முகுந்தராயபுரம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் மர்ம நபர்கள் வைத்த இரும்பு ராடால் சிக்னல் துண்டிப்பு: ரயில்வே போலீசார் விசாரணை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், முகுந்தராயபுரம் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலையில் சென்னை – பெங்களூர் செல்லும் ரயில்வே தண்டவாளத்தில் நேற்று மாலை திடீரென சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதனை பார்த்த ரயில் நிலைய மேலாளர், சிக்னல் துண்டிப்புக்கான காரணம் குறித்து தண்டவாளம் பகுதியில் ஆய்வு செய்தார். அப்போது தண்டவாளத்தில் இரும்பு ராடு ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இதேபோல், அதன் அருகே பெங்களூர் -சென்னை செல்லும் தண்டவாளத்தில் பெயின்ட் டப்பா மற்றும் கல் ஒன்றும் மர்ம நபர்கள் வைத்து சென்றுள்ளனர். இதன் காரணமாக சிக்னல் துண்டிக்கப்பட்டது தெரியவந்தது. ரயில் நிலைய மேலாளர் இதுகுறித்து காட்பாடி ரயில்வே நிர்வாகம் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவல் அறிந்து ரயில்வே போலீசார் அங்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். சென்னையில் இருந்து மோப்பநாய் சார்லஸ் வரவைக்கப்பட்டு அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். இருப்பினும் இரும்பு ராடு மற்றும் கல், பெயிண்ட் டப்பா வைத்து சென்ற மர்ம நபர்கள் விவரம் ஏதும் கிடைக்கவில்லை. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சரியான நேரத்தில் தண்டவாளத்தில் இருந்த கம்பி ,கல் ஆகியவற்றை கண்டுபிடித்து அகற்றப்பட்டதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மேலும், அந்த நேரத்தில் அந்த வழியாக ரயில்கள் ஏதும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

The post முகுந்தராயபுரம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் மர்ம நபர்கள் வைத்த இரும்பு ராடால் சிக்னல் துண்டிப்பு: ரயில்வே போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: