ரயில்வே மேம்பால பணிகள் மீண்டும் தொடக்கம்: பொதுமக்கள் வரவேற்பு

சிவகாசி: சிவகாசியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் நேற்று காலை மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிவகாசி – வில்லிபுத்தூர் சாலையில் சாட்சியாபுரம் ரயில்வே கிராசிங்கில் ரயில்வே மேம்பாலம் அமைக்க ரூ.61 கோடியே 77 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகளை கடந்த பிப்ரவரியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து கடந்த மாதம் 26ம் தேதி அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம்தென்னரசு ஆகியோர் பூமிபூஜை போட்டு பணிகளை தொடங்கி வைத்தனர்.

பூமிபூஜைகள் போட்டு 20 நாட்களுக்கு மேலாகிவிடட நிலையில் பல்வேறு காரணங்களால் பணிகள் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டன. தொடர்ந்து கடந்த 12ம் தேதி பணிகள் தொடங்கி 20 அடி வரை தோண்டிய நிலையில் பள்ளங்கள் மூடப்பட்டன. மாற்றுப்பாதைகள் சரி செய்த பிறகு பணிகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். இது தொடர்பான செய்தி தினகரன் நாளிதழில் வெளியாகியிருந்தது.

பணிகள் மீண்டும் தொடக்கம்:
இந்நிலையில் நேற்று காலை 8.30 மணி அளவில் சாட்சியாபுரம் ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் மீண்டும் தொடங்கியது. இதற்காக சிவகாசியில் மாற்றுப்பாதைகளில் பேரிகார்டு வைக்கப்பட்டு போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். சுமார் 3 மணி நேரம் ரயில்வே கேட் வழியாக டூவீலர், ஆட்டோ, கார் செல்ல அனுமதிக்கப்பட்டது. தொடர்ந்து அருகில் உள்ள அண்ணாமலையார் காலனி வழியாக டூவீலர், ஆட்டோ, கார் சென்றன.

மாற்றுப்பாதையில் செல்லும் வாகனங்கள்:
சாட்சியாபுரம் ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைப்பதால் ஏற்கனவே தி்ட்டமிட்டபடி சிவகாசியில் இருந்து வில்லிபுத்தூர் செல்ல கனரக வாகனங்கள் விளம்பட்டி, நதிக்குடி, அச்சம்தவிர்த்தான், நாச்சியார்பட்டி வழியாகவும், லாரி உள்ளிட்ட வாகனங்கள் விளாம்பட்டி, துரைச்சாமிபுரம், ஈஞ்சார்விலக்கு, கோப்பையநாயக்கன்பட்டி வழியாகவும், கார் மற்றும் பஸ்கள் ஒத்தப்புளி, ஆனையூர், அரசு கல்லூரி வழியாக வில்லிபுத்தூர் செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டது டூவீலர் மற்றும் ஆட்டோ மட்டும் வழக்கம் போல் சாட்சியாபுரம் ரயில்வே கேட் வழியாக சென்றன.

அதே போல் வில்லிபுத்தூரில் இருந்து சிவகாசி வரும் கனரக வாகனங்கள் சாமியார்மடம் விலக்கு வழியாக கங்காகுளம், செங்கமல நாச்சியார்புரம், சுக்கிரவார்பட்டி, வடமலாபுரம் சென்று அங்கிருந்து திருத்தங்கல் வழியாக சிவகாசிக்கு சென்றன. கங்காகுளம், செங்கமல நாச்சியார்புரம், திருத்தங்கல் வழியாக பேருந்துகள் சிவகாசிக்கு இயக்கப்பட்டன. லோடு ஆட்டோ, கார் ஆகியவை கங்காகுளம், செங்கமல நாச்சியார்புரம், ஒய்.ஆர்.டி.வி. பள்ளி வழியாக சிவகாசிக்கு சென்றன. மாற்றுப்பாதைகளில் சிவகாசி டிஎஸ்பி சுப்பையா ஆலோசனையின்படி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கூடுதல் போலீசார் அவசியம்:
ரயில்வே மேம்பாலம் பணிகள் தொடங்கியதால் நேற்று முதல் மாற்றுப்பாதைகளில் வாகனங்கள் திருப்பி விடப்பட்ட நிலையில் 25க்கும் குறைவான போலீசார் மட்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நேற்று பெரும்பாலான பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் விடுமுறை தினம் என்பதாலும் பெரும்பாலான பட்டாசு ஆலைகளுக்கு விடுமுறை இருந்ததாலும் மாற்றுப்பாதைகளில் பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் இன்றி வாகனங்கள் சென்று வந்தன. ஆனால் நாளை முதல் அனைத்து பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் இயங்கும் என்பதால் மாற்றுப்பாதைகளில் கூடுதல் போலீசார் அவசியமாகின்றது. எனவே மாற்றுப்பாதைகளில் சுமார் 70க்கும் மேற்பட்ட போலீசாரை பாதுகாப்பு பணியில் நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post ரயில்வே மேம்பால பணிகள் மீண்டும் தொடக்கம்: பொதுமக்கள் வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: