சுதந்திரதின விழா கொண்டாட்டம் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஈரோட்டில் இன்று கொடியேற்றுகிறார்

ஈரோடு, ஆக. 15: நாட்டின் 78வது சுதந்திரதின விழாவையொட்டி இன்று ஈரோடு ஆயுதப்படை மைதானத்தில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். ஈரோடு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நாட்டின் 78வது சுதந்திரதினவிழா இன்று ஈரோடு அடுத்துள்ள ஆணைக்கல்பாளையத்தில் உள்ள மாவட்ட காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில் கொண்டாடப்பட உள்ளது. காலை 9.05 மணிக்கு தேசிய கொடியை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஏற்றி வைத்து போலீஸ் அதிகாரிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார்.

பின்னர் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அரசு ஊழியர்கள், காவல் துறையினரை பாராட்டி சான்றிதழ் வழங்குகிறார். விழாவில் சுதந்திர போராட்ட தியாகிகள் கவுரவிக்கப்பட உள்ளனர். இறுதியில் பள்ளி மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

சுதந்திர தினவிழாவையொட்டி ஈரோடு மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஈரோடு ரயில்வே ஸ்டேசன், பஸ் ஸ்டாண்டு மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஈரோடு காவிரி பாலத்தில் ரயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டு சோதனை சாவடிகளில் நேற்றிரவு வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. மாநில, மாவட்ட எல்லைப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடிகளில் வாகனங்கள் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டன.

இன்று நாம் அனைவரும் இந்திய சுதந்திர மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சுதந்திரம் என்பது சுயமாகக் கிடைத்ததில்லை.நாம் இன்று சுதந்திர காற்றை சுவாசிக்க பல போராளிகள் தங்களையும் தங்கள் வாழ்நாளையும் தியாகம் செய்துள்ளனர்.இன்று நாம் சுதந்திர இந்தியாவில் வாழ எண்ணற்ற முன்னோர்களின் தியாகம் நடந்துள்ளது.

பூமியில் சொர்க்கம் என்பது இருக்குமெனில் அது இந்தியா என பேரரசர் ஜஹாங்கீர் கூறியுள்ளார். பூமியில் பல்வேறு பகுதிகளிலிருந்து பலர் பல நோக்கங்களில் இந்தியாவிற்கு படையெடுத்தனர்.போர்த்துக்கீசிய மாலுமியான வாஸ்கோடாகாமா இந்திய நாட்டின் நறுமணப் பொருட்களான ஏலம், கிராம்பு, மிளகு ஆகியவை கடல்வழியாக உலகின் கரங்களுக்கு சென்றடைய காரணமாக இருந்தார்.

ஒருவர்பின் ஒருவராக வாணிப நோக்கில் போர்த்துக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், மற்றும் ஆங்கிலேயர்கள் என பாரதத்துக்குள் உள்நுழைந்தனர். இவர்களுள் ஆங்கிலேயர் கிழக்கிந்திய கம்பெனி என்னும் மாபெரும் அமைப்பை உருவாக்கினர். ஆங்கிலேயரின் அதிகாரம் மேலோங்க அரசர்களும் அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் சென்றனர்.
இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர் போத்துக்கீசியர்களை விரட்டினர். மன்னர் ஆட்சி பகுதிகள் மாகாணங்கள் ஆக்கப்பட்டன. மன்னர்களிடம் இருந்து வரி வசூலிக்கப்பட்டது. வரி செலுத்தவில்லை என்றால் கடும் தண்டனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

தாய்மண்ணில் வாழ்வதற்கு வரி செலுத்தும் அவல நிலையை இந்தியர்கள் அனுபவித்தனர். ஒரு சிலர் அதனை ஏற்றுக்கொள்ளாமல் எதிர்த்தனர்.அவர்களுள் வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவன், மருதுசகோதரர்கள் போன்றவர்களைக் குறிப்பிட்டு கூறலாம். இவர்கள் இந்திய விடுதலை முழக்கமிட்டு இன்னுயிர் நீத்தனர்.விடுதலை விருட்சம் காந்தியடிகளின் வருகை போராட்ட வரலாற்றில் புதுமையான அத்தியாயத்தை உருவாக்கியது.

காந்தியடிகள் தனது போராட்ட ஆயுதமாக அகிம்சையைக் கையில் எடுத்தார். இதனைத் தடுக்க ஆங்கிலேயர் பல முயற்சிகளை மேற்கொண்டனர். எனினும் அவை தோல்வியடைந்தன. 1919ம் ஆண்டில் ஆங்கிலேயர் அரங்கேற்றிய மாபெரும் ரத்த சரித்திரம் படைத்த “ஜாலியன் வாலாபாக்” படுகொலைச் சம்பவம் நீங்கா ரத்த வாடையை ஆங்கிலேயர் கையில் படரச் செய்தது. சோதனைகள் வந்தும் விடுதலை வேட்கை தணியவில்லை. உப்புச் சத்யாகிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் என்பன இந்தியர்களை ஒரே நேரத்தில் ஒருங்கிணைத்தது.சுதந்திரப் போராட்ட வீரர்கள் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பல்வேறு வீரர்களின் உன்னதமான பங்களிப்பு போற்றுதற்குரியது ஆகும்.

குறிப்பாக காந்தியடிகள், நேருஜி, பகத்சிங், பாரதியார், வாஞ்சிநாதன் போன்றவர்களைக் குறிப்பிடலாம்.
இவர்கள் போன்ற பல போராளிகளின் அயராத உழைப்பும் பாரத தேசத்தின் மீது கொண்ட பற்றுமே இன்று சுதந்திரக் காற்றை நாம் அனுபவிக்க வழிவகை செய்தது எனலாம். இரண்டாம் உலகப் போரில் ஏற்பட்ட மாபெரும் பொருளாதார நெருக்கடியானது ஆங்கிலேயருக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அதேவேளை இந்தியர்களின் தொடர் போராட்டத்திற்கும் இவர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை.இதன் காரணமாக 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் நாள் இந்தியாவிற்கு சுதந்திரத்தினை வழங்கினர். இன்று நாம் 77 வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம்.

சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்திற்கு சன்மானமாக சுதந்திரம் கிடைத்தது. பல தியாகங்களால் தீட்டப்பட்ட நம் சுதந்திர இந்தியாவை அவர்களின் புகழ் மங்காத வகையில் வளர்ச்சியடையச் செய்து பேணி காப்பது நம் அனைவரது கடமையாகும்.

The post சுதந்திரதின விழா கொண்டாட்டம் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஈரோட்டில் இன்று கொடியேற்றுகிறார் appeared first on Dinakaran.

Related Stories: