மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 9ம் தேதி, இரவுப் பணியில் இருந்த முதுகலை 2ம் ஆண்டு படிக்கும் பெண் டாக்டர் (31 வயது) பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். அவரது சடலம் கல்லூரி கருத்தரங்கு அறையில் கிடந்தது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த கொல்கத்தா போலீசார், சஞ்சய் ராய் எனும் போலீசாருக்கு உதவும் தன்னார்வலரை கைது செய்தனர்.
இதற்கிடையே, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க கொல்கத்தா உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இந்நிலையில், டெல்லியில் இருந்து விரைந்த சிபிஐ குழு இவ்வழக்கில் நேற்று விசாரணையை தொடங்கியது. சிபிஐயின் மருத்துவம் மற்றும் தடயவியல் நிபுணர்கள் அடங்கிய குழு, பெண் டாக்டரின் சடலம் கிடந்த கருத்தரங்கு கூடத்திற்கு சென்று ஆய்வு செய்தது. சிபிஐ அதிகாரிகள் 3 குழுவாக பிரிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு குழு கல்லூரியில் உள்ள டாக்டர்கள், இரவுப் பணியில் இருந்தவர்கள், சாட்சிகளிடம் விசாரணை நடத்துகிறது. மற்றொரு குழு உள்ளூர் நீதிமன்றத்தின் அனுமதியுடன் கைதான சஞ்சய் ராயிடம் விசாரணை நடத்துவதற்கான நடவடிக்கை எடுக்கிறது. 3வது குழு கொல்கத்தா போலீசாரிடம் இருக்கும் ஆவணங்கள், ஆதாரங்களை பெற்று ஆய்வு செய்கிறது.
இந்த விஷயத்தில் சிபிஐ 6 விஷயங்களில் கவனம் செலுத்துகிறது. பெண் டாக்டரை ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் பலாத்காரம் செய்துள்ளார்களா? கைதான சஞ்சய் ராய் மட்டும்தான் பலாத்காரம் செய்து கொன்றானா? சம்பவத்திற்கு பிறகு ஆதாரங்கள் அழிக்கப்பட்டதா? இந்த கொலை சம்பவம் ஏன் முதலில் தற்கொலை என கூறப்பட்டது? இந்த சம்பவத்தில் மருத்துவமனை நிர்வாகத்திற்கு சம்மந்தம் இருக்கிறதா? போலீசாருக்கு தாமதமாக காலையில் தகவல் சொல்லியது ஏன்? என்ற கேள்விகளுக்கு விடை கண்டறியும் பணியில் சிபிஐ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே, கைதான சஞ்சய் ராயை மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு கொல்கத்தா போலீசார் சிபிஐயிடம் நேற்று ஒப்படைத்தனர். கொலையான பெண் டாக்டரின் செல்போனுக்கு கடைசியாக வந்த அழைப்புகளை வைத்தும் சிபிஐ அதிகாரிகள் விசாரிக்கின்றனர். இந்த விவகாரத்தில் பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்கு பதிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிபிஐ விசாரணை தொடங்கிய நிலையிலும், டெல்லி உள்ளிட்ட இடங்களில் டாக்டர் போராட்டம் நேற்றும் தொடர்ந்தது. டெல்லியில், எய்ம்ஸ், விஎம்எம்சி மற்றும் சப்தர்ஜங் மருத்துவமனை, ராம் மனோகர் லோஹியா, இந்திராகாந்தி மருத்துவமனை ஆகிய இடங்களில் டாக்டர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். மும்பை, ஐதராபாத்திலும் பல மருத்துவமனைகளில் போராட்டம் நடந்தது. மேற்கு வங்க முழுவதிலும் டாக்டர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
அசாம் மருத்துவனை அறிவுரையால் சர்ச்சை
பெண் டாக்டர் கொலையை தொடர்ந்து, மருத்துவமனைகளில் இரவுப் பணி செய்யும் டாக்டர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாடு முழுவதும் போராட்டம் வலுத்துள்ளது. இதற்கிடையே, அசாமின் சில்ச்சார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வெளியிட்ட அறிவிப்பில், ‘பெண் டாக்டர்கள் மற்றும் பெண் ஊழியர்கள் இரவுப்பணியின் போது ஒதுக்குப்புறமான பகுதியில் தனியாக செல்வதை தவிர்க்க வேண்டும்’ என கூறியிருந்தது. இதற்கு கண்டனம் தெரிவித்து மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் இந்த அறிவுரை ரத்து செய்யப்பட்டது.
ராகுல் கண்டனம்
ராகுல் காந்தி நேற்று தனது எக்ஸ் பதிவில், ‘‘பாதிக்கப்பட்டவருக்கு நீதி வழங்குவதற்குப் பதிலாக குற்றம் சாட்டப்பட்டவர்களைக் காப்பாற்றும் முயற்சி மருத்துவமனை மற்றும் உள்ளூர் நிர்வாகத்தின் மீது கடுமையான கேள்விகளை எழுப்புகிறது. மருத்துவக் கல்லூரி போன்ற இடங்களில் மருத்துவர்களுக்குப் பாதுகாப்பில்லை என்றால், பெற்றோர்கள் தங்கள் மகள்களை எப்படி வெளியில் படிக்க வைப்பார்கள்? ஹத்ராஸ் முதல் உன்னாவ் வரையிலும், கதுவா முதல் கொல்கத்தா வரையிலும் பெண்களுக்கு எதிராக தொடர்ந்து அதிகரித்து வரும் சம்பவங்கள் குறித்து ஒவ்வொரு கட்சியும், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் தீவிர விவாதங்களை நடத்தி உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’’ என கூறி உள்ளார்.
The post மேற்கு வங்க பெண் டாக்டர் கொலை சிபிஐ விசாரணை தொடங்கியது: டாக்டர்கள் போராட்டம் தீவிரம் appeared first on Dinakaran.