திருப்பங்கள் நிகழ்த்தும் திருவோண விரதம்!

ஒன்பது ராசி மண்டலத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் பெருமாளுக்குரிய திருவோணமும், சிவனுக்குரிய திருவாதிரையும் மட்டுமே ‘திரு’ என்ற சிறப்பு அடைமொழியுடன் கூடியது. திருவோணம் நோன்பு என்பது, திருவோண நட்சத்திரத்தோடு கூடிய நன்னாளில் நோற்கும் நோன்பாகும். இந்த விரதம் பெருமாளுக்கு உகந்தது. திருவோணத்தன்று விரதம் இருக்கும் பக்தர்கள் திருவோணத்துக்கு முதல் நாள் இரவு உணவை தவிர்க்க வேண்டும். தோஷங்களில் பலவகையான தோஷங்கள் உள்ளன. அவற்றில் சந்திர தோஷமும் முக்கியமான ஒன்றாகும். ஜாதகத்தில் சந்திரதோஷம் இருந்தால் அவர்கள் அமாவாசைக்குப் பின்னர் வரக்கூடிய துவிதியை திதியில் விரதம் இருக்கவேண்டும். விரதம் இருந்த பின்னர் மாலை நேரத்தில் சந்திர தரிசனம் செய்ய வேண்டும்.

தெற்கு நோக்கிய அம்பிகையை வழிபடுவதுடன், திருவோண நட்சத்திரத்தன்று திருவோண விரதம் இருந்தால் சந்திரதோஷம் விலகுவதுடன், சந்தோஷமான வாழ்வு அமையும். எல்லா மாதங்களிலும் வரும் திருவோணம் நட்சத்திரத்தில் பெருமாளை வேண்டி விரதம் இருந்தாலும் ஆவணி திருவோண விரதம் மிக முக்கியமானதாகும்.

திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றான வாமன அவதாரம் நிகழ்ந்தது இந்த திருவோண நட்சத்திரத்தில் தான். அதனால் தான் ஒவ்வொரு ஆவணி மாதத்தில் வரும் திருவோண நட்சத்திரத்தில் கேரளாவில் ஓணம் பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

பங்குனி மாத திருவோண நட்சத்திரத்தில் மார்க்கண்டேய மகரிஷியின் மகளான பூமி தேவியை ஒப்பிலியப்பர் பெண் கேட்டு சென்றார். ஐப்பசி மாத திருவோண நட்சத்திரத்தில் தான் தேவியை ஒப்பிலியப்பன் பெருமான் மணந்து கொண்டார். இதனால் ஒப்பிலியப்பன் பெருமாள் கோயிலில் ஒவ்வொரு திருவோண நட்சத்திர தினமும் விழா கோலமாக இருக்கும்.

திருவோண விரதத்தை மேற்கொள்பவர்கள் முதல் நாள் இரவே உணவு உண்ணக் கூடாது. திருவோண விரத தினத்தில் காலையில் எழுந்து குளித்து பெருமாள் ஆலயத்துக்குச் சென்று துளசி மாலை சாத்தி தரிசித்து வர வேண்டும். காலையில் துளசி தீர்த்தம் மட்டுமே எடுத்துக் கொள்ளவேண்டும். பெருமாள் பாடல்களை பாராயணம் செய்தல் வேண்டும். மதிய உணவில் உப்பு சேர்க்காமல் சாப்பிட வேண்டும்.

மாலையில் சந்திரனை தரிசிக்க வேண்டும். இப்படி செய்தால் சந்திரனின் முழு அருள் கிடைப்பதோடு, சந்திர தோஷம் இருந்தால் நிவர்த்தி ஆகும். திருப்பங்களை தரும் திருவோண நட்சத்திர விரதம் இருந்து பெருமாளின் அருள் பெறுங்கள்.

திருவோண விரதம் மேற்கொள்பவர்களின் வாழ்வில், கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். வீட்டின் தரித்திரம் விலகும். ஐஸ்வர்யம் பெருகும். மனக்குறைகளும், கவலைகளும் காணாமல் போகும். மிக முக்கியமாக, இந்த நாளில் திருவோண விரதநாளில், பெண்கள், திருமாலை தரிசித்து வேண்டிக் கொண்டால், அவர்களின் கண்ணீரையும் கஷ்டத்தையும் துடைத்தருள்வார் திருமால். அவர்கள் விரும்பியதெல்லாம் தந்தருள்வார்! கல்யாண மாலை தோள் சேரும். அதேபோல், நீண்ட காலம் குழந்தை இல்லையே என ஏங்கித் தவித்தவர்களுக்கு, குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருவோண விரதம் இருக்கும் பக்தர்கள், மகாவிஷ்ணுவை வணங்கி அவரின் திருநாமங்களைச் சொல்லிக்கொண்டே இருங்கள். விஷ்ணு புராணங்களைப் பாராயணம் செய்யலாம்.

ஜெயசெல்வி

The post திருப்பங்கள் நிகழ்த்தும் திருவோண விரதம்! appeared first on Dinakaran.

Related Stories: