ஐந்து முறை முதலமைச்சராகப் பொறுப்பேற்று அரிய பல திட்டங்களால் நவீனத் தமிழ்நாட்டைக் கட்டமைத்த சிற்பிக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் மாவட்டங்கள்தோறும் கொண்டாட்டங்கள். இன்னும் கலையுலகினர், படைப்பாளர்கள், இலக்கிய அமைப்புகள், வெளிநாடுவாழ் தமிழர்கள் என எங்கெல்லாம் தமிழ் ஒலிக்கிறதோ, எவ்விடமெல்லாம் தமிழர்களும் இருக்கிறார்களோ அங்கெல்லாம் தமிழினத் தலைவர் கலைஞரின் நூற்றாண்டை உணர்வுப்பூர்வமாகக் கொண்டாடி வருகிறார்கள்.
வங்கக் கடற்கரையில் தன் அண்ணனின் அருகில், சொன்ன சொல்லைக் காப்பாற்றும் வகையில், அவரிடம் இரவலாக வாங்கிய இதயத்தை ஒப்படைத்து, ஓய்வெடுக்கும் ஓய்வறியாச் சூரியனாம் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞருக்கு அருங்காட்சியகத்துடனான நினைவிடம் அலைகடலின் தாலாட்டும் இசையின் பின்னணியுடன் அமைக்கப்பட்டிருக்கிறது. முத்தமிழறிஞர் கலைஞர் பெயரால் சென்னையில் பன்னோக்கு மருத்துவமனை, மதுரையில் நூற்றாண்டு நூலகம், கிளாம்பாக்கத்தில் பேருந்து முனையம் எனத் தன் வாழ்நாளெல்லாம் தமிழ்மக்கள் பயன்பெறப் பாடுபட்ட தலைவரின் புகழ்போற்றும் வகையில் பயனுள்ள கட்டமைப்புகள் அவருடைய நூற்றாண்டில் உருவாகியுள்ளன. உருவாக்கப்பட்டும் வருகின்றன.
மாவட்டங்கள்தோறும் கழகத்தினர் நிறுவிய சிலைகள், அறக்கட்டளை சார்பில் திருவாரூரில் கலைஞர் கோட்டம், கழக அமைப்புகளின் சார்பில் பல்வேறு நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அரசியல் உலகம் இதுவரை காணாத பன்முக ஆற்றல் கொண்ட தலைவர் கலைஞரை அவருடைய உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் தங்கள் இதயத்தில் சுமந்து ஒவ்வொரு நாளும் கொண்டாடி மகிழ்கின்றனர். இந்தியாவில் இன்னொரு தலைவருக்கு இந்த அளவில் நூற்றாண்டு விழாவினைத் தங்கள் குடும்ப விழா போலக் கொண்டாடியிருப்பார்களா என்கிற அளவிற்கு நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழா எத்திசையும் புகழ் மணக்கக் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவின் கூட்டாட்சிக் கருத்தியலை வலுப்படுத்தும் வகையில் மாநில சுயாட்சியின் உரிமைக் குரலாகத் தொடர்ந்து முழங்கியவரும், இந்திய ஜனநாயகத்தைக் கட்டிக்காப்பதில் பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தவரும், பல குடியரசுத் தலைவர்களையும் – பிரதமர்களையும் தேர்வு செய்வதில் முக்கியப் பங்காற்றியவருமான நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரை அவரது நூற்றாண்டில் போற்றுகிற வகையில் இந்திய ஒன்றிய அரசின் சார்பில் ஆகஸ்ட் 18 ஞாயிறு மாலை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் சீர்மிகு விழாவில், ஒன்றிய அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சர் மாண்புமிகு ராஜ்நாத் சிங் அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞரின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தினை வெளியிடவிருக்கிறார்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் எதிலும் உறுப்பினராக இருந்திராத ஓர் அரசியல் தலைவரின் மறைவுக்கு நாடாளுமன்றத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதென்றால் அது நம் தலைவர் கலைஞர் அவர்களின் மறைவின்போதுதான். 95 ஆண்டுகால வாழ்க்கையில் 81 ஆண்டுகாலப் பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரரான முத்தமிழறிஞர் கலைஞரின் அரசியல் -நிர்வாகம் – கலை – இலக்கியம் – திரைத்துறை – இதழியல் என பன்முகச் சாதனைகள் இந்திய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியவை. அவருடைய திறமை எல்லை கடந்த வரவேற்பைப் பெற்றவை. அதற்குக் காரணம், தலைவர் கலைஞரின் அத்தனை பங்களிப்புகளிலும் முதன்மை நோக்கமாக இருந்தது தமிழ் – தமிழர் – தமிழ்நாடு இவற்றின் முன்னேற்றம்தான். அதனை அவர் சுயமரியாதை – சமூகநீதி என்ற மனித உரிமைக் கொள்கையின் வழியே நிறைவேற்றிக் காட்டினார். அந்தக் கொள்கையைத் தன்னுள் விதைத்த தலைவர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் அவர் உருவாக்கிய நினைவுச் சின்னங்கள் வரலாற்றுப் பெருமையும் பண்பாட்டுச் சிறப்பும் கொண்டவையாகத் திகழ்கின்றன.
பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையும் கண்ணீரில் தவிக்கவிட்டு மறைந்த பின், ஓராண்டு கடந்த நிலையில், 1970-ஆம் ஆண்டு பிப்ரவரி 3-ஆம் நாள் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில், அண்ணாவின் நினைவாக ஒன்றிய அரசின் சார்பில் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. உணர்வுப்பூர்வமான அந்த விழாவில் அப்போதைய ஆளுநர் உஜ்ஜல் சிங் அவர்களுடனும், ஒன்றிய அமைச்சர் ஷெர் சிங் அவர்களுடனும் முதலமைச்சரான தலைவர் கலைஞர் கலந்துகொண்டார். அண்ணாவின் அஞ்சல் தலை வெளியிடப்பட்டபோது, அதனைப் பார்த்த அத்தனை பேருக்கும் ஆச்சரியம். அஞ்சல் தலைக்கேற்ற பொருத்தமான முறையில் பேரறிஞர் அண்ணாவின் படத்தைத் தேர்வு செய்து தந்திருந்தவர் தலைவர் கலைஞர். அத்துடன், அந்தப் படத்தின் கீழே ‘அண்ணாதுரை’ என்று அண்ணாவின் கையெழுத்தையும் இடம்பெறச் செய்துவிட்டார் அண்ணாவின் தம்பியான நம் ஆருயிர்த் தலைவர் கலைஞர். இந்திய அஞ்சல் தலை ஒன்றில் தமிழ் எழுத்துகள் இடம்பெற்ற முதல் அஞ்சல்தலை என்பது பேரறிஞர் அண்ணா நினைவு அஞ்சல் தலைதான்.
அண்ணாவின் நூற்றாண்டு நிறைவின்போதும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஐந்தாவது முறை பொறுப்பு வகித்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். 2009-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் நாள் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளன்று சென்னையில் நம் உயிர்நிகர் தலைவர் தலைமையில் நடைபெற்ற விழாவில், அப்போயை ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒன்றிய அரசின் நிதித்துறை அமைச்சராக இருந்தவரும், பின்னாளில் தலைவர் கலைஞரின் ஆதரவுடன் இந்தியாவின் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றவருமான மதிப்பிற்குரிய பிரணாப் முகர்ஜி அவர்கள் அண்ணாவின் உருவம் பொறித்த 5 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார். வரலாற்றுச் சிறப்பு மிகுந்த அந்த விழாவில், அப்போதைய துணை முதலமைச்சராக இருந்த உங்களில் ஒருவனான நான், அண்ணா நூற்றாண்டு இணையதளத்தைத் தொடங்கிவைத்து, அண்ணாவின் பொன்மொழிகள் நூலினை வெளியிட்டு உரையாற்றுகின்ற நல்வாய்ப்பினைப் பெற்றிருந்தேன்.
பேரறிஞர் அண்ணாவின் நினைவாக வெளியிடப்பட்ட அஞ்சல் தலை போலவே, அவரது நினைவாக வெளியிடப்பட் நாணயத்திலும் ‘அண்ணாதுரை’ என்ற அண்ணாவின் கையெழுத்தை இடம்பெறச் செய்தவர், அண்ணாவின் இலட்சியங்களுக்கு ஆட்சி நிர்வாகத்தின் மூலமாகச் செயல்வடிவம் கொடுத்த அவரது தம்பியான தலைவர் கலைஞர்தான். இந்திய அரசின் நாணயத்தில் தமிழ் எழுத்துகள் முதன்முதலில் இடம்பெற்றதும் அப்போதுதான்.
எழுச்சியும் உணர்ச்சியும் மிகுந்த அந்த விழாவில் நாணயத்தை வெளியிட்ட திரு. பிரணாப் முகர்ஜி அவர்கள், நமது பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, “மாபெரும் ஜனநாயகவாதி. மிகச் சிறந்த பேச்சாளர், தனிப்பெருமை படைத்த நாடாளுமன்றவாதி, மாபெரும் இலக்கியவாதி. ஓர் அரசியல் தலைவர் என்பவர் சமகாலத்திற்கு மட்டுமின்றி, எக்காலத்திற்கும் அரசியலில் முன்னோடியாகத் திகழ வேண்டும் என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டி இன்றளவும் ஒவ்வொருவரின் போற்றுதலுக்கும் உரியவராகத் திகழ்கிறார். அண்ணா காலத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவரது உரைகளைக் கேட்பது ஆனந்தமாக இருந்தது. அவர் அவையில் உரை நிகழ்த்தினால் நாடாளுமன்றத்தின் இதர பகுதிகளில் எவரும் இருக்கமாட்டார்கள். மாற்றுக்கட்சி உறுப்பினர்களும், மக்களவையிலிருந்து அமைச்சர்களும் அண்ணாவின் பேச்சைக் கேட்க மாநிலங்களவைக்கு வருவார்கள். அவருடைய பேச்சு அன்றும் இன்றும் இரசித்துப் போற்றப்படுகிறது” என்று புகழாரம் சூட்டினார்.
தலைமையுரையாற்றிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தன் அண்ணனின் பெருமைகளை இந்திய ஒன்றிய அமைச்சரும், இளைய தலைமுறையினரும் உணர்ந்து கொள்ளும் வகையில் உரை நிகழ்த்தினார். “அண்ணாவின் நாணயம் அரசியலில் எப்படிப்பட்டது என்பதை இங்கே வெளியிட்டிருக்கிறார்கள். அண்ணாவின் நாணயம் எத்தகையது என்பதற்கு அரசியல் வரலாற்றிலே எத்தனையோ கட்டங்கள் உண்டு, எத்தனையோ நிகழ்வுகள் உண்டு. அண்ணாவின் நூற்றாண்டு நிறைவைக் கொண்டாடுகிற நேரத்தில் நான் விரும்புவது, மாநில அதிகாரங்களுக்கு வலு சேர்த்து, மாநில மொழிகள் மத்தியிலே உயர வேண்டும். சமநிலையை அடைய வேண்டும்” என்று அந்த விழாவிலும் அண்ணாவின் தம்பியாக மாநில உரிமைக்குரலையும், தமிழ் உள்ளிட்ட மொழிகளுக்கு இந்திய ஒன்றியத்தின் ஆட்சிமொழித் தகுதியையும் கோரினார் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர்.
எந்த இடமாக இருந்தாலும் அங்கே தமிழுக்காக வாதாடியர் நம் தலைவர் கலைஞர். தன் 14 வயதில் தமிழ்க் கொடி ஏந்தி, மொழிப் போர்க்களம் புகுந்த அவர்தான், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தமிழுக்கு இந்திய அரசின் செம்மொழித் தகுதியைப் பெற்றுத்தந்தார். தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைத் தேர்வு செய்து தமிழ்நாடு அரசு விழாக்கள், கல்வி நிலையங்களில் பாடச் செய்தார். செம்மொழி மாநாட்டினைச் சிறப்புடன் நடத்தி, அதில் தமிழ் இணைய மாநாட்டிற்கும் உரிய இடமளித்து, இன்று கணினியிலும் கைப்பேசியிலும் எல்லாரும் தமிழைப் பயன்படுத்துவதற்கான ஆக்கமாகவும் ஊக்கமாகவும் திகழ்ந்தார். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நிலைத்து வாழும் நம் அன்னைத் தமிழ், காலந்தோறும் வளர்ச்சி பெற்று வென்றிட வேண்டும் என்பதே முத்தமிழறிஞரின் மூச்சாகவும் செயலாகவும் இறுதிவரை இருந்தது.
தமிழாகவே வாழ்ந்த தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டின் நினைவாக வெளியிடப்படும் 100 ரூபாய் நாணயத்தில் முத்தமிழறிஞரின் உருவத்துடன் அவர் கையெழுத்திலான, ‘தமிழ் வெல்லும்’ என்ற சொற்களும் இடம்பெற்றுள்ளன. இமயத்தின் உச்சியில் கொடிநாட்டி, தமிழின் பெருமையை உயரச் செய்த சேரன் செங்குட்டுவனை வரலாறு பேசுவது போல, இந்திய அரசு தனது நினைவாக வெளியிடும் நாணயத்தில் தமிழைப் பொறித்து நம் தாய்மொழிக்குப் பெருமை சேர்த்திருக்கிறார் தலைவர் கலைஞர்.
தமிழ்நாட்டின் அரசியலை அரை நூற்றாண்டு காலத்திற்கு மேல் இயக்கிய ஆற்றல் மிக்கவராகவும், இந்திய அரசியல் வரலாற்றில் தனித்துவம் மிக்க ஆளுமையாவும் திகழ்ந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். எதிர்காலத் தலைமுறையினரின் கலங்கரை விளக்கமான நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களின் புகழ் மகுடத்தில் மற்றுமொரு வைரமாக, அவரது உருவம் பொறித்த நாணயத்தை வெளியிடுகின்ற இந்திய ஒன்றிய அரசுக்குத் தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும், முத்தமிழறிஞர் கலைஞரின் மகனாகவும் என் நன்றியையும், தலைவர் கலைஞரின் கோடானு கோடி உடன்பிறப்புகளின் நன்றியையும் உங்களில் ஒருவனாக உரித்தாக்குகிறேன்.
இனிமை மிகுந்த தமிழைத் தன் நா நயத்தால், கேட்போர் செவிகளுக்கெல்லாம் விருந்தளித்த தலைவர் கலைஞர், நாணயத்திலும் ’தமிழ் வெல்லும்’ என்பதை நிறுவியிருக்கிறார். இமயம் போல உயர்ந்து நிற்கும் முத்தமிழறிஞர் கலைஞரின் புகழுக்குப் புகழ் சேர்க்கும் வகையில் இந்திய ஒன்றிய அரசின் சார்பில் வெளியிடப்படும் நாணய வெளியீட்டு விழாவில் உடன்பிறப்புகளைக் காண ஆவலாக இருக்கிறேன். இனிய விழா எனினும் எளிய விழா என்பதால் சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சார்ந்த உடன்பிறப்புகள் நேரில் காணவும், தமிழ்நாட்டிலும், தமிழர்கள் வாழும் உலக நாடுகளிலும் நேரலையில் காணவும் அன்புடன் அழைத்து அகம் மகிழ்கிறேன். தமிழ் வெல்க! தமிழ் போன்ற நம் தலைவர் கலைஞர் புகழ் ஓங்குக!
The post இந்திய நாணயத்தில் தமிழினத் தலைவர் கலைஞர்.! ஆக.18ல் கலைஞர் கருணாநிதியின் நாணயம் வெளியீடு தொடர்பாக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.