முதல்வரின் தனி செயலாளர்களான 3 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அந்தஸ்து உயர்வு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினின் தனி செயலாளர்களாக 3 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அந்தஸ்து உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. முதல்வரின் தனி செயலாளர்களில் முதலாவதாக என்.முருகானந்தம், 2வது தனி செயலாளராக உமாநாத், 3வது தனி செயலாளராக சண்முகம், 4வது தனி செயலாளராக அனு ஜார்ஜ் ஆகியோர் இருந்தனர். இந்நிலையில், முதல்வரின் தனி செயலாளராக இருந்த முருகானந்தம், தலைமை செயலாளராக நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டார். இதையடுத்து முதல்வரின் தனி செயலாளர்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தலைமை செயலாளர் என்.முருகானந்தம் நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில், பி.உமாநாத் ஐஏஎஸ் முதலமைச்சரின் தனி செயலாளர்களில் முதலாவது அதிகாரியாகவும், 2வதாக எம்.எஸ்.சண்முகம், அனுஜார்ஜ் 3வது செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து அரசு வெளியிட்ட மற்றொரு அறிவிப்பில், முதலமைச்சரின் தனி செயலாளர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி முதல்வரின் தனி செயலாளர் உமாநாத்துக்கு வணிக வரி, பொதுத்துறை, எரிசக்தி, நிதித்துறை, நெடுஞ்சாலை, தொழில் துறை, நகராட்சி நிர்வாகம், பொதுப்பணி, உள்ளிட்ட 13 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மற்றொரு தனி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சண்முகத்திற்கு வேளாண்மை, கூட்டுறவு, வீட்டு வசதி, முதல்வரின் அலுவலக நிர்வாகம், சட்டத்துறை, சட்டப்பேரவை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, இந்து அறநிலையத்துறை உள்ளிட்ட 12 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அனு ஜார்ஜிற்கு 11 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் பயண ஏற்பாடுகள், கால்நடை, பள்ளிக்கல்வி, விளையாட்டு, ஆதிதிராவிடத்துறை, சுகாதாரத்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை, சமூகநலத்துறை, சுற்றுச்சூழல் – காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை உள்ளிட்ட 11 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சரின் இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள லட்சுமிபதிக்கு 9 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கைத்தறி, தகவல் தொழில்நுட்பம், திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு துறை, போக்குவரத்து, சமூக சீர்திருத்த துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை, தொழிலாளர் நலத்துறை, சிறப்பு முயற்சிகள் துறை, சுற்றுலா உள்ளிட்ட 11 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

The post முதல்வரின் தனி செயலாளர்களான 3 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அந்தஸ்து உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: