உன்னத உறவுகள்

நன்றி குங்குமம் தோழி

இளமை கொண்டாட்டம்!

எத்தனையோ உறவுகளுடன் அன்று சுகமாக வாழ்ந்து, மகிழ்ச்சியுடன் கூட்டமாக வாழ்ந்து வந்த நம்மில் பலர், இன்று தனித்து நிற்பது போல் உணர்கிறார்கள். அவர்களின் ஒன்றிரண்டு பிள்ளைகள் அவர்களுக்கு பிற்காலம் எப்படியெல்லாம் வாழ்வார்களோ? உடல் பலமும் வசதிகளும் இருக்கும் வரை எந்த சிரமமும் தெரியாது. ஆனால் அவர்களில் யாராவது ஒருவர் தனித்து விடப்பட்டால், அவர்களுக்கு முன்னோர்கள் போல் மலரும் நினைவுகள் என்று எதுவும் இருக்காது. காரணம், ஓய்வு பெறும் வரை உழைப்பில் ஓட்டி விடுகிறார்கள். அன்றைய சூழலில், சிக்கலான சூழ்நிலையை கையாளும் திறமை பெரியவர்களிடம் இருந்தது. வாழ்வின் பலப்பல இன்னல்களை தீர்க்கும் ஆலோசகர்களாக அவர்கள் செயல்பட்டார்கள். அத்தகைய மூதாதையர்களை தாத்தா, பாட்டிகளை இளைஞர்கள் இயந்திரமயமான வாழ்க்கையில் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எல்லோருக்கும் அதே வயது முதிர்ச்சி வரும் என்பதை உணர்ந்து யோசிக்கலாமே! பெரியவர்களின் உறவு குடும்பத்தில் முன்னோடியாக திகழ்ந்தால், குடும்பங்கள் பிரிவதேயில்லை. தாமரை இலை தண்ணீர் போல் ஒட்டாமல் போனால், குடும்பங்கள் உடைந்து சிதறிப் போயிருக்கின்றன. அப்படி அதிகாரத்துடன் திகழ்ந்த பல முதியவர்கள் இன்று முதியோர் இல்லங்களில் காணப்படுகிறார்கள். பாசம், பரிவு, அக்கறை, ஆதங்கம், கலாச்சாரம், ஆரோக்கியம், வாழும் முறை ஆகிய அனைத்தையும் செயல் முறையில் கற்பிக்கும் பல்கலைக்கழகங்களாகத் திகழ்ந்தார்கள் நம் மூத்தோர்.

பண்டிகைகள் வந்தாலே அப்பொழுது பிள்ளைகளுக்குக் கொண்டாட்டம்தான். அதுவும் நவராத்திரி விழா ஆரம்பித்தால் போதும்! இன்று பள்ளிகளில் மாறுவேடப் போட்டி நடப்பது போல, அன்று வீடுகளில் பிள்ளைகளுக்கு மாறுவேடம் அணிவிப்பது மிகவும் சிறப்பாக கருதப்பட்டது. கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கிருஷ்ணர் வேஷம் போடுவது வழக்கம். அதன் பிறகு அக்கம் பக்கத்து தோழிகள் நண்பர்களுடன் அனைவரும் தனித்தனி குழுக்களாக தெருவின் ஒவ்வொரு வீட்டிற்கும் கொலு பார்க்க கிளம்பி விடுவார்கள்.

குட்டிப் பெண்கள் ஒவ்வொரு வீட்டிலும் பாட்டுப் பாட வேண்டும். அதன் பிறகுதான் தாம்பூலமும், சுண்டலும் தருவார்கள். யார் நிறைய சேகரித்து வந்தார்கள் என்பது கூட ஒரு போட்டியாகவே இருந்தது. ஆண் பிள்ளைகளுக்கு வெறும் சுண்டல் மட்டும் தருவார்கள். பெண் பிள்ளைகளுக்கு தாம்பூலம், பரிசுப் பொருள் மற்றும் பழம் கூட தருவார்கள். நவராத்திரி மட்டுமில்லை, ஒவ்வொரு பண்டிகையும் குதூகலம்தான். தீபாவளிக்குப் பட்டாசுகளை தங்களுக்கு உரிய பங்கினை பெற்றுக் கொள்வார்கள். பின் அண்ணன், தம்பிகளிடம் ஏதாவது சலுகை பெற்று அவர்களிடம் கொஞ்சம் பெற்றுக் கொள்வார்கள்.

கார்த்திகை வரை பட்டாசு சண்டை வளரும். கார்த்திகை விளக்கு வைப்பதிலும் போட்டா போட்டி நடக்கும். இதில் தம்பிகள் அனைத்து வேலைகளையும் அக்காவிடம் கொடுத்துவிட்டு விளையாட சென்று விடுவார்கள். அம்மாவிடம் சொன்னால், ‘நீ பெண் பிள்ளைதானே, விட்டுக் கொடுத்து போகக் கூடாதா?’ என்பார். அப்பாவிடம் சொன்னால், தம்பியை திட்டுவார். ஆனால் மறுநாள் தம்பி சைக்கிளில் ஏற்றிச் செல்ல மாட்டான். “நேற்று என்னை மாட்டி விட்டாயா? இன்னைக்கு நீ கடைக்கு நடந்தே போ” என்பான். இப்படி எத்தனையோ மறக்க முடியாத நினைவுகள்.

கொலு நேரம் கோயில்களுக்குச் சென்று பெயின்ட் கோலம் போடுவது, பொம்மைகள் அடுக்கித் தருவது, விளக்குகள் வைக்க உதவுவது என பல்வேறுவிதமான பொழுது போக்குகள் செய்ததால் இன்று நமக்குள் சேவை மனப்பான்மை வளர்ந்துள்ளது என்று நினைத்துக் கொள்கிறோம். சிறுவயதில் யார் பாராட்டினாலும் அது தேனாகத்தான் இனித்தது. ஒரு உறவினர் பாராட்டி விட்டால் போதும், அனைத்து உறவுகளின் பாராட்டையும் பெற்றுவிட வேண்டுமென்கிற ஆசையில் கடினமாக உழைப்பார்கள். சித்தப்பா முதல் அத்தைவரை அனைவருக்கும் செல்லமாக வலம் வருவார்கள். அவர்களின் பெயரை மற்றக் குழந்தைகளுக்கு முன் மாதிரியாக எடுத்துச் சொல்வார்கள். எந்த போட்டியில் கலந்து கொண்டாலும் முதல் பரிசைப் பெற்று அனைவரின் பாராட்டையும் பெறுவார்கள். இன்று நம் வளர்ந்த பிள்ளைகளுக்கு இவை பற்றி ஒன்றுமே தெரிவதில்லை.

எங்கு சென்றாலும் யாரைப் பார்த்தாலும், ஏதாவது ஒரு உறவுப் பெயர் சொல்லித்தான் அறிமுகப்படுத்துவார்கள். சின்ன மாமியார் மகன், பெரிய அல்லது மூத்த மாமனார் மகள் என்றெல்லாம் அறிமுகப்படுத்துவார்கள். அதெல்லாம் புரியாது. ஆனாலும் வயதிற்கேற்ற உறவு முறையைக் கொண்டு அவர்களிடம் பாசத்தைக் காட்டுவோம். நம் நலனில், ஒவ்வொரு முன்னேற்றத்திலும் அவர்கள் அவசியம் முடிந்ததை செய்தார்கள்.

இதுபோல் நெருங்கிய உறவுகளாக இல்லாவிட்டாலும், நெருக்கமாக உணர்ந்தது நம் பிள்ளைப்பருவம். இன்று பிள்ளைகளுக்கு நெருங்கிய உறவுகள் கூட நெருக்கமில்லாமல் ஆகிவிட்டது. அப்பா, அம்மா இருவரும் வேலைக்குப் போக, பிள்ளைகள் அவரவர் வேலையில் மூழ்க, கையில் செலவுக்குப் பணமிருந்தால் போதும் என்கிற நிலமையில் காலம் ஓடுகிறது. ‘தனி சுதந்திரம்’ என்கிற ஒரு வார்த்தை ‘பாச பந்தம்’ என்கிற ரத்த உறவையே மாற்றி விடுகிறது.

ஒரு உறவினரின் மகன், தன் தலைமுடியை பொருந்தாத வகையில் வெட்டியிருப்பான். தன் தம்பி மகன் தானே என்கிற உரிமையில் அவனை திட்டினால், அவன் தாய் அதை விரும்பமாட்டார். தானே பையனுக்கு அனுமதி தந்தபின் இவர் யார் இதில் தலையிட என்று நினைப்பார். இதுதான் இன்றைய போக்கு. அன்று தாத்தா, பாட்டி முதல் குடும்பத்தில் அனைவருக்கும் தவறை தட்டிக் கேட்கவும் நல்லனவற்றை பாராட்டவும் உரிமை இருந்தது. ஒருத்தருக்கு பிடிக்காவிட்டாலும், மற்றவருக்குப் பிடித்திருந்தால் கலந்து பேசி அனைவரும் ஒப்புக் கொண்டனர்.

மார்கழி மாதத்தில் திருவெம்பாவை மகிழ்ச்சியான காலகட்டம். அம்மாவுடன் விடிகாலை எழுந்து, வாசலில் விளக்கு வைத்து, தெருவில் கோலம் போடுவது, பின் கோயிலுக்குச் சென்று திருப்பாவை பாடுவது, அப்பொழுது கோயிலில் தரும் ஒரு தொன்னை சூடான பொங்கல் என அனைத்தும் மலரும் நினைவுகளாகத் தோன்றின. தோழிகளுடன் சேர்ந்து ஒவ்வொரு வீட்டிலும் பெரிய பெரிய கோலங்கள் போட்டு கலர்ப்பொடி இடுவார்கள். யார் வீட்டுக்கோலம் பெரிது என்று போட்டி போடுவார்கள். அந்த குதூகலம் நம் பிள்ளைகளுக்குத் தெரிவதில்லை.

தொகுப்பு: சரஸ்வதி ஸ்ரீநிவாசன்

The post உன்னத உறவுகள் appeared first on Dinakaran.

Related Stories: