழந்தைகள் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தார் அவர். நபிகளார் எள் என்றால் எண்ணெயாக நிற்கும் நபித் தோழர்களும், அவ்வாறே நடந்துகொண்டனர். மதீனாவில் ஒருமுறை ஒரு சிறுவனை அவனது குறும்புகளையும் தொல்லைகளையும் தாங்க முடியாமல் நபிகளாரிடம் சில பெரியவர்கள் அழைத்து வந்தனர்.
மதீனாவாசிகளின் பேரீச்சம் பழத் தோட்டங்களில் கல்லெறிந்து பழம் பொறுக்கித் தின்பது அந்தப் பொடியனின் பொழுது போக்கு. இது அந்தப் பெரியவர்களுக்கு பெரிய தலைவலியாக இருந்தது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அந்தச் சிறுவனின் போக்கு பற்றி முறையிட்டனர். நபிகளாரின் முகம் சிறுவனைக் கண்டதும் மலர்ந்தது. அவனை அருகில் அழைத்து அவனது தலையை வாஞ்சையுடன் தடவியபடி புன்னகையுடன் கேட்டார்: ‘‘ஏன் கல்லெறிகிறாய்?’’சிறுவன் வெடுக்கென்று சொன்னான்: ‘‘பேரீச்சம்பழம் தின்னுவதற்கு.’’ நபிகளார், ‘‘கீழே விழுந்து கிடக்கும் பேரீச்சம் பழத்தை எடுத்துச் சாப்பிடு. கல் எறியாதே, என்ன!’’ என்று மென்மையாக அறிவுறுத்தினார்.
நபிகளாரின் அன்பான அறிவுரை அந்தச் சிறுவனின் உள்ளத்தைத் தொட்டது. முதுகில் நாலு சாத்து சாத்துவார், தலையில் ஓங்கிக் குட்டுவார், பிரம்பால் அடிப்பார் என்றெல்லாம் பயத்துடன் வந்த சிறுவனுக்கு அவருடைய அன்பான அணுகுமுறை இதமாக இருந்தது. இதயத்தைத் தொட்டது. மறுபடியும் அவன் கல்லை எடுக்கவே இல்லை. நபிகளார் குழந்தைகள் மீது கொள்ளைப் பிரியம் கொண்டவராக இருந்தார். ‘‘இறைத்தூதரைவிட குழந்தைகளிடம் பிரியமுடன் நடந்துகொண்ட ஒருவரை எனது வாழ்நாளில் நான் சந்திக்கவே இல்லை. அவரது மகன் தாயிடம் வளர்ந்து வந்தார். நபிகளார் எங்களையும் அழைத்துக் கொண்டு அங்கு செல்வார். அவர் தமது குழந்தையை எடுத்து முத்தமிடுவார்.
கொஞ்சுவார். பிறகு திரும்பி விடுவார்’’ என்று நபிகளாரின் நெருங்கிய தோழரான அனஸ்(ரலி) கூறுகிறார்.எங்காவது வெளியூர் பயணம் முடித்துவிட்டு மதீனாவுக்குத் திரும்பும்போது எல்லையிலேயே குழந்தைகள் நபிகளாரைச் சூழ்ந்துகொள்வார்கள். நபிகளார் எப்போதுமே அந்தக் குழந்தைகளுக்கு சலாம் சொல்வதில் முந்திக் கொள்வார். பிறகு நபிகளார் தமது ஒட்டகத்தை அமரச் செய்து தமக்கு முன்னாலும் பின்னாலும் சில குழந்தைகளையும் உட்கார வைத்துத் தம் பயணத்தைத் தொடர்வார். ஒட்டகச் சவாரி கிடைத்த சந்தோஷத்தில் குழந்தைகள் பெரு மகிழ்ச்சி கொள்வார்கள்.
– சிராஜுல் ஹஸன்
இந்த வாரச் சிந்தனை
‘‘குழந்தைகளுக்கு ஏழு வயதானால் தொழும்படி ஏவுங்கள். பத்து வயதான பிறகும் தொழவில்லை எனில் கண்டியுங்கள். பத்து வயதில் குழந்தைகளின் படுக்கைகளையும் தனித்தனியாக்குங்கள்.’’ (நபிமொழி)
The post இனி கல் தொடாது கை! appeared first on Dinakaran.