எச்சூர் காட்டு பகுதியில் மின் விளக்குகள் இன்றி இருளில் மூழ்கிய சாலை: நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

மாமல்லபுரம், ஆக 22: மாமல்லபுரம் அருகே எச்சூர் காட்டு பகுதியில் சாலையில் உள்ள மின்கம்பங்களில் விளக்குகள் இல்லாததால் சாலை இருளில் மூழ்கி காணப்படுகிறது. இதனால், பொதுமக்களிடம் மர்ம ஆசாமிகள் வழிப்பறியில் ஈடுபடுவதால், அங்குள்ள கம்பங்களில் மின் விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாமல்லபுரத்தில் இருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலை முக்கிய சாலையாகும். இச்சாலை, வழியாக அரசு மற்றும் தனியார் பேருந்துகள், தனியார் தொழிற்சாலை பேருந்துகள், டிப்பர் லாரிகள், கனரக சரக்கு வாகனம், சுற்றுலா வாகனம், வேன், கார், பைக்கு உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த சாலையில், எச்சூர் ஐயப்பன் கோயில் அருகே இருந்து புலியூர் சந்திப்பு வரை 1 கிமீ தூரத்துக்கு காட்டுப் பகுதி உள்ளது. இங்கு, பல ஆண்டுகளாக மின் விளக்குகள் இல்லாமல் இரவில் கும்மிருட்டாக காணப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனே அந்த இருள் சூழ்ந்த காட்டுப் பகுதியை கடந்து செல்கின்றனர். கடந்த 2022ம் ஆண்டு மாமல்லபுரத்தில் நடந்த 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக அதிகளவு மின்சாரம் தேவைப்பட்டதால், திருக்கழுக்குன்றம் துணை மின் நிலையத்தில் இருந்து, பூஞ்சேரி துணை மின் நிலையம் வரை 14 கிமீ தூரம் சாலையின் ஒருபுறம் தமிழ்நாடு மின்சாரத்துறை சார்பில் எச்டி மின் கம்பங்கள் நடப்பட்டு, மின் வயர்கள் மூலம் 33 கேவி திறன் கொண்ட மின்சாரம் கொண்டு வரப்பட்டது.

இதில், எச்சூர் காட்டுப் பகுதியில் நடப்பட்ட கம்பங்களில் மின்விளக்குகள் பொருத்தப்படாமல், 3 ஆண்டுகளாக வெறுமனே காட்சி தருகிறது. அந்த, இருள் சூழ்ந்த பகுதியை தங்களுக்கு சாதகமாக்கி இரவில் அவ்வழியே கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடம் மர்ம ஆசாமிகள் முகத்தை மூடிக் கொண்டு வழிப்பறி கொள்ளையில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக, தனியார் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்று இரவில் திரும்பி வரும் பெண்களை குறிவைத்து வழிப்பறி, சில்மிஷத்திலும் ஈடுபடுகின்றனர். இதனால், அவ்வழியே பயணிக்கும் பெண்கள் ஒருவித பயத்துடனே அப்பகுதியை கடந்து சென்று வருகின்றனர். இருள் சூழ்ந்த பகுதி என்பதால் அங்குள்ள வளைவில் வாகனங்கள் திரும்பும்போது, எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் ஒன்றோடொன்று மோதி அடிக்கடி சாலை விபத்துகளும் நடக்கிறது. அங்குள்ள, ஐயப்பன் கோயிலுக்கு எதிரே கடந்த 2 மாதங்களில் மட்டும் 10க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளது.

இது சம்பந்தமாக, எச்சூர் ஊராட்சி நிர்வாகத்துக்கும், மின்சார துறைக்கும் மின் விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும், கண்டும் காணாதது போல் அலட்சியமாக செயல்படுவதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, எச்சூர் ஊராட்சி நிர்வாகமும், மின்சார துறையும் அலட்சிய போக்கை கைவிட்டு வாகன ஓட்டிகள், பெண்களின் நலனை கருத்தில் கொண்டு, எச்சூர் காட்டுப் பகுதியில் சாலையோரம் உள்ள மின் கம்பங்களில், மின் விளக்குகள் பொருத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post எச்சூர் காட்டு பகுதியில் மின் விளக்குகள் இன்றி இருளில் மூழ்கிய சாலை: நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: