லட்சங்களில் வருவாய் முருங்கையில் சாத்தியம்: அசத்தும் வேளாண் மங்கை

மண் காப்போம் ஸ்டார்ட்-அப் விழாவில் தன் வெற்றி பார்முலாவை பகிரும் சாதனை பெண்மணி பொன்னரசி

நவீன தொழில் வாழ்கையுடன் போட்டி போடும் திறன் விவசாயத்திற்கு இல்லை என்கிற பொதுவான கருத்தை உடைக்கும் விதமாக இன்று விவசாயிகள் பலர் தொழில் முனைவோர்களாக உருவாகி வருகிறார்கள். நவீன தொழில்நுட்பத்திற்கும், அதி நவீன வாழ்வியலுக்கும் ஈடுகொடுக்கும் தன்மையும், நெகிழ்வும் விவசாயத்திற்கு எப்போதுமே உண்டு. இவை வெறும் வார்த்தைகளாக இல்லாமல் அதை நிஜத்தில் சாதித்து காட்டியிருக்கிறார் திண்டுக்கல் விவசாயி திருமதி. பொன்னரசி

பத்து ஆண்டுகளுக்கு முன்பு இயற்கை விவசாயத்தை இவர் தொடங்கியிருக்கிறார். அதற்கு முன்பு வரை ரசாயன விவசாயம் தான். அப்போது எதிர்பாரா விதமாக இவருடைய குடும்பத்தில் ஒருவர் அந்த ரசாயனத்தை உண்டு உயிரிழந்துள்ளார். இரசாயனத்தின் பாதிப்பு மனித வாழ்விலும் இயற்கை சூழலிலும் ஏற்படுத்தும் பாதிப்பை உணர்ந்து அதிலிருந்து வெளியேறி இன்று வெற்றிகரமாக இயற்கை விவசாயம் செய்கிறார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆர்.வெள்ளோடு கிராமத்தில் அமைந்துள்ளது இவரின் இயற்கை பண்ணை. 30 ஏக்கர் நிலத்தில் 15 ஏக்கரில் முருங்கையும் மீதமிருக்கும் 15 ஏக்கரில் கால்நடை பராமரிப்பு செய்து வருகிறார். மேலும் வீட்டிற்கு தேவையான காய்கறிகளை விளைவிக்கிறார். தண்ணீர் தட்டுபாடு உள்ள ஒரு நிலத்தில் தன் விவசாய வாழ்வை தொடங்கி இன்று வருடம் 15 லட்சம் வருவாய் பார்க்கும் வேளாண் தொழில் முனைவோராக இவர் உயர்ந்தது எப்படி என அவரிடம் கேட்ட போது மிகுந்த உத்வேகத்துடன் பேச தொடங்கினார்..

“நான் 2011-இல் முருங்கை விவசாயத்தை தொடங்கினேன். ஒரு ஏக்கருக்கு 90 மரங்கள் வரை வைத்துள்ளேன். ஓர் ஏக்கருக்கு 2 டன் காய் வரை கிடைக்கும். ஆனால் வியாபாரிகள் என் மொத்த 15 ஏக்கருக்கு வெறும் ரூ.5,000/- மட்டுமே கொடுப்பதாக சொன்னார்கள். என் நான்கு பிள்ளைகளின் பள்ளி கட்டணத்திற்கு கூட அது போதாது என்பதால், அடுத்து என்ன செய்வது என்ற தேடல் உருவானது. இந்த முருங்கையை வாங்கி சென்று வியாபாரிகள் என்ன செய்வார்கள் என தேட ஆரம்பித்தேன். அப்போது தான் முருங்கையில் இருந்து எண்ணெய் எடுக்க முடியும் என்றும் அது ஒரு லிட்டர் ரூ.5,000/- வரை விற்க முடியும் என்றும் தெரிந்தது.

அதை குறித்து மேலும் அறிந்து கொண்டு முருங்கையிலிருந்து எண்ணெய் எடுத்து விற்பனை செய்ய ஆரம்பித்தோம். வெறும் ரூ.5,000/- கேட்ட இந்த நிலத்திலிருந்து எங்களால் ரூ.60,000/- எடுக்க முடிந்தது. என் குழந்தைகளின் ஓராண்டு பள்ளி கட்டணத்திற்கு தேவையான பணம் கிடைத்து. அதை தொடர்ந்து எங்கள் தேடல் மேலும் விரிந்தது, அரசின் உதவியோடு எங்கள் வேளாண் பொருட்களை பேக் செய்யவும், சந்தைப்படுத்தவும் தேவையான உதவிகள் பெற்றோம்.

அதை தொடர்ந்து முருங்கை கீரை விற்பது, முருங்கை இலையை பொடியாக்கி விற்பது, முருங்கை கட்டைகளை எரித்து அதன் சாம்பலை விற்பது, முருங்கையின் மூலம் அழகு சாதன பொருட்கள் தயாரிப்பது என தொடர்ந்து 30 வகையான பொருட்களுக்கு மேல் இன்று விற்பனை செய்கிறோம். அதுமட்டுமின்றி முருங்கையிலிருந்து கூடுதல் வருவாய் வரும் விதமாக முருங்கை மரத்தில் தேனி பெட்டிகளை வளர்க்கிறோம் இதன் மூலம் சுத்தமான தேனை விற்க முடிகிறது.

மேலும், எங்களிடம் நாட்டு மாடுகள் மற்றும் ஆடுகள் இருப்பதால் அதன் பாலை வைத்து நெய் காய்ச்சி விற்பனை செய்கிறோம். ஒரு சூழலில் எங்கள் காட்டிலிருந்து 20 ஆயிரம் வருவாய் வருவதே பெரிய விஷயமாக இருந்தது. ஆனால் இன்று வருடத்திற்கு 15 லட்சம் வருவாய் வருகிறது. எந்த கடனும் இன்றி வெற்றிகரமான தொழில் முனைவோராக வாழ்கிறோம். எங்கள் வாழ்வின் நோக்கம் நமக்காக விளையும் பொருளை நாம் உண்ண வேண்டும் அல்லது நாம் உண்ணும் பொருளை நாமே விளைவிக்க வேண்டும்.” என தன் கனவு மெய்ப்பட்ட பாதையை உற்சாகமாக சொன்னார்.

விவசாயத்தின் மூலம் கடன் உருவாகும் சூழல் வந்த போதும் கூட மதிப்புக்கூட்டல் என்ற ஒற்றை அம்சத்தை கையிலெடுத்து விவசாயத்தில் மகத்தான சாதனை புரிந்திருக்கிறார் திருமதி பொன்னரசி. இவரை போல இன்னும் பல வெற்றிகரமான விவசாயிகளும், சாதனை பெண்மணிகளும் அவர்களின் அனுபவங்களை ஒரே இடத்தில் பகிர்ந்து விவசாயம் சார்ந்த தொழில் துவங்க நினைக்கும் பலருக்கும் உத்வேகமும் நம்பிக்கையும் அளிக்கும் வகையில் ஈஷா மண் காப்போம் இயக்கம் கோவையில் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி மாபெரும் “அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா”வை நடத்துகிறது.

இதில் ஏராளமான வேளாண் வல்லுநர்கள், தொழில்முனைவோர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள். மேலும் இதில் வேளாண் பொருட்களை மதிப்புக் கூட்டுவது, பிராண்டிங், மார்க்கெட்டிங், ஏற்றுமதி செய்வது மற்றும் இதற்காக அரசு வழங்கும் உதவி திட்டங்கள் என்னென்ன என்பது உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் பற்றி பேச இருக்கிறார்கள். இத்திருவிழாவில் கலந்து கொள்ள விரும்புவோர் 83000 93777 என்ற எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

The post லட்சங்களில் வருவாய் முருங்கையில் சாத்தியம்: அசத்தும் வேளாண் மங்கை appeared first on Dinakaran.

Related Stories: