13 மெட்ரோ ரயில் நிலையங்களில் போக்குவரத்து அட்டை வழங்கும் இயந்திரம் அறிமுகம்

சென்னை: மெட்ரோ பயணிகளின் வசதிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 13 மெட்ரோ ரயில் நிலையங்களில் உடனடி போக்குவரத்து அட்டை வழங்கும் இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகளின் வசதியை மேம்படுத்தும் வகையில், ஏஜிஎஸ் டிரான்சாக்ட் டெக்னாலஜி (AGS Transact Technologies) நிறுவனத்தின் டிஜிட்டல் கட்டண தளமான ஆன்கோ உடன் இணைந்து, 13 தேர்ந்தெடுக்கப்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் உடனடி போக்குவரத்து அட்டைகளை வழங்கும் இயந்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முயற்சி மெட்ரோ ரயில் பயணிகளுக்கு இடையூறு இல்லாத மற்றும் விரைவாக பயணச்சீட்டு வழங்குவதை நோக்கமாகக் கொண்டதாகும்.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள உடனடி போக்குவரத்து அட்டைகளை பயணிகள் நந்தனம், கோயம்பேடு, கிண்டி, ஆயிரம் விளக்கு, அரசினர் தோட்டம், எழும்பூர், புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ நிலையம், திருமங்கலம், உயர் நீதிமன்றம், காலடிப்பேட்டை, அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ, வடபழனி மற்றும் விமான நிலையம் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் நிறுவப்பட்டுள்ள விற்பனை இயந்திரங்கள் மூலம் கேஒய்சி (KYC) சரிபார்ப்பு இல்லாமல் எளிதாக பெற்றுக்கொள்ளலாம்.

மெட்ரோ ரயில் நிலையங்களில் நிறுவப்பட்டுள்ள இயந்திரங்களில் பயணிகள் யுபிஐ மூலம் பணம் செலுத்தி, எளிதாக உடனடி போக்குவரத்து அட்டையை பெற்றுக்கொள்ளலாம். ஒவ்வொரு உடனடி போக்குவரத்து அட்டையிலும் ரூ.50 முன்பணம் வைக்கப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் தங்களது மொபைலில் ஆன்கோ செயலி மூலம் அல்லது சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு விற்பனை செய்யும் இடங்களில் உடனடி போக்குவரத்து அட்டைகளை எளிதாக ரீசார்ஜ் செய்துக்கொள்ளலாம்.

சிங்கார சென்னை அட்டைகள் நடைமுறையில் உள்ள நிலையில் ஆன்கோ ரைட் அட்டைகளும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. பயணிகள் உடனடி போக்குவரத்து அட்டைகளை மெட்ரோ, மெட்ரோ வாகன நிறுத்தம் போன்ற வசதிகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். கடந்த 12ம் தேதி நிலவரப்படி, மொத்தம் 3.36 லட்சம் சிங்கார சென்னை அட்டைகள் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ளன. இதனை நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தில், உடனடி போக்குவரத்து அட்டை விற்பனை செய்யும் இயந்திரத்தை இயக்குநர் சித்திக் அறிமுகப்படுத்தியுள்ளார்.

இந்நிகழ்வில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர்கள் ராஜேஷ் சதுர்வேதி, அர்ச்சுனன், ஏஜிஎஸ் டிரான்சாக்ட் டெக்னாலஜி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் விநாயக் கோயல், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் ஆன்கோ நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

The post 13 மெட்ரோ ரயில் நிலையங்களில் போக்குவரத்து அட்டை வழங்கும் இயந்திரம் அறிமுகம் appeared first on Dinakaran.

Related Stories: