×

சமையலுக்கு பயோகாஸ் வழங்க 2,600 வீடுகளில் மீட்டர் பொருத்தம்

சேலம், ஆக.26: சேலத்தில் நகர காஸ் விநியோக திட்டத்தில் சமையலுக்கு பயோகாஸ் சப்ளை வழங்க 2,600 வீடுகளில் மீட்டர் பொருத்தும் பணி நிறைவடைந்துள்ளது. விரைவில் அந்த வீடுகளுக்கு இயற்கை எரிவாயு சப்ளை வழங்கவுள்ளனர்.

நாடு முழுவதும் காற்று மாசை கட்டுப்படுத்த, வாகன எரிபொருள் உபயோகம், சமையலுக்கான எல்பிஜி காஸ் உபயோகம், நிலக்கரி, விறகு போன்ற திட எரிபொருள் உபயோகம் போன்றவற்றை குறைத்து இயற்கை எரிவாயு பயன்பாட்டை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தவகையில், நிலத்திற்கு அடியில் இருந்து கிடைக்கும் இயற்கை எரிவாயுவை சேமித்து, வீட்டு காஸ் இணைப்பு, வாகன எரிபொருள், தொழிற்சாலை பயன்பாடு போன்றவற்றிற்கு பயன்படுத்த, நகர எரிவாயு விநியோக திட்டத்தை அரசு செயல்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம் (ஐஓசி) மூலம் கடந்த 2018ம் ஆண்டு இயற்கை எரிவாயு விநியோக திட்டம் தொடங்கப்பட்டது. ₹1,300 கோடியில் துவங்கிய இத்திட்டத்தில் மாவட்டம் முழுவதும் 3.35 லட்சம் வீடுகளுக்கும், 158 பெட்ரோல் பங்க்குகளுக்கும் இயற்கை எரிவாயு இணைப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சேலம் இரும்பாலை சாமுண்டிநகரில் இயற்கை எரிவாயு பிளாண்ட் அமைக்கப்பட்டு, கடந்த ஆண்டு மே மாதம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது சேலம் இரும்பாலை வளாகத்தில் உள்ள மோகன்நகரில் 50 வீடுகளுக்கு இயற்கை எரிவாயு இணைப்பு வழங்கினர்.

வீடுகளுக்கான சமையல் இயற்கை எரிவாயு விநியோகத்தை, விரிவாக்கம் செய்யும் பணியை தொடர்ந்து ஐஓசி இயற்கை எரிவாயு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த வகையில் தற்போது, பாகல்பட்டி, மாரமங்கலத்துப்பட்டி, இரும்பாலை, ஜாகீர்அம்மாபாளையம், சூரமங்கலம், சர்கார்கொல்லப்பட்டி, சங்கர்நகர், திருவாகவுண்டனூர், சூரமங்கலம் முல்லைநகர் ஆகிய இடங்களில் பதிக்கப்பட்டுள்ள விநியோக குழாய்கள் மூலம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு சப்ளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்காக அந்த பகுதிகளில் உள்ள 2600 வீடுகளில் மீட்டர் பொருத்தியுள்ளனர். சுமார் 300 வீடுகளில் இயற்கை எரிவாயுவை சப்ளை செய்து, பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். அந்த வீடுகளில் தற்போது இயற்கை எரிவாயு மூலம் பெண்கள் சமையல் செய்து வருகின்றனர்.

இயற்கை எரிவாயுவை கொண்டு சமையல் செய்யும்போது அதன் பயன்பாட்டு அளவு, அந்தந்த வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள மீட்டரில் பதிவாகும். அதனடிப்படையில் மாதந்தோறும், மின்கட்டணம் செலுத்துவது போல் செல்போன் செயலியில் இருந்து இயற்கை எரிவாயு உபயோகத்திற்கு கட்டணத்தை மக்கள் செலுத்த இயலும். மீட்டர் பொருத்தப்பட்டுள்ள ஒவ்வொரு பகுதிக்கும் படிப்படியாக சப்ளையை மேற்கொள்ள இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக ஐஓசி இயற்கை எரிவாயு பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ‘சேலத்தில் இயற்கை எரிவாயு பயன்பாட்டை அதிகரிக்க, தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது சூரமங்கலம் முல்லைநகர் பகுதியில் உள்ள வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டு, மீட்டர் பொருத்தி வருகிறோம். இதுவரையில் மாநகர் முழுவதும் 2,600 வீடுகளுக்கு இணைப்பு வழங்கி மீட்டர் பொருத்திவிட்டோம். இதில், 300 வீடுகளுக்கு சப்ளை வழங்கவிட்ட நிலையில், மீதியுள்ள வீடுகளுக்கு படிப்படியாக சப்ளை வழங்கப்பட்டு வருகிறது.

இதுபோக கூடுதலாக சேலம் குகை பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகள், அஸ்தம்பட்டி, அழகாபுரம், சூரமங்கலம் பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு விரைவில் இணைப்பு வழங்கவுள்ளோம். இதற்காக விநியோக குழாய் பதிக்கும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது,’ என்றனர்.

The post சமையலுக்கு பயோகாஸ் வழங்க 2,600 வீடுகளில் மீட்டர் பொருத்தம் appeared first on Dinakaran.

Tags : Salem ,Dinakaran ,
× RELATED திருட்டு வழக்கில் தலைமறைவானவர் கைது