பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு அதிக பாரம் ஏற்றி சென்ற 20 லாரிகள் பறிமுதல்

*ரூ.13 லட்சம் அபராதம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை அருகே உள்ள சில குவாரிகளிலிருந்து, கனரக வாகனங்களில் தடையை மீறி அதிக டன் கனிம வளம் கொண்டு செல்வதாக வருவாய்துறை மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு அடிக்கடி புகார் வருகிறது. இதையடுத்து கடந்த சில மாதமாக உடுமலைரோடு, பாலக்காடுரோடு, பல்லடம்ரோடு, மீன்கரைரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு அவ்வப்போது, விதிமீறிய கனரக வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

இதில், பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் உள்ள கல்குவாரிகளிலிருந்து எல்லை பகுதியில் உள்ள சோதனை சாவடிகளையும் தாண்டி கேரளாவுக்கு அதிக பாரத்துடன் விதிமீறி கொண்டு கற்கள் ஏற்றி செல்லப்படுவது அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து கோபாலபுரம், வளந்தாயமரம், கோவிந்தாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அரசு நிர்ணயித்த அளவைவிட கூடுதல் எடையில் கற்களை ஏற்றி சென்ற 20 லாரிகளை பறிமுதல் செய்தனர். பின் அதனை உடுமலைரோட்டில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டன. இதில் 10 லாரிகளுக்கு ரூ.13 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. விதிமீறல் லாரிகளுக்கு அபராத நடவடிக்கை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு அதிக பாரம் ஏற்றி சென்ற 20 லாரிகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: