புதுகை மாவட்டம் திருமயத்தில் ₹2 கோடி மதிப்பில் புதிய நூலக கட்டிடம்

*கலெக்டர் திடீர் ஆய்வு

திருமயம் : திருமயத்தில் ரூ.2 கோடி மதிப்பில் கட்டப்படும் புதிய நூலக கட்டிடம், அங்கன்வாடி, அரசு பள்ளியில் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டு ஊழியர்களிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி திணறடிக்கச் செய்தார்.பெரும்பாலும் அரசு அலுவலகங்கள், பள்ளி உள்ளிட்டவைகளில் ஆய்வு என்பது முன்கூட்டியே தெரியப்படுத்தப்பட்டு ஊழியர்கள் தயார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்படுவர். இதற்கு மாறாக நேற்று காலை புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியில் மாவட்ட கலெக்டர் அருணா திடீர் ஆய்வு மேற்கொண்டார். இன்று (21ம் தேதி) திருமயத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்நிலையில் மாவட்ட கலெக்டர் அருணா, கூடுதல் கலெக்டர் அப்தாப் ரசூல் ஆகியோர் திருமயம் பகுதியில் உள்ள அங்கன்வாடி, அரசு பள்ளியில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டது சற்று பரபரப்பை ஏற்படுத்தியது. முதலாவதாக கடந்த வாரம் திறப்பு விழா கண்ட திருமயம் பாப்பாவயல் பகுதியில் உள்ள அங்கன்வாடிக்கு சென்ற கலெக்டர் அருணா அங்கு குழந்தைகள் வருகை பதிவேடு, குழந்தைகள் வருகை ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

இதனை தொடர்ந்து குழந்தைகள் எடை, உயரம் கணக்கிடும் கருவிகளை ஆய்வு செய்த போது குழந்தைகள் எடை எடுக்கும் மிஷின் இல்லாததை அறிந்து காரணம் கேட்டார். அதற்கு அங்கன்வாடி ஊழியர்கள் மலுப்பலான பதில் அளிக்கவே அருகில் இருந்த திருமயம் ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தரிடம் புதிய எடை மெஷின் அங்கன்வாடிக்கு வாங்கி கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார்.

இதனை தொடர்ந்து ஊராட்சி தலைவர் சிக்கந்தர் உடனடியாக புதிய எடை மெஷின் வாங்கி கொடுத்ததால் ஊராட்சித் தலைவருக்கு கலெக்டர் அருணா பாராட்டு தெரிவித்தார்.
பின்னர் சுமார் இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் தீரர் சத்தியமூர்த்தி நினைவு நூலகத்தை ஆய்வு செய்தார். அப்போது கட்டுமான பொருட்களின் தரம், கட்டிடத்தில் நீளம், அகலம் உள்ளிட்டவைகளை அளவை செய்து செயற்பொறியாளர் நாகவேல், உதவி செய்யப் பொறியாளர் முத்து ஜெயம், அரசு ஒப்பந்ததாரர் கணேசன் ஆகியோரிடம் கேள்வி எழுப்பினார்.

இதனைத் தொடர்ந்து சற்றும் எதிர்பாராதவாறு திருமயம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சென்ற கலெக்டர் அருணா அங்குள்ள பள்ளி கட்டிடத்தின் நிலைகள் குறித்து ஆய்வு செய்ததோடு சேதம் அடைந்து காணப்பட்ட பள்ளி கட்டிடத்தில் சில பகுதிகளை அதிகாரிகளிடம் சுட்டி காட்டினார். பின்னர் பள்ளி சமையலறைக்கு சென்ற கலெக்டர் அங்கு சமைக்கப்படும் உணவின் தரம் குறித்து சாப்பிட்டு பார்த்து ஆய்வு மேற்கொண்டு உணவின் தரம் மோசமாக உள்ளதாக கூறி சமையலருக்கு அறிவுரை வழங்கினர்.

மாணவிகளுக்கு வழங்கப்படும் முட்டை எண்ணிக்கையில் அளவீடு செய்து ஆசிரியர்கள், மாணவிகள் வருகை பதிவேட்டை ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து வகுப்பறைக்கு சென்று மாணவிகளிடம் கலந்துரையாடினார். மேலும் பாட புத்தகத்தில் உள்ள பாடங்களை வாசிக்க சொல்லி மாணவிகளிடம் கேள்வி எழுப்பினார்.

இதனிடையே நேற்று திருமயம் பகுதியில் யாரும் எதிர்பார்க்காதவாறு திடீரென ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் அருணாவால் அப்பகுதி சற்று பரபரப்புடன் காணப்பட்டது. ஆய்வின்போது திருமயம் தாசில்தார் புவியரசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கர், வெங்கடேசன் ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

The post புதுகை மாவட்டம் திருமயத்தில் ₹2 கோடி மதிப்பில் புதிய நூலக கட்டிடம் appeared first on Dinakaran.

Related Stories: