அம்பத்தூரில் கால்வாய்களில் ரோபோடிக் மல்டிபர்பஸ் எஸ்கவேட்டர் மூலம் தூர்வாரும் பணிகளைத் தொடங்கி வைத்தார் மேயர் பிரியா..!!

சென்னை: சென்னை அம்பத்தூர் பகுதியில் கால்வாய்களில் ரோபோடிக் மல்டிபர்பஸ் எஸ்கவேட்டர் இயந்திரங்கள் மூலம் தூர்வாரும் பணிகளைத் மேயர் பிரியா தொடங்கி வைத்தார். வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி, அம்பத்தூர் மண்டலத்திற்குட்பட்ட பாடிக்குப்பம் கால்வாய் மற்றும் திரு.வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட காந்தி நகர் கால்வாய் ஆகியவற்றில் ரோபோடிக் மல்டிபர்பஸ் எஸ்கவேட்டர் (Robotic Multi Purpose Excavator) இயந்திரங்கள் மூலம் தூர்வாரும் பணிகளை மேயர் பிரியா இன்று தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். இந்நிகழ்வில் மாண்புமிகு மேயர் பேசும்போது தெரிவித்ததாவது :

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் பராமரிக்கப்படும் நீர்நிலைகளில் 3.5 மீ. கீழ் அகலம் குறைவாக உள்ள கால்வாய்களில் ரோபோடிக் மல்டிபர்பஸ் எஸ்கவேட்டர் (Robotic Multi Purpose Excavator) போன்ற அதிநவீன இயந்திரங்களைப் பயன்படுத்தி தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. பெருநகர சென்னை மாநகராட்சியின் நீர்நிலைகளில் ஆகாயத்தாமரைகள், கழிவுகள் மற்றும் வண்டல்கள் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள ஏற்கனவே 4 ரோபோடிக் மல்டிபர்பஸ் எஸ்கவேட்டர் இயந்திரங்கள் உள்ளன. மேலும், கூடுதலாக 2 ரோபோடிக் மல்டிபர்பஸ் எஸ்கவேட்டர் (Robotic Multi Purpose Excavator) இயந்திரங்கள் ரூ.22.80 கோடி மதிப்பில் மாநகராட்சியின் சார்பில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் தலைமையில் 25.08.2024 அன்று சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் இந்த 2 ரோபோடிக் மல்டிபர்பஸ் எஸ்கவேட்டர் (Robotic Multi Purpose Excavator) இயந்திரங்களைப் பெருநகர சென்னை மாநகராட்சியின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். மேலும், பெருநகர சென்னை மாநகராட்சியில் ஏற்கனவே 2 ஆம்பிபியன் வாகனங்கள், 3 மினி ஆம்பிபியன் இயந்திரங்கள், மறுசுழற்சி வசதியுடன் கூடிய அதிக திறன் கொண்ட 7 நீர் உறிஞ்சும் ஜெட்டிங் இயந்திரம் பொருத்தப்பட்ட வாகனங்கள், 9 ஹைட்ராலிக் மரஅறுவை இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து நீர்நிலைகள் மற்றும் கால்வாய்களிலும் மழைநீர் எளிதில் செல்லும் வகையில் ஆகாயத்தாமரைகள், கழிவுகள் மற்றும் வண்டல்கள் ஆகியவற்றை அகற்றி தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள இந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார்,

வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, இன்று ஆம்பிபியன் இயந்திரங்கள் மூலம் அடையாறு மண்டலம், வார்டு-170, கோட்டூர்புரம் அருகிலுள்ள அடையாறு ஆறு மற்றும் இராயபுரம் மண்டலம், வார்டு-61, வடக்கு பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவற்றிலும், மினி ஆம்பிபியன் இயந்திரங்கள் மூலம் பெருங்குடி மண்டலம், வார்டு-191, ஜல்லடியான்பேட்டை, அடையாறு மண்டலம், வார்டு-177, பிள்ளையார் கோயில் தெரு அருகிலுள்ள வேளச்சேரி குளம் மற்றும் மாதவரம் மண்டலம், வார்டு-27, மணலி ஏரி ஆகியவற்றிலும், ரோபோடிக் மல்டிபர்பஸ் எஸ்கவேட்டர் இயந்திரங்கள் மூலம் திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-74, ராஜீவ் காந்தி நகர் அருகிலுள்ள ஏகாங்கிபுரம் கால்வாய், வளசரவாக்கம் மண்டலம், வார்டு-143, நொளம்பூர் கால்வாய், அண்ணாநகர் மண்டலம், வார்டு-106, தமிழர் வீதி, விருகம்பாக்கம் கால்வாய், அடையாறு மண்டலம், வார்டு-169, இரயில்வே பாலம் அருகிலுள்ள ரெட்டி குப்பம் கால்வாய், திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-72, புளியந்தோப்பு பவர்மில் சாலை, காந்தி கால்வாய், அம்பத்தூர் மண்டலம், வார்டு-90, புதூர் நகர் பிரதான சாலை, பாடி கால்வாய் ஆகியவற்றிலும் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

மேலும், குஜராத்திலிருந்து வாடகைக்கு வரவழைக்கப்பட்ட ட்ரைன் மாஸ்டர் இயந்திரம் மூலம் கேப்டன் காட்டன் கால்வாயில் வண்டல்கள் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிகழ்வுகளின்போது, சட்டமன்ற உறுப்பினர்கள் ஜோசப் சாமுவேல் (அம்பத்தூர்), திரு.தாயகம் கவி (திரு.வி.க.நகர்), மத்திய வட்டார துணை ஆணையாளர் கே.ஜெ.பிரவீன் குமார், இ.ஆ.ப., நிலைக்குழுத் தலைவர் (பொதுசுகாதாரம்) டாக்டர் கோ.சாந்தகுமாரி, மண்டலக்குழுத் தலைவர் .பி.கே.மூர்த்தி, மாமன்ற உறுப்பினர்கள் டி.எஸ்.பி.இராஜகோபால், சா. உமா, திரு.மு.சரவணன், தலைமைப் பொறியாளர் எஸ்.ராஜேந்தின் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post அம்பத்தூரில் கால்வாய்களில் ரோபோடிக் மல்டிபர்பஸ் எஸ்கவேட்டர் மூலம் தூர்வாரும் பணிகளைத் தொடங்கி வைத்தார் மேயர் பிரியா..!! appeared first on Dinakaran.

Related Stories: