?வாஸ்து சாஸ்திரம் என்பது இந்தியாவிற்கு மட்டுமா அல்லது மற்ற தேசங்களுக்கும் பொருந்துமா?

– விமலா, ஓசூர்.
வாஸ்து சாஸ்திரம் என்பது புவியியல் சார்ந்த அறிவியல் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். நம் நாட்டிலேகூட சென்னையில் உள்ள வாஸ்து சாஸ்திரம், மும்பைக்கு பொருந்தாது. இங்கே கடல்மட்டம் என்பது கிழக்கு திசையை நோக்கிச் செல்லும். ஏனெனில் வங்காள விரிகுடா என்பது கிழக்கு திசையில் அமைந்திருக்கிறது. மும்பையைப் பொறுத்த வரை அங்கே கடல்மட்டம் என்பது மேற்கு திசையை நோக்கி அமைந்திருக்கும். அங்கே அரபிக்கடல் என்பது மேற்கு திசையில் உள்ளது. அதேபோல, சென்னையில் வடகிழக்கு பருவகாற்று காலமும் மும்பை நகரத்தில் தென்மேற்கு பருவகாற்று காலமும் அதிக அளவிலான மழையைத் தருகிறது. இதன் அடிப்படையில்தான் குடியிருக்கும் வீடுகளும் கட்டப்படுகின்றன. ஆக, ஒரு ஊரில் கடைபிடிக்கும் வாஸ்து சாஸ்திரம் என்பது, எல்லா ஊர்களுக்கும் பொதுவானது அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

?ஏழரை சனியின் பிடியில் உள்ளவர்கள் தற்போது எந்த முயற்சி செய்தாலும் முன்னேற முடியவில்லையே? இதற்கு பரிகாரம் என்ன?

– ஆசை. மணிமாறன், திருவண்ணாமலை.
இது முற்றிலும் தவறான கருத்து. தற்போது மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய மூன்று ராசிகளைச் சேர்ந்தவர்களுக்கு ஏழரை சனி என்பது நடக்கிறது. உங்கள் கூற்று உண்மை என்று வைத்துக் கொண்டால் இந்த மூன்று ராசியைச் சேர்ந்தவர்கள் அனைவருக்கும் தற்போது முயற்சித்தால் முன்னேற இயலாத சூழலா நிலவுகிறது? உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் ஏழரைச் சனியின் காலத்தில் உண்மையாக உழைத்து உயர்வினைக் கண்டவர்கள் லட்சக்கணக்கானோர் இருக்கிறார்கள். இதுபோன்ற கருத்துக்களில் கவனம் செலுத்தாமல் உழைப்பினில் கவனத்தை செலுத்துங்கள். உண்மையாக உழைப்பவர்களை சனி என்றுமே கைவிடுவதில்லை. உங்கள் சம்பாத்யத்தில் ஆதரவற்ற நிலையில் உள்ள முதியவர்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் இயன்ற உதவியினைச் செய்யுங்கள். இதுவே சனிக்குச் செய்யும் ஆகச்சிறந்த பரிகாரம் ஆகும்.

?குளிகை நேரத்தில் துக்க நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என்கிறார்களே,
அது எதனால்?

– என்.இளங்கோவன், மயிலாடுதுறை.
குளிகை நேரத்தில் எந்த ஒரு செயலைச் செய்தாலும் அது மீண்டும் தொடர்ந்துகொண்டிருக்கும் என்பது ஜோதிடவிதி. அதன் அடிப்படையில் துக்க நிகழ்ச்சிகளை அந்த நேரத்தில் துவக்கினால், மீண்டும் மீண்டும் வீட்டில் துக்க நிகழ்ச்சியைத் தொடர்ந்து காண நேரிடும் என்பதால், அந்த நேரத்தில் துக்க நிகழ்வினைச் செய்ய வேண்டாம் என்று சொல்கிறார்கள்.

?எனது குடும்பத்தில் ரிஷிதோஷம் இருப்பதாக உணர்கிறேன். இதற்கு பரிகாரம் உள்ளதா? இருந்தால் என்ன பரிகாரம் செய்ய வேண்டும், எங்கு செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்பதை தெரியப்படுத்த வேண்டுகிறேன்.

– சேகரன், மணப்பாறை.
ரிஷிதோஷம் என்ற ஒரு தோஷமே கிடையாது. நீங்கள் ஏதோ தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள் என எண்ணுகிறேன். ரிஷிபஞ்சமி என்ற விரதம் உண்டு. இது மாதவிடாய் பருவத்தைக் கடந்த வயதுமுதிர்ந்த பெண்கள் மேற்கொள்ள வேண்டிய நோன்பு ஆகும். ரிஷிதர்ப்பணம் என்ற ஒன்று உண்டு. இது அந்தணர் குலத்தைச் சேர்ந்த உபநயனம் ஆன ஆண்கள் தினசரி செய்ய வேண்டிய கடமைகளுள் ஒன்றாக இருக்கிறது. ஆனால் ரிஷிதோஷம் என்ற பெயரில் ஏதும் இல்லை. இதற்கு நீங்கள் பரிகாரம் ஏதும் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. தினமும் காலையில் “ஓம் நமசிவாய’’ என்ற பஞ்சாட்சர மந்திரத்தை 108 முறை ஜபம் செய்து வாருங்கள். எந்த தோஷம் இருந்தாலும், நீங்கிவிடும்.

?ஆதித்ய ஹ்ருதயம் மந்திரத்தின் சிறப்பு என்ன?

– சு.பாலசுப்ரமணியன், ராமேஸ்வரம்.
இந்த உலகம் இயங்குவதற்கு சூரியனே ஆதார சக்தியாக இருந்து செயல்படுகிறார் என்று குறிப்பிட்டு உருவாக்கப்பட்டதே ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ரம் ஆகும். இதனை அகத்திய முனிவருக்கு அன்னை பராசக்தியே உபதேசித்ததாக சொல்லப்படுகிறது. ராம – ராவண யுத்தத்தின்போது அகத்தியர் ராமனுக்கு இந்த மந்திரத்தை உபதேசித்தார் என்றும் இதனைக் கொண்டு சூரிய வழிபாடு செய்து ராமன் போரில் வென்றான் என்றும் சொல்வார்கள். அகத்தியர் ராமனிடம், ‘ஆதித்ய ஹ்ருதயம் புண்யம் ஸர்வசத்ரு விநாசனம், ஜயாவஹம் ஜபேன்நித்யம் அக்ஷய்யம் பரமம் சிவம்’ என்று சொல்லி இந்த மந்திரத்தை உபதேசித்தாராம். அதாவது இந்த மந்திரத்தை அனுதினமும் உச்சரித்து சூரியனை வணங்குவதன் மூலமாக எல்லா பகைவர்களையும் அழிக்கக்கூடிய திறனையும் வெற்றியைக் காணும் திறனும் உண்டாகும் என்பதே இதன் பொருள். நாமும் இந்த ஸ்தோத்ரத்தை தினமும் சொல்லி சூரியனை வணங்குவதன் மூலமாக உடல் பலம், மனோபலம் பெறுவதோடு எதிரிகளை வீழ்த்தி வெற்றியும் காண்போம் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

?முகத்தைப் பார்த்து ஜோதிடம் கூறுகிறார்களே, இது ஆன்மிகத்தில்
சாத்தியம்தானா?

– வண்ணை கணேசன், சென்னை.
முகத்தைப் பார்த்து ஜோதிடம் கூறுகிறார்கள் என்று சொல்வதைவிட சாமுத்ரிகா லட்சணத்தைக் கொண்டு அவர்களின் குணாதிசயத்தைச் சொல்கிறார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். இவ்வாறு எதிரில் உள்ளவரின் உடலமைப்பினைக் கொண்டு அதாவது சாமுத்ரிகா லட்சணத்தின் அடிப்படையில் அவர்களின் குணம் பற்றிச் சொல்வது என்பது சாத்தியமே. மற்றபடி எதிர்காலப் பலன் அறிய வேண்டும் என்றால், அதற்கு ஜாதகம் என்பது அவசியம் தேவை.

?வீட்டிற்கு முன்பாக அழைப்பு மணிக்கு பதிலாக கோயிலில் அடிக்கும் மணியைக் கட்டலாமா?

– இரா.சேவரத்தினம், ஓசூர்.
கூடாது. ஆலய மணி மற்றும் பூஜா மணிகளை அதற்குரிய நேரத்தில் மட்டுமே ஒலிக்கச் செய்ய வேண்டும். “ஆகமார்த்தம்து தேவானம் கமனார்த்தம்து ராக்ஷஸாம், கண்டாரவம் கரௌம்யாதௌ தேவதாஹ்வான லாஞ்சனம்’’ என்ற மந்திரம் பூஜா மணி மற்றும் ஆலய மணியின் தாத்பரியத்தை உணர்த்தும். இந்த மணியை ஒலிக்கச் செய்வதன் மூலமாக, அசுர சக்திகள் தூர விலகட்டும், தேவர்கள் இந்த இடத்திலே வந்து சேரட்டும் என்பது அதற்கான பொருள். தேவர்களை நம் இஷ்டத்திற்கு எப்போது பார்த்தாலும் அழைக்கக் கூடாது, அவ்வாறு அழைத்தால் அவர்களுக்கு உரிய ஆராதனைகளைச் செய்ய வேண்டும். பூஜை நேரம் தவிர மற்ற நேரங்களில் மணி அடிக்கக் கூடாது. அதனால் அழைப்பு மணிக்கு பதிலாக கோயிலில் அடிக்கும் மணியை வீட்டு வாசலில் கட்டக் கூடாது.

திருக்கோவிலூர்
K.B.ஹரிபிரசாத் சர்மா

The post ?வாஸ்து சாஸ்திரம் என்பது இந்தியாவிற்கு மட்டுமா அல்லது மற்ற தேசங்களுக்கும் பொருந்துமா? appeared first on Dinakaran.

Related Stories: