சொப்பன சுந்தரி –திரை விமர்சனம்

குடும்பத்தினரை தலைமுழுகிய அண்ணன் கருணாகரன், மைம் கோபியின் தங்கையை திருமணம் செய்து தனிக்குடித்தனம் செல்கிறார். அம்மா தீபா, மாற்றுத்திறனாளி அக்கா லட்சுமிப்பிரியா, படுத்த படுக்கையாக இருக்கும் அப்பா ஆகியோரை தன் தலையில் சுமந்து, குடும்பத்தை தைரியமாக நடத்துகிறார், நகைக்கடையில் வேலை பார்க்கும் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்நிலையில், நகைக்கடையில் அவர் எழுதிய கூப்பனுக்கு குலுக்கல் மூலம் பம்பர் பரிசாக கார் கிடைக்கிறது. அதை அபகரிக்க கருணாகரன் முயற்சிக்கிறார்.

காரை மீட்டுத்தர காவல்நிலையம் செல்லும் ஐஸ்வர்யா ராஜேஷை அடைய வலைவீசுகிறார், இன்ஸ்பெக்டர் சுனில் ரெட்டி. காரை வரதட்சணையாக கொடுத்தால், லட்சுமிப்பிரியாவை திருமணம் செய்வதாக வாக்குறுதி கொடுக்கிறார், சாரா. இறுதியில் கார் யாருக்கு கிடைத்தது? கருணாகரன் எதற்காக காரை அபகரிக்க முயற்சிக்கிறார்? சுனில் ரெட்டியிடம் சிக்கிய ஐஸ்வர்யா ராஜேஷின் கதி என்ன என்பது படம். முழு படத்தையும் தன் தோளில் சுமந்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் சுனில் ரெட்டியிடம் மோதும் காட்சிகளில், பூ ஒன்று புயலானது. நடிப்பிலும், ஆக்‌ஷனிலும் செஞ்சுரி அடித்துள்ளார்.

பேச முடியாத கேரக்டரில் லட்சுமிப்பிரியா உருக வைக்கிறார். தீபாவின் வெள்ளந்திப் பேச்சும், நடிப்பும் சீரியஸ் காட்சியிலும் சிரிக்க வைக்கிறது. கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி ஆகியோர் இயக்குனர் சொன்னதைச் செய்துள்ளனர். காமவெறி கொண்ட சுனில் ரெட்டி, கடைசியில் ஐஸ்வர்யா ராஜேஷிடம் அடி, உதை வாங்கி அம்பேலாகிறார். முற்பகுதியை விட பிற்பகுதியில் காட்சிகள் அதிகம் என்பதால் சோர்வு ஏற்படுகிறது. கதையுடன் இணைந்த காமெடியால் அதை பேலன்ஸ் செய்துவிடுகிறார், இயக்குனர் எஸ்.ஜி.சார்லஸ். பாலமுருகன், விக்னேஷ் ராஜகோபால் ஆகியோரின் ஒளிப்பதிவு இயல்பாக இருக்கிறது. அஜ்மல் இசைப் பாடல்களில் இதம். விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை படத்துக்கு பலம்.

The post சொப்பன சுந்தரி – திரை விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: