கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி அனைத்து பூக்களின் விலையும் உயர்வு: வரத்து குறைவால் கேரட், எலுமிச்சை, வெங்காயம் விலை எகிறியது

சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில் கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி அனைத்து பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது. மேலும், வரத்து குறைவால் கேரட், எலுமிச்சை, வெங்காயம் விலை எகிறி உள்ளது. சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு விசேஷ நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்கள் இல்லாததால் அனைத்து பூக்களின் விலை குறைந்தது. ஒரு கிலோ மல்லி ரூ.300க்கும், ஜாதிமல்லி மற்றும் முல்லை ரூ.350க்கும் கனகாம்பரம் ரூ.600க்கும் அரளி ரூ.100க்கும் சாமந்தி ரூ.120க்கும் சம்பங்கி ரூ.180க்கும் பன்னீர் ரோஸ் ரூ.20க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.70 க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், நேற்று கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி கோயம்பேடு பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லி ரூ.600க்கும், ஐஸ்மல்லி ரூ.500க்கும் ஜாதிமல்லி மற்றும் முல்லை ரூ.450க்கும் அரளி பூ ரூ.150 க்கும் சாமந்தி ரூ.140க்கும் பன்னீர் ரோஸ் ரூ.70க்கும் சாக்லேட் ரூ.120க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோன்று, வரத்து குறைவால் கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயம், கேரட், எலுமிச்சை பழம் மீண்டும் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ கேரட் ரூ.130க்கும், வெங்காயம் ரூ.50க்கும், எலுமிச்சை பழம் ரூ.200க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் சென்னை புறநகர் கடைகளில் ஒரு கிலோ கேரட் ரூ.180க்கும், வெங்காயம் ரூ.70க்கும், எலுமிச்சை பழம் ரூ.240க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதேபோல் மற்ற காய்கறிகளான ஒரு கிலோ தக்காளி ரூ.25க்கும், உருளைகிழங்கு ரூ.45க்கும், சின்ன வெங்காயம் ரூ.80க்கும், பீன்ஸ் ரூ.50க்கும், பீட்ரூட் ரூ.18க்கும், சவ்சவ் ரூ.20க்கும், முள்ளங்கி முட்டைகோஸ் சுரக்காய் ரூ.15க்கும், வெண்டைக்காய், கத்திரிக்காய், நூக்கள் ரூ.25க்கும், காராமணி, பாவக்காய், சேம கிழங்கு ரூ.40க்கும், சேனைக்கிழங்கு ரூ.60க்கும், முருங்கைக்காய், காலிபிளவர், பச்சைமிளகாய், பீர்க்கங்காய் ரூ.30க்கும் கோவைக்காய் ரூ.20க்கும் கொத்தவரங்காய் ரூ.35க்கும் பட்டாணி ரூ.150க்கும் இஞ்சி ரூ.145க்கும் பூண்டு ரூ.300க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் துணைத் தலைவர் முத்துராஜ் கூறுகையில், கடந்த வாரம் விசேஷ நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்கள் இல்லாததால் குறைந்த விலையில் பூக்கள் விற்பனை செய்யப்பட்டது. கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு அனைத்து பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது. முகூர்த்த நாள் முடிந்த பிறகு பூக்களின் விலை படிப்படியாக குறையும் எனக் கூறினார். கோயம்பேடு காய்கறி மார்க்கெட் சிறு மொத்த வியாபாரிகளின் தலைவர் எஸ்.எஸ்.முத்துகுமார் கூறுகையில், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து குறைவால் கேரட், வெங்காயம், எலுமிச்சை பழம் விலை மட்டும் மீண்டும் உயர்ந்துள்ளது. இந்த விலைகள் இன்னும் ஒரு மாதம் நீடிக்கும் என்றார்.

The post கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி அனைத்து பூக்களின் விலையும் உயர்வு: வரத்து குறைவால் கேரட், எலுமிச்சை, வெங்காயம் விலை எகிறியது appeared first on Dinakaran.

Related Stories: