தமிழக முதல்வரின் அமெரிக்க சுற்றுப் பயணத்தின் முக்கிய குறிக்கோள் உயர்தர வேலைவாய்ப்பு மற்றும் உயர்தர முதலீடு என்பதால், அமெரிக்க சுற்றுப்பயணத்தில் சான் பிரான்சிஸ்கோ, சிக்காகோ உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று உலக முன்னணி நிறுவனத் தலைவர்களை சந்திக்கவுள்ளார். அதன்படி சென்னையில் இருந்து வரும் 27ம் தேதி அமெரிக்கா செல்லும் முதல்வர் 28ம் தேதி சான் பிரான்சிஸ்கோ செல்கிறார். 28ம் தேதியிலிருந்து செப்டம்பர் 2ம் தேதி வரை சான்பிரான்சிஸ்கோ நகரில் தங்கி இருந்து முக்கிய, முன்னணி நிறுவனங்களை சந்திக்கிறார்.
ஆகஸ்ட் 29ம் தேதி சான்பிரான்சிஸ்கோ இன்வெஸ்டர் கான்கிளேவ் (investors conclave) மற்றும் ஆகஸ்ட் 31ம் தேதி அமெரிக்காவில் புலம்பெயர்ந்த தமிழக மக்களுடன் சந்திப்பு ஆகிய நிகழ்ச்சிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கெடுக்க உள்ளார்.
அதைத்தொடர்ந்து செப்டம்பர் 2ம் தேதி சான்பிரான்சிஸ்கோவிலிருந்து சிக்காகோ செல்லும் முதல்வர் செப்டம்பர் 12ம் தேதி வரை அமெரிக்காவில் உள்ள முக்கிய நிறுவன முதலீட்டாளர்களை சந்தித்து பேசுகிறார். பார்ச்சூன் 500 பட்டியலில் உள்ள சர்வதேச முன்னணி நிறுவனங்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டு ஒப்பந்தங்கள் செய்ய உள்ளார்.
தொடர்ந்து செப்டம்பர் 7ம் தேதி வெளிநாட்டு வாழ் தமிழர்களை முதல்வர் சந்திக்கிறார். அதன்படி 17 நாட்கள் அமெரிக்க பயணம் மேற்கொள்கிறார். முதல்வரின் அமெரிக்க பயணத்தின் முக்கிய குறிக்கோள் உயர்தர வேலைவாய்ப்பு மற்றும் உயர்தர முதலீடு என தமிழக தொழில் துறை தகவல் தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு ஏற்படுத்த அதிக கவனம்
சுதந்திர தினத்தையொட்டி அரசு சார்பில் பாரிமுனையில் உள்ள குமாரசாமி கோயிலில் நடந்த சமத்துவ விருந்தில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பங்கேற்றார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் தொழில்துறை மீது முதல்வர் கவனம் செலுத்தி வருகிறார். ஏனென்றால், இதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். எவ்வளவு முதலீடுகள் வருகிறது என்பதைவிட எவ்வளவு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகிறது என்பதிலேயே அதிக கவனம் செலுத்தப்படுகிறது. முதல்வர் வரும் 27ம் தேதி தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா பயணம் மேற்கொள்ளும் நிலையில், அங்கு பல முக்கிய நிறுவனங்களை சந்திக்க உள்ளதோடு, பல்வேறு முதலீட்டுக்கான ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
The post சர்வதேச முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் அமெரிக்கா பயணம் : தமிழ்நாடு தொழில் துறை தகவல் appeared first on Dinakaran.