ஊர்ந்து, தவழ்ந்து பதவிக்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு என்னை பற்றி பேச தகுதி இல்லை: அண்ணாமலை காட்டம்

சென்னை: ஊர்ந்து, தவழ்ந்து, காலில் விழுந்து பதவிக்கு வந்த தற்குறி எடப்பாடி பழனிசாமிக்கு என்னைப் பற்றி பேச எந்த அருகதையும் இல்லை என பாஜ தலைவர் அண்ணாமலை காட்டமாக கூறினார். சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று பாஜ பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், பாஜ மாநில துணை தலைவர்கள் கரு.நாகராஜன், நாராயணன் திருப்பதி, வி பி துரைசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பாஜ மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது: திமுக, அதிமுக இருவரும் பாஜவுக்கு எதிரிகள் தான். பிட்டிங் ஏஜென்ட் பார்ட்டியாக, டெண்டர் முறை விடும் கட்சியாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கட்சி மாறியுள்ளது. நேர்மை, நாணயத்தை பற்றி எடப்பாடி பழனிச்சாமி எனக்கு பாடம் எடுக்க வேண்டாம். எவரோ ஒருவரின் காலில் தவழ்ந்து பதவியைப் பிடித்த தற்குறி எடப்பாடி பழனிசாமி என்னைப் பற்றி பேச தகுதி இல்லை.

மாதம் மாதம் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பணத்தை கொடுத்து நாற்காலியை காப்பாற்றிய எடப்பாடி பழனி சாமி என்னைப்பற்றி பேசக்கூடாது. பாஜவுக்கு 2026 அரிய வாய்ப்பு, இந்த வாய்ப்பை விட்டு விட்டால் இதுபோல வாய்ப்பு மீண்டும் எப்போது வரும் என்பது தெரியாது. இவ்வாறு அண்ணாமலை பேசினார். தமிழிசை சவுந்திரராஜன், ‘‘எதையும் எதிர்பார்க்காமல் தானாக சேர்ந்த கூட்டம், இந்தக் கூட்டம். போர் நடக்கும் இடத்திற்கு தைரியமாக சென்று அமைதியை ஏற்படுத்துபவர் பிரதமர் மோடி. உலக அமைதிக்கான நோபல் பரிசு அடுத்த ஆண்டு பிரதமர் மோடிக்கு தான் வழங்க வேண்டும்’’ என்றார்.

The post ஊர்ந்து, தவழ்ந்து பதவிக்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு என்னை பற்றி பேச தகுதி இல்லை: அண்ணாமலை காட்டம் appeared first on Dinakaran.

Related Stories: